என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சிறுநீரகப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
- உலக அளவில் தொற்று நோய்களின் வரிசையில் சிறுநீர்ப் பாதைத் தொற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
- உடல் அளவான எடையுடன் இருத்தல் வேண்டும்.
நம் உடலின் நலனுக்குச் சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் தேவையான ஒன்று. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ளன. இக்காலத்தில் உலக அளவில் சுமார் 850 மில்லியன் மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சிறுநீரகத்தின் செயல்பாடுகள், சிறுநீரக நோய், அதன் அறிகுறி, நோய் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது நன்று. அதன் பொருட்டே இது தொடர்பான தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்.
சிறுநீரகத்தின் பணிகள்:
நம் உடலில் வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் கழிவுகளை அகற்றி, நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
உடலில் உள்ள நீர் மற்றும் தாது உப்புகளின் அளவைச் சரியான விகிதத்தில் வைத்திருப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் டி-யைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் சிறுநீரகத்தின் பங்கு தேவையானது.
நம் இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்திருக்கிறது.
சிறுநீரகத்தைத் தாக்கும் நோய்கள்:
சிறுநீரகத்தைப் பாதிக்கும் பல நோய்களில் முதன்மையானவை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் அதிக உடல் பருமன் ஆகியவை ஆகும். தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுநிறை உறுப்பான சிறுநீரகங்கள் சீர்கெடுகின்றன.
மேலும், சிறுநீரகத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கும் நோய்கள் பல உள்ளன. அதில் குறிப்பிட்ட சில நோய்கள் குறித்துக் கீழே பார்க்கலாம்.
சிறுநீரக நீர்கட்டி நோய்:
வயது முதிர்ந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு வருவதற்கான மரபணு சார்ந்த மிக முதற்காரணம் பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் ஆகும். இந்த மரபணு நிலையால், சிறுநீரகங்களில் இருந்து நீர்க் கட்டிகள் உருவாகின்றன. நீர்க் கட்டிகள் என்பன நீர்மம் நிறைந்த வலிய கட்டிகள் ஆகும். படிப்படியாக இயல்பான சிறுநீரகத் திசுக்களுக்கு மாறாக இந்த நீர்க் கட்டிகள் வளர்வதால், பாதிக்கப்பட்ட நபருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு படிப்படியாக ஏற்படலாம்.
சிறுநீரகக் கற்கள்:
இக்காலத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி மிகுந்த வலியோடு வரும் நோயாளிகள் பலரைப் பார்க்க முடிகிறது. இந்தச் சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் ஆண்களுக்குத்தாம் அதிகம் வருகின்றன. அதற்காகப் பெண்களுக்கு வருவது இல்லை எனச் சொல்ல முடியாது. பெண்களும் இந்தச் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஆண்களில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத்தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது. அதாவது, சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு மற்றும் இரசாயன படிவங்கள் நாளடைவில் கற்களாக உருமாற்றம் பெறுகின்றன. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான இடுப்பு வலி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியா வலியை அனுபவிக்கின்றனர்.
இந்தச் சிறுநீரகக் கல் ஏற்பட முக்கிய காரணம் உணவில் அதிகமான உப்புச் சேர்த்துக்கொள்வது, உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன.
சிறுநீர்ப் பாதையில் கிருமிகளின் தாக்கம்:
உலக அளவில் தொற்று நோய்களின் வரிசையில் சிறுநீர்ப் பாதைத் தொற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பெரும்பாலான மக்கள் இந்தச் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்படுவதாக உலக நலவாழ்வு அமைப்பின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதில் குறிப்பாகப் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் பெண்களின் சிறுநீர்ப்பையில் இருந்து வெளியாகும் குழாய் சிறிதாகவும், யோனியின் துளைக்கு மிக அருகிலேயே இருப்பதும்தான். அதேபோல, உடலுறவு கொள்ளும்போது ஒருவருக்குச் சிறுநீர்த் தொற்று இருந்தால் அது அவரது இணையையும் பாதிக்கும்.
மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
வலி நீக்கியினால் வரும் சிறுநீரகநோய்:
இப்போதெல்லாம் நம்மில் பலர் தலைவலி, உடல்வலி என்றாலே மருந்துக் கடைகளுக்குச் சென்று வலி நீக்கி மாத்திரைகளை வாங்கி அடிக்கடி உட்கொள்வது உண்டு. வலி நீக்கி மாத்திரைகள் ஒரு மருந்துதான். அளவுக்கு அதிகமாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் வேலை செய்த பிறகு சிறுநீரகத்தால்தான் வெளியேற்றப்படுகிறது.
இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அதுவே சிறுநீரகத்தைத் தாக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பை "வலி நீக்கி நெப்ரோபதி" எனக்கூறுகிறோம்.
சிறுநீரகப் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்:
அடிவயிற்றின் பக்கவாட்டிலும் முதுகிலும் மெலிதான வலி, பசியின்மை, முகம் மற்றும் கால்களில் வீக்கம், அரிப்பு, குமட்டல் அல்லது வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், கழுத்து வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் நுரையுடன் வெளியேறுதல், அடர் அல்லது இளம் சிவப்பு நிறமுள்ள சிறுநீர், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீரகம் நலமாக உள்ளதா என்பதை மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள் வருடம் ஒருமுறையேனும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீர் ஆய்வு, ரத்த ஆய்வு, ரத்த அழுத்த ஆய்வு, வயிற்று ஊடுகதிர் ஆய்வு ஆகியவற்றை செய்து கொள்ளவேண்டும்.
சிறுநீரகத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
உடல் அளவான எடையுடன் இருத்தல் வேண்டும்.
இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பைக் குறைவாக உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வலி மாத்திரைகளை மருத்துவரின் கருத்துரை இன்றி எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
இவற்றை முறையாகச் செய்வதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
மருத்துவரின் கருத்துரைப்படியே தான் புரதச்சத்துள்ள உணவுகள், உப்பு மற்றும் தண்ணீரின் அளவுகள் இவற்றைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
கீரை வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவுக்கட்டுப்பாட்டைப்பின்பற்றவேண்டும். முடிந்தஅளவுஉடற்பயிற்சிகளை நாளும் செய்யவேண்டும்.
இப்படிச் செய்வதால் சிறுநீரக நோயாளிகள் டையாலைஸிஸ் (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்குத் தள்ளப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.






