என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கடன் நல்லதா, கெட்டதா?- பணம் பெருக்கும் வழிமுறைகள்-5
- நமது செல்வச்செழிப்பின் அடையாளங்கள் என்று நாம் நம்புவதுதான் வேடிக்கை.
- கடனைக் கட்டத் தவறியவர்கள், ‘வாராக் கடனாளி’ என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்! செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் செலவுப் பழக்கம் முதல் தடை என்று பார்த்தோம். அடுத்ததாக வரும் கடன் பழக்கம் தடைக்கல்லா, படிக்கல்லா என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஏனெனில், பரமபத விளையாட்டில் பாம்புகளும், ஏணிகளும் இருப்பது போல் கடனிலும் நல்ல கடன், கெட்ட கடன் என்று இரண்டு வகை உண்டு. நீங்கள் வாங்கியிருப்பது எந்த வகை என்று பார்க்கலாம், வாருங்கள்.
கடன்கள் பலவிதம். பெற்றோர் வாங்கிய கடன், உற்றாருக்காக செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் பட்ட கடன், நலமாக வாழ விரும்பி வாங்கிய கடன், உடல் நலன் கெட்டதால் வாங்க நேர்ந்த கடன், தேவைக்கான கடன், ஆசைக்கான கடன் என்று சிறிதும், பெரிதுமாகக் கடன்கள் நம் வாழ்வில் விளையாடுகின்றன. வேகமாக மாறிவரும் வாழ்க்கைமுறைகளும், போனைத் தட்டினால் எளிதில் கிடைக்கும் கடன்களும் மக்கள் மனதில், "கடன் வாங்குவதில் தவறில்லை" என்ற எண்ணத்தை வளர்க்கின்றன.
கடன் வாங்குவது தவறில்லைதான். அம்பானி, அதானி கூட கடன் வாங்கி தான் தங்கள் சாம்ராஜ்யங்களைக் கட்டுகின்றனர். ஆனால் எங்கு கடன் வாங்குகிறோம், எதற்காக வாங்குகிறோம், என்ன வட்டி விகிதத்தில் வாங்குகிறோம் என்பது முக்கியம். கல்விக்கடன், வீடு வாங்கக் கடன், பிசினஸ் லோன் போன்றவை நல்ல கடன்கள். அவற்றுக்கு வட்டி கட்ட நேர்ந்தாலும், அவற்றில் இருந்து வருமானம் வரும் என்பதால் நாம் பொருளாதார ரீதியாக அடுத்தடுத்த படிகளுக்கு ஏற உதவும் ஏணிகளாக உள்ளன.
மேலும் இவை திட்டமிட்ட கடன்களாகவும் இருக்கும். எவ்வளவு தேவை, எப்போது தேவை, என்ன வட்டி விகிதம், எவ்வளவு வருடங்கள் கட்டவேண்டியிருக்கும், மாதா மாதம் கட்டவேண்டிய தொகை எவ்வளவு, நல்ல நிறுவனத்தில்தான் கடன் பெறுகிறோமா என்பது போன்ற விஷயங்களில் தெளிவு இருப்பதால் அவற்றைக் கட்டுவது எளிது.
ஆனால் கெட்ட கடன்கள் நம்மைக் கடன் வலையில் சிக்கவைத்து, நம் உழைப்பின் பலனை உறிஞ்ச ஆரம்பிக்கும். பொதுவாக இவற்றில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் இவை நமக்கு வருமானம் தரக்கூடிய சொத்து வகைகளை உருவாக்க உதவுவதில்லை. உதாரணமாக கீழ்வரும் கடன்களைக் காணுங்கள்:
பணம் சேர்த்து வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவது அந்தக் காலம். இப்போதோ, புதிதாகக் கட்டிய வீட்டுக்கு புதிய பொருட்களுடன்தான் போகவேண்டும் என்று மனைவி பிடிவாதம் பிடித்ததால் ஒரு நண்பர் வீடு வாங்கும் கடன் தவிர, பர்னிச்சர், டி.வி., கேஸ் ஸ்டவ் போன்ற புதிய பொருட்களுக்காகவும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கிறார்.
பள்ளி ஹோம் ஒர்க்குக்காக ஸ்மார்ட் போன் வாங்க விரும்பும் இளைய தலைமுறைக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் ஆண்ட்ராய்ட் போன் போதும்; ஆனால் நண்பர்களுக்குக் காட்டி மகிழும் ஆசையால் ஐம்பதாயிரம் ரூபாய் ஐபோன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். தங்கள் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது என்று எடுத்துக் கூறினால் பிள்ளைகள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்ற பயத்தில் கடன் வாங்கும் பெற்றோர்களும் உண்டு.
