என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சண்முகர் சிலையை கடத்தி சென்ற டச்சுக்காரர்கள்!
- காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவும் இருந்தது.
- டச்சுக்காரர்கள் குழப்பமும், நடுக்கமும் அடைந்தனர்.
17-ம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த ஒரு வியப்பூட்டும் நிகழ்ச்சி செந்திலாண்டவனின் பேராற்றல் பெருமையை விளக்குவதாக உள்ளது. அந்தச் சமயத்தில் மதுரையில் இருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி நடத்தி வந்தனர். டச்சுக்காரர்கள் வணிகர்களாக நமது நாட்டுக்கு வந்திருந்த காலம் அது.
திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்] அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். திருமலை நாயக்கருக்கு கப்பல் படை இல்லாததால் தலைநகரமான மதுரையில் இருந்து தென்கோடியை அவரது ராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வைக்க இயலாமல் போனது.
இதன் காரணமாக தமிழக தென்கோடி கடலோரப் பகுதிகளில் அந்நியரின் வருகையும் மதமும் வேறூன்ற ஆரம்பித்தது. கப்பல் வலிமையுடன் இருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களும் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக் கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.
கொற்கை பகுதியான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும், சங்குகளும், கடற்கரை ஓரத்தில் இருந்த கோவில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் வெளிநாட்டுக் கொள்ளையர்களின் இலக்குகளாக இருந்தன.
கி.பி.1635-ல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலை நாயக்கருடன் நட்புடன் இருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலை நாயக்க மன்னர் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் திருமலைக்கும் ராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும், படை உதவியாலும் திருமலை நாயக்கர் வெற்றி பெற்றார். இந்த உதவியின் எதிரொலியே திருமலை நாயக்க மன்னன் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் இருக்கச் செய்தது.
எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்களும் பிற மக்களும் பல இன்னல்களை அனுபவித்தனர். காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவும் இருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது. டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர். கி.பி.1648-ல் போர்ச்சுக்கீசியர்களுக்கு ஆதரவான திருமலை நாயக்கர் டச்சுக்காரர்களை காயல்பட்டினத்தில் இருந்து வெளியேறச் செய்தார்.
இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்ததாக நினைத்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றினார்கள். அத்துடன் அங்கிருந்த அப்பாவி இந்துக்களின் வீடுகளை கொள்ளையடித்தனர். வீடுகளுக்குத் தீயிட்டனர். தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர். கடற்கரைக் கோவிலின் பாறைக் குகை வரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து எறிந்தனர். கற்சிற்பங்களை உடைத்தனர்.
அங்கிருந்த எழில் மிகு ஐம்ெபான் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோவில், வெயிலுகந்தம்மன் கோவில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.
தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர். வேதங்கள் ஓதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர். திரிசுதந்திரர்கள் உட்பட உள்ளூர் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதனால் திருச்செந்தூர் பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கி சென்றனர்.
நாயக்க மன்னர்களிடமோ கப்பற்படை கிடையாது. ஆகவே டச்சுக்காரர்களைத் துரத்திச் சென்று சிலையை மீட்க அவர்களால் முடியவில்லை. "கார்த்திகேயா, கந்தா, கடம்பா, சூரனை வென்றழித்த வெற்றி வேலா, எங்கள் உள்ளத் தவிப்பினை உணர்ந்து அநியாயக்காரர்களைத் தண்டித்தருளக் கூடாதா?" எனப் பக்த கோடிகள் கண்ணீர் மல்கக் கசிந்துருகி வேண்டிக் கொண்டார்கள்.
டச்சுக்காரர்களின் கப்பல், கடலில் திருச்செந்தூர் எல்லையைக் கடந்து செல்லுவதற்கு முன்னால் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் அலைகள் வானுயர எழுந்து சுழன்று கப்பலைத் தாக்கி நிலை குலையச் செய்தன. கப்பல் நிச்சயமாக மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது. டச்சுக்காரர்கள் குழப்பமும், நடுக்கமும் அடைந்தனர்.
