என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோட்ச்சார கால சர்ப்ப தோஷம்
    X

    கோட்ச்சார கால சர்ப்ப தோஷம்

    • பருவ நிலை மாறுபட்டு மழை பொழிவதற்கு பல்வேறு விதமான காரணிகள் உள்ளன.
    • தோஷம் ஒரு விதமான நெருடலை உலகிற்கு தந்து கொண்டு தான் இருக்கிறது.

    உலக இயக்கம் பருவநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம் ஆனால் மழை பொழிந்து வெப்பநிலை தணிந்து உள்ளது. அதாவது அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு மழைப் பொழிவால் குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இவ்வாறு பருவநிலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? கோடைகாலத்தில் இயல்புக்கு மாறாக தட்பவெப்ப நிலையில் மாறுபாடு ஏற்பட காரணம் என்ன?

    பொதுவாக இந்தியாவில் 4 விதமான பருவங்கள் உள்ளது.கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரை அதிக வெப்பநிலை நிலவும்.

    மழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலம். இலையுதிர் காலமான அக்டோபர் முதல் நவம்பர் வரை வெப்ப நிலை மெதுவாகக் குறைந்து குளிர் காலம் துவங்கும்.குளிர்காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அதிகமான பனி பொழியும்.

    ஆனால் தற்போது பருவ நிலை மாறுபட்டு மழை பொழிவதற்கு பல்வேறு விதமான காரணிகள் உள்ளன. எனினும் மிகக் குறிப்பாக கூறினால் மனிதர்கள் செயல்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இயற்கையான காரணமான புவியின் சுற்றுப்பாதை மற்றும் அதன் அச்சின் சாய்வு ஆகியவற்றின் மாற்றங்களால் பருவ நிலை மாறலாம்.

    அறிவியல் ரீதியான காரணத்தை உற்று நோக்கினால் நவகிரகங்களின் இயக்கமே உலகத்தையும் உலக மக்களையும் வழிநடத்துகிறது. தற்போது கோட்ச்சாரத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களின் பிடியில் அகப்பட்டு கால சர்ப்ப தோஷமாக வேலை செய்கிறது. இதில் 15 நாட்கள் நாள் கிரகமான சந்திரன் முழுமையாக ராகு கேதுவின் பிடியிலிருப்பார். அடுத்த 15 நாட்கள் ராகு கேதுக்களை விட்டு வெளியில் பயணிக்கும் காலத்தில் விடுபட்ட கால சர்ப்ப தோஷமான கிரக நிலவரம் உண்டாகும்.

    பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளி 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா ராசிகளையும் கடந்து செல்கின்றது. அதாவது இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது. இதை ஜோதிட பாணியில் லக்னம் என்று கூறுவார்கள். ஒருலக்னம் என்பது இரண்டு மணி நேரம். சூரியனின் நகர்வுக்கு ஏற்ப சூரிய ஒளியின் பயணமான லக்ன புள்ளி ராகு கேது அச்சிற்கு வெளியே பயணிக்கும்.

    அதாவது கன்னி ராசி முதல் மகர ராசி வரை ராசி மண்டலம் பூமியை சுற்றி வரும் போது லக்ன புள்ளி ராகு கேதுக்கு அச்சிற்கு வெளியில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு லக்ன புள்ளி வெளியில் இருக்கும். அது விடுபட்ட கால சர்ப்பதோஷமாக பலன் தரும். கோட்சாரமும் கால சர்ப்ப தோஷமும் கால சர்ப்ப தோஷத்திற்கும் உலக இயக்கத்தையே கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இந்த தோஷம் ஒரு விதமான நெருடலை உலகிற்கு தந்து கொண்டு தான் இருக்கிறது.

    2020-ம் ஆண்டில் அனைத்து கிரகங்களும் ராகு/கேதுவின் பிடியில் நின்ற காலங்களில் கொரோனா தாக்கத்தால் உலக இயக்கமே தடுமாறியதை நாம் அனைவரும் அறிந்ததே. இன்று வரை இயல்பு நிலை திரும்பிய பாடு இல்லை. உலக நாடுகளிடையே ஒற்றுமையின்மை, ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி, பொருளாதார மந்தம், இயற்கை சீற்றம், நோய் தாக்கம் என உலகமே அசாதாரண சூழ்நிலையில் தான் இயங்கி வருகிறது. மேலும் 6.6.2025 வரை கடக ராசியில் நீச்ச நிலையில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்து தனது எட்டாம் பார்வையால் சனி பகவானை பார்ப்பார்.

    ஐ.ஆனந்தி

    28.7.2025 அன்று சிம்ம ராசியில் இருந்து செவ்வாய் அகன்று கன்னி ராசிக்குள் நுழையும் பொழுது உலகம் கால சர்ப்ப தோஷப் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும். ஆனால் செவ்வாய் கன்னியை கடக்கும் வரை தனது ஏழாம் பார்வையால் மீன ராசியில் உள்ள சனிபகவானை பார்ப்பார். சனி, செவ்வாய் சம்பந்தம் கால சர்ப்ப தோஷ பாதிப்பு போன்ற காரணங்களால் 13.9.2025 வரை இயற்கையினால் கோச்சார கிரகங்களினால் மனிதர்களுக்கும் பூமிக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாம்.ஜோதிட சாஸ்த்திரத்தில் பல்வேறு விதமான தோஷங்கள் கூறப்பட்டு இருந்தாலும் சர்ப்ப தோஷம் அனைத்து தரப்பினருக்கும் ஒருவிதமான மன நெருடலை தந்து கொண்டு தான் இருக்கிறது.

