என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 24
    X

    பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 24

    • நாம் அனைவரும் மனித குல நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டோம்.
    • ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டை பாதுகாத்து வருகின்றது.

    முந்தைய காலத்தில் இந்தியா என்ற பெயரில் முழுவதுமாக எந்தவொரு நாடும் கிடையாது.

    பாரத கண்டம் என்ற பெயரில் பல்வேறு குட்டி நாடுகள் இருந்து வந்தன. அந்தக் குட்டி நாடுகள் எவையும் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மண்டையை உடைப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தனர்.

    ஒருவரையொருவர் வெற்றிகொண்டு அதனை வீரப்பிரதாபமாகக் கொண்டாடி வந்தார்கள்.

    தங்கள் வெற்றியை, கடாரம் கொண்டான், கலிங்கம் வென்றான் என்று பரணி பாடிக் கொண்டாடினர்.

    ஆனால் நாம் இப்போது வாழ்ந்துவரும் சூழ்நிலை வேறு.

    அடுத்த நாட்டினைக் கைப்பற்றி அவர்களை அடிமை கொள்வதை இன்றைய காலகட்டத்தில் எவருமே அங்கீகரிப்பதில்லை.

    இலங்கை, பாகிஸ்தான் போன்றவை நம்மை ஒட்டியுள்ள குட்டி நாடுகள்.

    நாம் நினைத்தால், ஒரே நாளில் போரிட்டு அவைகளை நம் நாட்டோடு இணைத்துக் கொள்ள முடியும்.

    அப்படி இணைத்துக் கொண்டால் உலகிலுள்ளோர் என்ன கூறுவர்?

    இலங்கை வென்றான், பாகிஸ்தான் கொண்டான் என்று நம்மீது பரணி பாடி நம்மைப் போற்றுவார்களா?

    "அவர்கள் நாட்டை அவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதில் உனக்கு என்ன வந்தது? உன்னுடைய நாட்டை ஆட்சி செய்யும் உன்னுடைய வேலையை மட்டும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால் போதாதா?"

    - என்றுதான் கேட்பார்கள்.

    அந்த வகையில் பார்க்கும் போது, நாம் அனைவரும் மனித குல நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டோம்.

    நாம் முன்னேறிச் செல்ல இன்னும் ஓர் இலக்கு பாக்கியாக உள்ளது.

    அது என்ன?

    பக்கம் பக்கமாக பல்வேறு நாடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பக்கத்து பக்கத்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடுகளும் இருக்கும்.

    ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் தனது ஆட்சியையும் செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த எல்லைகள் அனைத்தும் எவ்வாறு உள்ளன?

    ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டை பாதுகாத்து வருகின்றது.

    திடீரென நாம் ஒரு நாள் நமது எல்லைக் கோட்டிற்கு அருகில் நமது ராணுவத்தைக் குவித்திடுவதாக வைத்துக் கொள்வோம்.

    என்ன ஆகும்?

    பக்கத்து நாட்டினரும் தங்கள் எல்லைக் கோட்டினருகில் போட்டி போட்டு ராணுவத்தைக் குவித்து விடுவார்கள்.

    இவ்வாறுதான் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைகளிலும் நடந்து வருகிறது. ஆயுதம் தாங்கிய ராணுவம் சோம்பேறித் தனமாக ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்குமா?

    ஒரு காரணமும் இல்லாமல் ராணுவத்தினரிடையே துப்பாக்கிச் சூடுகள் கூட ஏற்படலாம்.

    விளைவாக, நாடுகளுக்கிடையே தேவையற்ற போர்கள் கூட ஏற்பட்டுவிடலாம்.

    ஸ்ரீ பகவத்


    நீங்கள் ஏதாவது ஒரு நாட்டின் அதிபராக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

    உங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக நீங்கள் ஒரு பெரிய ராணுவத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    "இவ்வளவு பெரிய ராணுவத்தை எதற்காக வைத்துக் கொண்டுள்ளீர்கள்?" என்று உங்களிடம் எவராவது கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் ?

    "பக்கத்து நாடுகளைத் தாக்கி வெற்றி கொள்ள வைத்திருக்கிறோம்" என்று கூறுவீர்களா?

    "பிற நாடுகளிடமிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே இந்த ராணுவத்தை வைத்துக் கொண்டுள்ளோம்"

    என்றுதான் கூறுவீர்கள்.