திருச்செந்தூர் வேலவனின் திருஉருவச் சிலையைத் திருடிச் செல்வதற்காகச் செந்தி லாண்டவன் தரும் தண்டனைதான் அந்தக் கடல் கொந்தளிப்பு என்பதை உணர்ந்து கொண்ட டச்சுக்காரர்கள் செந்தில் வேலனின் தெய்வச் சிலையைக் கடல் நீரில் வீசியெறிந்து விட்டனர். அடுத்த கணமே கடல் கொந்தளிப்பு அடங்கிக் கடல் நீர் அமைதிப்பட்டு விட்டது. (இந்தத் தகவல் கதையோ, கற்பனையோ அல்ல.
பிரெஞ்சு நாட்டு நூலாசிரியரான எம்: ரென்னல் என்பார் எழுதி 1785-ம் ஆண்டில் ஜெர்மனியின் தலைநகரமாக இருந்த பெர்லினில் இருந்து வெளியிடப் பெற்ற 'வரலாற்று இந்தியா' என்ற நூலில் இந்தத் தகவல் இருப்பதாக இன்றைய வரலாற்று ஆய்வாளர் பலர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
டச்சு மாலுமி ஒருவரிடமிருந்து அந்தத் தகவலைப் பெற்றதாக அந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறாராம்.)
கடல் கொந்தளிப்பு அடங்கியதும் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோவிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக் கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.
கடலாழத்தில் கிடக்கும் முருகப் பெருமானின் திருவுருவச் சிலையை எவ்வாறு வெளிக் கொணருவது என்று விளங்காமல் நாயக்க மன்னர் திகைத்தார்.
ஐந்தாண்டுக் காலம் வரை ஆலயத்தில் ஐயனின் திரு உருவச் சிலை இல்லாமலே இருந்தது.
மன்னரின் செயலாளராக இருந்த வடமலையப்ப பிள்ளை என்பவர் ஆறுமுகக் கடவுளின் திருஉருவமில்லாது வெறுமையாகக் கிடந்த ஆலயத்தின் நிலையினைக் காணப் பொறுக்காது தமது சொந்த முயற்சியினால் திருமுருகன் உருவச் சிலை ஒன்றை உருவாக்க முயன்றார். அப்போது ஒருநாள் இரவு கந்த வேலர் வடமலையப்ப பிள்ளையின் கனவிலே தோன்றினார்.
அவர் திருச்செந்தூர் அருகே கடலில் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் என்றும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறி மறைந்தார்.
இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த வடமலைப் பிள்ளை மறுநாள் காலை தம்முடைய பணியாளர்கள், நண்பர்கள், கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடலுக்குள் படகில் சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பி வணங்கினர். அங்கே எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்தது.
அந்த இடத்தில் கடலில் குதித்தனர், என்னே அற்புதம் சண்முகர்சிலையும், நடராஜர் சிலையும் கிடைத்தது. நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று எழுதப்பட்டிருந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்றது. டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலை நாயக்கர் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்குப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக் கொடுத்தனுப்பி மீட்டார்.
ஆறுமுகரின் சிலை மீட்கப்பட்ட நாள் கொல்லம் 892-ம் ஆண்டு தை மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை. ஆங்கில ஆண்டு கணக்குப்படி கி.பி.
1653-ம் ஆண்டு என்று திருச்செந்தூர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டச்சு நாட்டு கொள்ளையர்களால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட, வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகர் சிலையில், முகத்தில் சில தழும்புகளை இன்றும் நாம் பார்க்கலாம். கொள்ளையர்கள் சிலையை கடலில் வீசிய போது கடல் மீன்கள் கடித்ததில் இந்த தழும்பு ஏற்பட்டது என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.
மூலவர் சிலையை டச்சுக்காரர்கள் கடத்தி சென்றதால் திருச்செந்தூர் கோவிலில் கி.பி.1649-ம் ஆண்டில் இருந்து கி.பி.1651-ம் ஆண்டு வரை நாள் வழிபாடும் திருவிழாக்களும் இல்லாமல் போயின. இக்காலத்தைப் பற்றி தலபுராணம் பாடிய வென்றி மாலைக் கவிராயர் பாடியுள்ள பாடலின் அடிகள் வருமாறு:-
"சந்திரனில்லாத வானம் போலவும், சைவ நெறியில்லா வையகம் போலவும், ஐந்தறிவுடைய இந்திரனில்லாத அண்டர்பதி போலவு..."
