என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அதிசயங்களின் தொகுப்பல்ல வாழ்க்கை!
    X

    அதிசயங்களின் தொகுப்பல்ல வாழ்க்கை!

    • வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது வாழும் நெறியை ஒழுங்கமைத்துக் கொள்வது ஆகும்.
    • பள்ளித் தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பதற்காக இன்று எத்தனையோ பயிற்சி வகுப்புகள், பயிற்சி முறைகள் பெருகிவிட்டன.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் பெருத்த எதிர்பார்ப்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!" என்கிற பகவத் கீதை வாசகம் எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தால் பழமையானதோ, அவ்வளவுக்கு அவ்வளவு காலத்தால் புதுமையாகிப் பொருந்தி வருவதாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையைத் திட்டமிடுகிறோம். வள்ளுவர் கூறுவதுபோல 'ஒருபொழுதும் வாழ்வது அறியாதவர்கள், கோடிக்கும் மேற்பட்ட வகைகளில் திட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த நொடி நிகழப்போகும் வாழ்வியலின் வடிவமைப்பு, நம் கண்களுக்கும், சிந்தைக்கும் புலப்படாத புதிர்தான் என்றாலும் கருதிக் கொண்டேதான் இருக்கிறோம்!; கோடிக்கணக்கில் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம்!. ஒன்றிரண்டு வாய்த்தால் மகிழ்கிறோம்; நிறைகிறோம்! அல்லது முயற்சி தொடர்கிறோம்!. தோல்விகளில் முடிந்தாலும் துயரப்படவும் செய்கிறோம்!; தளராமல் திட்டமிடலைத் தொடரவும் செய்கிறோம்.

    ''எண்ணித் துணிக கருமம்!" எனும் வள்ளுவக் கட்டளை, ஒவ்வொரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நம்மைத் திட்டமிடச் சொல்கிறது. நொடிக் கணக்கில் தொடங்குகின்ற வாழ்க்கை, நாள் கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் நீண்டுகொண்டே போகிறது; செயல்களுக்கு ஏற்றாற்போல நிகழ்வுகளும் மாற மாற, நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல நாமும் நமது வாழ்வியல் திட்டமிடல்களையும் தகவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தகவமைத்தல் என்பது, ஏற்றவாறு பொருந்தும் படி மாற்றியமைத்துக் கொள்வது ஆகும். அது சரியான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டது.

    வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது வாழும் நெறியை ஒழுங்கமைத்துக் கொள்வது ஆகும். சமுதாயத்தின் சாதாரணக் குடிமகன் தொடங்கி, ஆளுகிற அரசாங்கம் வரை திட்டமிடுதல் என்பது மிக மிக அவசியமானது ஆகும். கடந்த காலத்தைக் கணக்கில் கொண்டு, நிகழ்காலத்தைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டே, எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்று திட்டமிட வேண்டும். நமது திட்டமிடல்கள், நமது கணிப்பை மெய்ப்பிப்பதாக இருக்க வேண்டும். திட்டமும் செயல்பாடும் கைகோர்த்து இணைந்து வெற்றியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால், அவை நடைமுறைக்கு ஏற்றவையாகவும், அறிவு பூர்வமானவையாகவும் நிச்சயம் இருக்க வேண்டும். எண்ணங்களில் நியாயமான எதிர்பார்ப்புகளே நிறைந்து பரவியிருந்தால், தேவையற்ற தோல்விகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நமக்குள் அன்றாடம் ஆயிரமாயிரம் கனவுகள்!; 'அவரைப்போல் ஆக வேண்டும்!; இவரைப்போல் ஆகவேண்டும்!; ஒரே நாளில் தொழில் தொடங்கி, அடுத்த நாளே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகி, அதற்கு அடுத்த நாளே வசதியாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, குடியேறி வாழவேண்டும்' என்று சர்வ சாதாரணமாகக் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் எப்போதும் கனவுகள் இலவசம்!; கனவுகளுக்குள் நுழைய நுழைவுக் கட்டணம் கிடையாது.

    ஆனால், 'பட்டுச் சட்டைக் கனவில், கட்டியிருக்கும் கோவணத்தையும் களவு கொடுத்துவிடும்' அவல நிலைக்கு ஆளாகி விடக்கூடாது. 'அவர் சாதாரணமாகத்தானே வாழ்க்கையைத் தொடங்கினார்!; அவரது வாழ்க்கையில் திடீரென அதிசயம் நிகழ்ந்து அவர் பல கோடிகளுக்கு அதிபதி ஆகவில்லையா?. இவர் மட்டும் என்னவாம்! தலைநகரத்துக்கு வரும்போது சட்டைப் பையில் கசங்கிய ஐந்து ரூபாய்த் தாளோடு வந்தவர் தானே? இன்றுமட்டும் எப்படி இத்தனை தொழில்களுக்கு அதிபதி ஆனார்?. அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயம், நமது வாழ்க்கையிலும் நடவாமலா போய்விடும்? எதிர்பார்த்துக் காத்திருப்போம்!' என்று அதிசயங்களையும், ராசிபலன்களையும், நேரம், காலங்களையும் நம்பிடும் விசித்திரப் பிறவிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். நமது முன்மாதிரிகள் எல்லாம் நம்மோடு பொருந்தக் கூடியவர்களாக இருந்தால், நிச்சயம் நமது எதிர்பார்ப்புகளெல்லாம் இயல்பாகவே நடந்து நம்மை இன்பத்துள் ஆட்படுத்தும்.

    வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக் கொள்பவர்கள், கடவுளைக்கூட இயற்கைத் துணையாகவே வழிபடுவார்கள்; தமது பேராசைகளுக்கும், அதிசய எதிர்பார்ப்புகளுக்கும் கடவுளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு சாதிக்க நினைக்க மாட்டார்கள். ஓர் இயல்பான பக்திக்கதை. ஒரு வனத்தில் முற்றும் துறந்த துறவி ஒருவர், தனது குடிசைக்கு வெளியே ஒரு கல்லில் அமர்ந்து தனது கிழிந்திருந்த வேட்டியை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில், அந்த வழியாக, ஆகாய மார்க்கமாக சிவனோடு உலாப் போய்க்கொண்டிருந்த பார்வதி தேவியின் கண்களில் அந்தக் காட்சி பட்டுவிட்டது. உடனே சிவனிடம், " சுவாமி! அதோ பாருங்கள்! பழுத்த சிவப்பழமாய் ஒரு துறவி, தனது குடிசையின் வாசலில் அமர்ந்திருக்கிறார்!. வாருங்கள்! அவர் முன்னால் சென்று அவருக்கு தரிசனம் தந்து, அவர் கேட்கும் வரங்களை அவருக்கு அளித்து வருவோம்!" என்று கூறி அழைத்தார்.

    சிவனோ, "தேவி! அந்தத் துறவி நாம் தரக்கூடிய வரங்களுக்கெல்லாம் மயங்குகிற ஆசாமி இல்லை!. போக வேண்டாம்!" என்று கூறினார். பார்வதியோ பிடிவாதமாக, நாம் சென்று அவர்முன் நின்று தரிசனம் தந்தே ஆக வேண்டும்; அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வரங்களை வழங்கியே ஆகவேண்டும்! என்று உறுதியாக அழைத்தார். வேறு வழியில்லாமல், சிவனும் ஒத்துக் கொண்டார். அந்தத் துறவியின் குடிசை வாசலுக்கு முன் இருவரும் போய் நின்றனர்.

    ஊசி, நூல்கொண்டு கிழிந்த வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்த துறவி, அவற்றை அப்படியே போட்டு விட்டு, அவர்களை வரவேற்றுக் குடிசைக்குள் அழைத்துச் சென்று அமரவைத்து, இருவருக்கும் நீர்மோர் கலந்து கொடுத்து உபசரித்தார். பிறகு, வெளியே வந்து கிழிந்த வேட்டியைத் தைக்கும் பணியைத் தொடர்ந்தார்.

    'என்ன இவர்? பார்வதி பரமசிவமே வந்திருக்கிறோம்! ஒரு ஆச்சரியமும் படாமல், ஒன்றுமே பேசாமல், மீண்டும் ஊசி, நூல் தைக்கப் போய் விட்டாரே!' என்பது போல் பார்வதி பரமசிவத்தைப் பார்த்தார்.

    பரமசிவமோ, 'நான்தான் ஏற்கனவே இங்கு வர வேண்டாம் என்று சொல்லித்தானே தடுத்தேன்!' என்பது போலப் பார்வதியைப் பார்த்தார். பார்வதி துறவியை விடுவதாயில்லை!, "என்ன துறவியாரே! எங்களிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை வரமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்!; வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்!" வலியப் போய்க் கேட்டார். துறவியோ, " தாயே! தங்களிருவரின் தரிசனமே போதும்!; வரம் வேண்டாம்!" என்று கூறிவிட்டார். 'இருந்தாலும் ஒரு வரமாவது கேளுங்கள்! வந்ததற்குத் தந்துவிட்டுப் போகிறோம்!' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பார்வதி தேவி.

    "சரி தாயே!, இந்த ஊசியின் பின்னே தொடர்ந்து நூல் செல்ல வேண்டும்! இந்த வரத்தை மட்டும் தாருங்கள்!" என்றார் துறவி. "அது இயல்பு தானே?. ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டால், ஊசியின் பின்னால்தானே நூல் போகும்?" துறவியிடம் கேட்டார் தேவி. "ஆம் தாயே! வாழ்க்கையில் நியதிப்படி ஒவ்வொருவரும் ஒழுக்கமாக வாழ்ந்தால், கிடைக்க வேண்டிய பலன் கிடைத்துத்தானே ஆகும்?. பிறகு எதற்கு வரம்?" நச்சென்று சொல்லி விட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் துறவி. ஆம்! அனுதினமும் கடமையை அதன் ஒழுங்கில் செய்யத் தொடங்கிவிட்டால் அதன் பலன் தாமாகவே நம்மைவந்து சேர்ந்துதானே ஆகும்?. பிறகு எதற்கு ஆச்சரியங்களுக்காகக் காத்திருக்க வேண்டும்?.