    அதிலும் கால சர்ப்ப தோஷம் என்ற பெயரை கேட்டாலே பீதி கிளம்புகிறது. நவகிரகங்களில் வலிமையானவர்கள் ராகு/கேதுக்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு/கேதுக்கள் ஒரு முறை ராசிக் கட்டத்தை வலம் வர 18 ஆண்டுகளாகும். ஜனனம் முதல் இரண்டு முறை ராசிக் கட்டத்தை வலம் வந்த பிறகே தோஷம் நிவர்த்தியாகும். (18 x 2=36) 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது.

    கல்வி, திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிர்ஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர்களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை தாமதங்களையும் கால சர்ப்ப தோஷம் ஏற்படுத்தி மன நிமைதியை இழக்கச் செய்யும். 18 முதல் 36 ஆண்டு வரையான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதால் கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.

    பன்னிரண்டு ராசியினருக்கும் கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திப் பரிகார வழிபாட்டு முறைகளை பார்க்கலாம்.

    மேஷம்:

    ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஐந்தில் கேதுவும் உள்ளார்கள். பணபர ஸ்தானமான 5, 11-ல் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் போது அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள் தேடி வரும். மேன்மையான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மறைமுக வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும் வராக்கடன்கள் வசூல் ஆகும். இழந்த இன்பங்களை மீட்டெடுக்கக்கூடிய காலமாகும். வழக்குகள் சாதகமாகும்.

    பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். காதல் வெற்றி தரும். மறு திருமணம் முயற்சி வெற்றி தரும். குழந்தைகளால் சில பிரச்சினைகள் தலைதூக்கும். அரச மரத்தடியில் இருக்கும் எறும்பு புற்றுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த நொய்யரிசியிட வெகு விரைவில் மாற்றம் தெரியும்.

    ரிஷபம்:

    ராசிக்கு பத்தில் ராகு நான்கில் கேது இருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. இப்போது பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரலாம். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். அதற்குத் தேவையான நிதியும் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். ஆனால் நான்காம் இடத்தில் கேது இருப்பதால் சிறு சிறு அசவுகரியங்கள் உருவாகும். குறிப்பாக தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு, வீடு, வாகன பழுது போன்ற இடர்கள் வரலாம். இன்னல்களை தவிர்க்க நதிக்கரை அல்லது, குளக்கரையில் உள்ள சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் உள்ள லிங்கத்தை வழிபடவும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்கு ஒன்பதில் ராகுவும் மூன்றில் கேதுவும் நிற்கிறார்கள். தந்தையைப் பற்றி கூறும் ஒன்பதாம் இடமான பித்ரு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கம்பீரமும் கொள்கை பிடிப்பு பிறருக்கு உதவும் குணமும் அதிகமாகும். எதற்கும் கையேந்தி நிற்க மாட்டீர்கள். தந்தை வழி உறவு முறைகளை அனுசரித்து செல்ல வேண்டும். கடவுள் நம்பிக்கை, ஆன்மீக நாட்டம் அதிகமாகும். பூர்வீகத்தில் சென்று வாழும் விருப்பம் கூடும். இந்த அமைப்பு வெளியூர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு, இடப்பெயர்ச்சி, வேலையாட்களால் பயனற்ற நிலை, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை போன்ற மன சஞ்சலத்தை தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம்.

    கடகம்:

    ராசிக்கு எட்டில் ராகு இரண்டில் கேது இருக்கிறார்கள். 2, 8-ம் மிடங்கள் பண பர ஸ்தானம். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். விபரீத ராஜயோகம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து, காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கலாம். வரா கடன்கள் வசூலாகும். பணவரவில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். இது கோட்ச்சார ரீதியான சர்ப தோஷ அமைப்பு என்பதால் திருமணத்தடை உருவாகும். பேச்சால் சம்பந்தம் இல்லாத வம்பு, வழக்கு வரலாம். முறையான சர்ப்ப தோஷ சாந்தி பரிகார வழிபாடு திருமண தடையை அகற்றும். அரசமரத்தின் அடியில் இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு இருக்கும் சர்ப்ப சிலையை வழிபட வேண்டும்.

    சிம்மம்

    ராசியில் கேது ஏழில் ராகு இருக்கிறார்கள். ஜென்ம ராசியில் கேது வரும் போது மனக்குழப்பம் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். ஏழாம் இடத்தில் ராகு இருப்பது காதல் திருமண நாட்டத்தை ஏற்படுத்தும். லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். விலகியவர்கள் சேர்ந்து வாழ விரும்புவார்கள். சிலர் மிகுதியான ஆன்மீக நாட்டத்தால் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். கணவன் மனைவி கருத்து வேறுபாடு, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வீண் விரோதம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எதிர் பாலினத்தவரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணம் முயற்சியில் கவனம் தேவை. சிவன் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடவும்.

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகாரர்களுக்கு கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார வழிபாட்டு முைறகளை இன்று பார்தோம். அடுத்த வாரம் கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்க்கலாம்.

    -தொடரும்

    செல்: 98652 20406

    Next Story
    ×