    இப்படி நம்மை அறியாமலேயே நாம் ராணுவத்தை வைத்துப் பழகிவிட்டோம். உண்மையில் நம் எவருக்குமே ராணுவம் தேவைப்படவில்லை.

    ஆனால் ஒவ்வொரு நாட்டின் எல்லைக் கோடுகளை ஒட்டி இருநாடுகளும் தற்காலிகமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்திக் கொள்வதும் வாடிக்கையாகவே உள்ளது.

    ஐக்கிய நாடுகளின் சபை என ஒன்றை நாம் அனைத்து நாடுகளுமாகச் சேர்ந்து அமைத்துக் கொண்டுள்ளோம். அதுவும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு, இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?

    அதனை அந்த சர்வதேச அமைப்பிடம் விட்டு விட்டால் அவர்கள் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். அதன்பிறகு எல்லைகளின் பக்கமாக நமக்கு என்ன வேலை உள்ளது?

    எந்த வேலையுமே கிடையாது. அதனால் நமது முழு கவனத்தையும் உள்நாட்டினுள் திருப்பிக் கொள்ளலாம். சண்டை போடுவதற்காக உருவாக்கி வைத்துள்ள ராணுவத்தை நாம் என்ன செய்வது?

    ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டுமா?

    ராணுவத்தைக் கலைத்திடவே தேவை இல்லை. அழிக்கும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தை அப்படியே ஆக்கப் பணிகளுக்கு திருப்பி விட்டால் மட்டும் போதும்.

    புயல், மழை, பூகம்பம் என இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது நாம் என்ன செய்கிறோம்?

    ராணுவத்தினரின் உதவியோடு தான் மீட்புப் பணிகளில் ஈடுபடுகிறோம்.

    ராணுவம் முழுவதையும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே நாம் பயன்படுத்துவோமேயானால் என்ன ஆகும்?

    ஒரு ராணுவ வீரர், ஐந்து சராசரி மனிதர்களுக்கு சமமான பலம் உள்ளவர்.

    நாட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் ராணுவத்தினர் மட்டுமே பார்த்துக் கொண்டால் போதாதா?

    மற்றவர்கள் செய்ய எந்தவொரு வேலையுமே பாக்கி கிடையாது.

    சில நாடுகளில் ஆண்,பெண் என இருபாலரும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    அதனை எல்லா நாடுகளிலும் பின்பற்றலாம்.

    அந்த காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள்.

    சென்னை ரெயில் நிலையத்தில் திருநெல்வேலி செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று தயார் நிலையில் இருந்து கொண்டிருந்தது.

    சென்ட் வியாபாரி ஒருவர் ஜன்னல் பக்கமாக நின்று கொண்டு சென்ட் பாட்டிலைக் காட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    பெட்டியினுள் உட்கார்ந்திருந்த பயணி ஒருவர் சென்ட் பாட்டிலைக் வாங்க முன் வந்தார்.

    "வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சென்ட்" - என்று கூறிய வியாபாரி அந்த சென்ட் பாட்டிலின் விலையை நூறு ரூபாய் என நிர்ணயம் செய்தார்.

    வாங்க நினைத்தவர் விலையை குறைத்துக் கேட்டு பேரம் பேசினார்.

    கடைசியில் கம்பெனி விளம்பரத்துக்காக கொடுப்பதாகக் கூறி, சென்ட் பாட்டிலின் விலையை ஒரு ரூபாய் என முடிவு செய்தார்கள்.

    முதலில் சொன்னபடி பாட்டிலின் விலை நூறு ரூபாய். பேரம் பேசி முடித்த பிறகு பாட்டிலின் விலை ஒரு ரூபாய்.

    அதாவது ஒரு ரூபாய் விலையுள்ள பொருளுக்கு நூறு மடங்காக அந்த வியாபாரி விலை வைத்திருந்திருக்கிறார்.

    அவர்கள் பேரம் பேசி முடித்து சென்ட் பாட்டிலைக் கொடுத்த நிலையில் ரெயிலும் மெதுவாக நகர ஆரம்பித்துள்ளது.

    "ஒரு ரூபாய் நாணயத்தை ஜன்னல் வழியாக வீசிப் போடுங்கள். நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று வியாபாரி கேட்டுக் கொண்டார்.