மேற்கண்ட பாடலில் கோவிலில் திருவுருவங்கள் இல்லாமல் இருந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.
உலாந்தர் எனப்படும் டச்சுக்காரர்கள் இக்கோவிலின் சிலைகளை கி.பி.1649-ம் ஆண்டு கவர்ந்து சென்றனர். கி.பி.1651-ம் ஆண்டு சிலைகளை மீண்டும் பெற்றதால் வழிபாடு மீண்டும் தொடங்கியது.
அந்நிகழ்ச்சி பற்றிப் பல நூல்கள் குறிப்பிட்டாலும் 1. திருநெல்வேலிக் கெசட்டு, 2. திருச்செந்தூர் (தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்),
3. திருச்செந்தூர் வள்ளி மணவாளன் கோவில் வரலாறு (ச.முத்துக்குமாரசாமி), 4. செந்தி லாண்டவன் மகிமை (டி.எச்.விவேகானந்தம்),
5. திருச்செந்தூர் கோவிலில் செந்திக்காத்தான் செட்டி குடும்ப வரலாறு (குலசேகரப்பட்டின ஏடு) 6. க.அ.நீலகண்ட சாத்திரியின் கட்டுரை (கலைமகள் தொகுதி 16) ஆகிய 6 பதிவுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
அ.க.நீலகண்ட சாஸ்திரி திருமலை நாயக்கரும் ஐரோப்பியரும்" என்ற தலைப்பில் கலை மகளில் எழுதிய கட்டுரையில் கூறுவதாவது:-
கி.பி. 1645-ல் உலாந்தர் காயல்பட்டினத்தில் தங்கினர். பரங்கியர் (போர்ச்சு கீசியர்) உலாந்தர் தோணிகளைப் பிடித்துச் சரக்குகளை அபகரித்தனர். நாயக்கரும் உலாந்தர்களைக் காயல்பட்டினத்தினின்றும் ஒழித்து விடும்படி கட்டளையிட்டார். கி.பி. 1648-ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு ஓடினர்.
கி.பி. 1649 பிப்ரவரியில் 436 ஐரோப்பியர் 180 சிங்களவரோடு 6-ந்தேதி மணப்பாரின் (மணப்பாடு ஊரிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ளது) எதிரில் வந்தனர். 8-ந்தேதி புறப்பட்டு வீராம்பட்டினத்திற்கும் (இக்கோவிலில் இருந்து கடற்கரையில் ஒரு கல் தொலைவில் உள்ளது) திருச்செந்தூருக்கும் இடையே இறங்கினர். 20-ந்தேதி திருச்செந்தூர்க் கோவிலில் தங்கினர். 22-ந்தேதி நாயக்கர் சார்பாகக் காயல்பட்டினத்து மனிதர் வந்து கோயிலை விட்டுக் காலி செய்ய வேண்டினர். ஊரில் உள்ள ஜனங்கள் 4 யானை, 50, 60 குதிரை 500 ஆட்களோடு 25-ந்தேதி சண்டையிட்டனர்.
நாயக்கர் பட்டாளத்தில் சுமார் 300 பேர் மாய்ந்தனர். உலாந்தர் படைகளில் 3 பேர் (சிங்களவர்) கொல்லப்பட்டனர். 28-ந்தேதி இலங்கை திரும்ப எண்ணினர். மார்ச் 1-ல் நாயக்கர் நஷ்ட ஈடு செய்தவுடன் கோவிலை ஒரு பங்கமுமின்றித் திரும்பக் கொடுப்பதாகவும் எழுதினார். டச்சுக் கவர்னர். புறப்படும் போது கற்சிலையான மூலவிக்கிரக உள்படக் கோவிலில் உள்ள விக்கிர கங்கள் எல்லாவற்றையும் தமக்குச் சேர வேண்டிய பணத்திற்குப் பணயமாகத் தம்முடன் கப்பலில் எடுத்துச் சென்றார். சிலைகளை மீட்ட தகவல்கள் திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.
கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போட வைத்ததும், சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் திருச்செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும்.
இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.