நண்பர் ஒருவர் படுக்கையறையின் நீள, அகலங்களை சரியாக அளந்து அதற்கு ஒரு டன் ஏ.சி. போதும் என்று முடிவு செய்து கடைக்குச் சென்றார். ஆனால் அங்கு கடைக்காரரின் பேச்சு சாதுர்யத்தாலும், கிரெடிட் கார்டில் பேலன்ஸ் இருந்ததாலும் ஒன்றரை டன் ஏ.சி.யுடன் வந்து சேர்ந்தார். கிரெடிட் கார்டுக்கு அதிகப் பணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு புறம்; மாதாமாதம் ஏ.சி.க்கு ஆகும் கரண்ட் பில் அதிகரிக்கும் பிரச்சினை இன்னொரு புறம்.
சுந்தரி ஜகதீசன்
ஒரு சுடிதார் வாங்கப் போய் மூன்றாக வாங்கிவந்தது, 24 இன்ச் டி.வி.க்கு பதில் 49 இன்ச் டி.வி. வாங்கியது என்று ஆரம்பித்த கிரெடிட் கார்ட் பழக்கம், திசை மாறி, உல்லாசப் பயணத்துக்குக் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குப் போவது, 5 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்கப் போய், வங்கியில் கடன் கிடைப்பதால் 8 லட்ச ரூபாய்க்கு கார் வாங்குவது என்று வளர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நமது செல்வச்செழிப்பின் அடையாளங்கள் என்று நாம் நம்புவதுதான் வேடிக்கை.
நடப்பு என்னவென்றால், சமீப காலங்களில் பலரும் வேலை இழந்துள்ளனர்; சிலருக்கு சம்பளம் ஏறவில்லை. ஆனால் பெட்ரோல், மின்சாரம், கல்வி, மருத்துவச் செலவுகள் என எல்லாமே பணவீக்கத்தால் விலையேற்றம் அடைந்துள்ளன. நோய்வாய்ப்பட்ட வயதான பெற்றோருக்கு, காலேஜ் பீஸ் கட்ட பணம் வேண்டி நிற்கும் மகனுக்கு, பேறு காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகளுக்கு என்று நடுத்தரக் குடும்பத்தின் பணத் தேவைகள் ஆயிரம். ஏற்கெனவே வாங்கிய கடனையும் திரும்பக் கட்டவேண்டிய அழுத்தம்; குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன்களை வாங்கிவிட்ட நிலையில் கிரெடிட் கார்ட், பர்சனல் லோன், ஆப்கள் தரும் கடன் என்று அதிக வட்டி விதிக்கும் கடன்களை வாங்கவேண்டிய சூழ்நிலை என்று பலதரப்பிலும் நெருக்கடி உண்டாவதில் கடன் கட்டுவதில் தடை ஏற்படுகிறது.
கடனைக் கட்டத் தவறியவர்கள், 'வாராக் கடனாளி' என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குப் பலவகையான கட்டணங்களும், பெனால்ட்டிகளும் விதிக்கப்படுகின்றன. வட்டி விகிதம் அதிகப்படுத்தப்படுகிறது. அவர்களது கிரெடிட் ஹிஸ்டரி பாதிப்படைந்து எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான நல்ல கடன்களைப் பெறுவதில் தடை ஏற்படுகிறது. நன்கு படித்தவர்களும், கடனை ஒழுங்காகக் கட்டிவிடவேண்டும் என்ற ஒழுக்கம் நிறைந்தவர்களும் கூட இந்தக் கடன் வலையில் இருந்து மீளும் வழிவகை தெரியாமல் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியிருக்கிறது. கிரெடிட் ஸ்கோர் பாதிப்படைவதால், குறைந்த வட்டியில் நல்ல நிறுவனங்கள் தரும் கடன் கிடைப்பதில்லை. மாறாக, கடன் முதலைகள் வலையில் விழும் பேராபத்து உண்டாகிறது.
மேலும், கடன் இ.எம்.ஐ.க்கள் நம் வருமானத்தை சேமிப்பின் பக்கம் போக விடாமல் செலவின் பக்கம் செலுத்துவதால் நம் பொருளாதார உயர்வு தடைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிரெடிட் கார்டில் வாங்குவது, இ.எம்.ஐ.யில் வாங்குவது போன்ற பழக்கங்கள்தான்.
நாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஏதாவது ஒரு கார்டை நம் தலையில் கட்டி விடுகின்றன. வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.5 சதவீதம் என்றால், 8 சதவீதத்துக்கு கிடைக்குமா என்று தேடும் நமக்கு, கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் மினிமம் 36 சதவீதம் என்று தெரிவதில்லை. ஏனெனில் கார்ட் கம்பெனிகள் அதை நாசுக்காக 3 சதவீதம் மாத வட்டி என்றே குறிப்பிடுகின்றன. நாம் தப்பித் தவறி கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் இருந்து வட்டி 45 சதவீதம். அது தவிர, பணம் கையாளும் கட்டணம் தனி.
ஒரு ஸ்வீட் வாய்ஸ் செல்பேசியில் வந்து "இனி உங்கள் லிமிட் ஒன்றரை லட்சம்!" என்று ஏதோ லாட்டரி பரிசு தருவது போல இன்பத் தேனை ஊற்றும். ஒன்றரை லட்சத்துக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றுதான் எண்ணம் ஓடுமே தவிர, அந்த ஒன்றரை லட்சத்தை எப்படித் திருப்பிக் கட்டப் போகிறோம் என்ற கவலை அப்போது தோன்றாது.
கிரெடிட் கார்டின் முக்கியக் கவர்ச்சி அம்சமே ப்ரீ கிரெடிட் எனப்படும் இலவசக் கடன்தான். அதாவது கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கி, 45-50 நாட்கள் கழித்து பணம் கட்டினால் போதும். ஆனால் ஒரு 7000 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிவிட்டால், உடனே "மொத்தமாகக் கட்ட வேண்டாம்; தவணை முறையில் கட்டுங்களேன்!" என்று ஒரு குறுஞ்செய்தி கண் சிமிட்டுகிறது. நாம் தவணைமுறைத் தேர்வை பதிவு செய்தவுடன் இலவசக்கடன் ரத்தாகி விடும். நம் சிபில் ஸ்கோரும் குறைந்துவிடும்.
"என்ன சொல்கிறீர்கள்? கிரெடிட் கார்ட் இல்லாத வாழ்க்கையா? நீங்கள் சொன்ன இலவசக்கடன் தவிர, சேரும்போது போனஸ், கேஷ் பேக் ஆபர்ஸ், நிறையப் பொருட்களுக்குத் தள்ளுபடி, ப்ரீ பாய்ண்ட்ஸ் என்று எத்தனை வசதிகள்! மேலும் நம் அரசாங்கமே "பணத்தை உபயோகிக்காதே! கார்டை உபயோகி" என்றுதானே வலியுறுத்துகிறது?" என்று நீங்கள் பொரிந்து தள்ளுவது புரிகிறது.
அரசாங்கம் சிபாரிசு செய்வது கிரெடிட் கார்ட் அல்ல; டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்ட், பே.டி.எம். கார்ட், ரூபே கார்ட் போன்ற பிளாஸ்டிக் பணம். இவற்றில் கிரெடிட் கார்ட் தவிர மற்றவை டெபிட் கார்டின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்பதால் அவற்றால் எந்த அபாயமும் இல்லை. மேலும் நமக்கு மனக் கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் நாம் கிரெடிட் கார்டையும் தாராளமாக உபயோகிக்கலாம்; அதில் லாபமும் சம்பாதிக்கலாம். கிரெடிட் கார்டை உபயோகிக்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்:
1. கிரெக்டிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.
2. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிடுங்கள்; தவணைமுறையைத் தேர்வு செய்யாதீர்கள்.
3. ஆன்லைனுக்கு ஒன்று, லோக்கல் பர்ச்சேசுக்கு ஒன்று என்று பல கார்டுகள் வைத்திருக்காதீர்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதோடு ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகிக் குழப்பும். அதிகபட்சம் ஒரு ஆட்-ஆன் (add-on) கார்ட் வைத்துக் கொள்ளுங்கள். அதற்குக் கட்டணம் கிடையாது.
4. பாயிண்ட்சுக்கு பொருட்கள் வாங்காமல், பணமாகக் கேட்டால் 10000 பாயிண்ட்களுக்கு ரூ. 2500 என்ற விகிதத்தில் உங்கள் கார்ட் அக்கவுண்டில் பணம் சேர்ந்து விடும்.
5. உங்கள் மாத வருமானத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமாக கார்ட் லிமிட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கஸ்டமர் சர்வீசுக்கு ஒரு போன் கால் மூலம் உங்கள் லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்யலாம்.
மேற்கண்ட 5 விதிகளில் நீங்கள் எத்தனையை கடைப்பிடிக்கிறீர்கள்? ஐந்தை யும் கடைப்பிடிக்க முடியுமா?
ஆல் த பெஸ்ட்!