    சென்ட் பாட்டிலை வாங்கியவரும் அவசரமாக தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஜன்னலுக்கு வெளியே போட்டார்.

    வெளியே வந்து விழுந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார் வியாபாரி.

    அது ஒரு காலணா நாணயம். அதன் அளவும் கிட்டத்தட்ட ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருக்கும்.

    நான்கு காலணா சேர்ந்தால் ஒரு அணா. பதினாறு ஒரு அணாக்கள் சேர்ந்ததுதான் ஒரு ரூபாய். அதாவது 64 காலணாக்கள் சேர்ந்தால் மட்டுமே ஒரு ரூபாய் ஆகும்.

    வியாபாரி அந்த காலணாவை எடுத்தபோதே ரெயிலும் ஓடிச்சென்று விட்டது.

    ஆனாலும் அந்த வியாபாரி, "கொண்ட

    முதலுக்கு நட்டமில்லை!" என்று கூறி அந்த நாணயத்தை தனது சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டார்.

    ஓர் உதாரணத்துக்காக ஒரு சென்ட் வியாபாரியைக் காட்டினோம்.

    இப்படி ஒரு சென்ட் வியாபாரி நம் எல்லோருக்குள்ளேயும் ஒளிந்து கொண்டு இருக்கின்றார்.

    "அடுத்தவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டாலும் தவறில்லை. எப்படி வேண்டுமானாலும் நாம் அவர்களை ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் நம்மை மட்டும் எவரும் ஏமாற்றக் கூடாது .

    நாம் நமது பதவியை பயன்படுத்தி எந்தவகையான ஊழல்களையும் செய்திடலாம். ஆனால் மற்றவர்கள் மட்டும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்". - இப்படிப்பட்ட மனநிலை இன்றளவும் பலரிடமும் சர்வ சாதாரணமாக உள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே போராட வேண்டியதுள்ளது.

    இத்தகைய ஒரு போராட்டகரமான வாழ்வியல் முறை இந்த சமுதாயத்திற்கு தேவைதானா?

    இவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் முயற்சியாகவே ராணுவத்தை மாற்றி அமைக்கும் அணுகுமுறையைப் பரிந்துரை செய்துள்ளோம்.

    இந்தப் பரிந்துரையை நாம் தான் முதன்முதலாக கூறியுள்ளோமா?

    பைபிள் வசனங்கள் நம்மையும் முந்திக்கொண்டு விட்டன.

    ஏசையா அத். 2

    1. -----

    2. -----

    3. -----

    4. அவர்கள் தங்களுடைய வாட்களையெல்லாம் உழவுக் கருவிகளாகவும், ஈட்டிகளை எல்லாம் அறுவடைக் கருவிகளாகவும் மாற்றிக் கொள்வார்கள். எந்தவொரு நாடும் பிற நாட்டுக்கு எதிராக வாளை உயர்த்தாது. இனி அவர்கள் ஒரு போதும் போர் செய்வதைக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாடும் பக்கத்து நாடுகளை, பகை நாடாகக் கருதாத நிலையில், தங்கள் நாட்டின் தன்னிறைவை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுமேயானால்,

    நமது மண்ணுலகமே விண்ணுலகமாக உயர்ந்துவிடும். எல்லா விதமான ஆக்கபூர்வமான பணிகள் அனைத்தையும் ராணுவமே பார்த்துக் கொண்ட நிலையில், நெருக்கடி எதுவுமே இல்லாமல் ஆனந்த வாழ்வை மட்டும் வாழ்வதைத் தவிர வேறு எந்த வேலையுமே நமக்குக் கிடையாது. நாம் நமது மனதளவிலும் சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டும்; செயல் அளவிலும் நெருக்கடி இல்லாமல் வாழ்ந்திட வேண்டும்.

    நாம் அனைவரும் மனதாலும் செயலாலும் நல்வாழ்க்கை வாழ்ந்திட நல்ல கருத்துகள் அனைத்தையும் நமக்குள் பகிர்ந்திடும் வகையில் சேலத்தை மையமாகக் கொண்டு ஸ்ரீபகவத்மிஷன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். ஆர்வம் உள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறோம். யூடியூபில், பகவத் பாதை என்பது எங்களது முகவரி. நல்லதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நாம் சந்திப்போம்.

    அனைவருக்கும் நன்றி; அனைவருக்கும் வணக்கம்.

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    Next Story
    ×