    வாழ்க்கை எப்போதும் அதற்கான ஒழுங்கமைவில் அது சென்றுகொண்டே இருக்கிறது; நாமும் நமது போக்கில், ஏறுக்குமாறான எண்ணங்கள் இல்லாமல் இயங்கத் தொடங்கிவிட்டால், நமக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் நமக்குக் கட்டாயம் கிடைத்தே ஆகும்.

    பள்ளித் தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பதற்காக இன்று எத்தனையோ பயிற்சி வகுப்புகள், பயிற்சி முறைகள் பெருகிவிட்டன; கேள்வி பதில்களைக் குறுக்கும் நெடுக்குமாக மனப்பாடம் செய்து தலைகீழ்ப் பாடமாக்கிக் கொண்டு திரியும் அதிமேதாவிக் குழந்தைகளும் உண்டு. ஆனாலும், பள்ளி மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஆகச்சிறந்த எளிய வழிமுறை ஒன்று உண்டு. அது என்னவென்றால் ஒரு சாதாரண மாணவனைப்போல நாள்தோறும் பள்ளிக்குத் தவறாமல் போவது; கவனத்தோடு பாடங்களைப் படிப்பது; வீட்டுக்கு வந்ததும் அன்றன்றைக்குப் பள்ளியில் படித்த பாடங்களைப் புரியும் படியாக ஒருமுறை படித்து உணர்ந்து, நெஞ்சத்தில் இறுத்தி வைப்பது!; இப்படிச் செய்தால், தேர்வு வரும் காலங்களில், அச்சமோ, மனப் பதற்றமோ எதுவுமின்றி இயல்பாகத் தேர்வை எதிர்கொண்டு முழு மதிப்பெண்களையும் இயல்பாகப் பெற்றுச் சாதனை புரியலாம்.

    வாழ்க்கையும் இப்படித்தான். திட்டமிடல் எப்பொழுதும் அவசியமானதுதான்; ஆனால் அது, நமது தகுதிக்கும் திறமைக்கும் அடங்கியதாக இருக்க வேண்டும். வருகிற பலன்களை அப்படியே இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்குத் தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் நேராமல் தவிர்த்து விடுகிறது. பெரும் கனவுகளோடும், பெரும் திட்டங்களோடும் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சிலர் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

    எதிர்காலம் கனவுமயமாகச் சிந்தையில் ஜொலித்தாலும், அது நிகழ்காலத்தில் வரும்போது நிஜமாக மட்டுமே காட்சி தருகிறது. கனவில் பார்த்த எதிர்காலம், நிஜத்தில் காணும் நிகழ்காலமாக மாறிடும்போது, எண்ணற்ற வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, நம்மை அதிரவைக்கவும் செய்கின்றது. பெரும்பெரும் அதிசயங்களையும், பெரும்பெரும் அற்புதங்களையும் எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு, சுனாமித் தாக்குதலாய் ஏமாற்றங்களின் தாக்குதல் அணிவரிசை கட்டத் தொடங்கி விடுகின்றன.

    ''எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

    அதிர வருவதோர் நோய்!"

    என்னும் திருக்குறள், செயல்களைத் திட்டமிடும்போதே பின் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் தெளிவாக எதிர்பார்த்திருக்கும் அறிவோடு செயல்படுவோர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய நோய்கள் அணுகுவதில்லை என்கிறது. ஆம் ! வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும், பலன் எப்படியும் மாறலாம்!. உலகின் சுழற்சியில் கீழது மேலாகும்! மேலது கீழாகும் தத்துவம் புரிந்து கொண்டால் வாழ்க்கையையே புரிந்து கொள்ளலாம்.

    வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஒரு சவால்தான். அவற்றை முறியடிக்கத் திட்டமிடுவதும் பெரும் சவால்தான். நிகழ்காலத்தில் நாம் சந்திக்கின்ற முடிவுகள், தீர்வுகள் நமது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தலாம் அல்லது ஏமாற்றலாம். எது எப்படி இருந்தாலும் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நிகழ்காலத்தை மகிழ்ச்சி மயமாக்கும். வாழ்க்கை வசந்த மயம்; அளவான எதிர்பார்ப்போடு, நலமான திட்டங்களோடு நமது வாழ்வியலை நகர்த்தத் தொடங்கினால், வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழாவிட்டாலும் நிச்சயம் ஆனந்தம் நிகழ்ந்திருக்கும்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×