என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... மீண்டு எழ வைத்த 'மீனா-40'
- கடின உழைப்பு வீண் போகாது என்பார்கள்.
- குழந்தை பருவத்திலேயே சினிமாவுக்குள் வந்ததால் உனது சின்ன சின்ன ஆசைகளை கூட தியாகம் செய்து இருப்பாய்.
கீழே விழுந்து விட்டால் எழுந்துதானே ஆக வேண்டும். அதே நிலமையில் தான் அப்போது நான் இருந்தேன். எதிர்பாராத பேரிழப்பு.
மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து என்னை மீண்டும் பழைய மீனாவாக பார்க்க ஆசைப்பட்டவர்கள் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நட்பு வட்டாரங்கள்தான்.
அவர்கள்தான் அடிக்கடி சொன்னார்கள் "நீங்கள் மீண்டும் கலைத்துறைக்குள் வாருங்கள். அப்போதுதான் கவலைகளில் இருந்து விலகி மனம் இயல்பு நிலைக்கு வரும்" என்று.
அப்படித்தான் மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க புறப்பட்டேன். 'சூப்பர் அம்மையும் மகளும்' என்ற மலையாள தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினேன். அதே போல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஜோடி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தேன்.
அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் போட்டியாளர்களின் ஆடல் மற்றும் நடிப்பு திறன்களை பார்த்த ேபாது மனம் லேசாகியது. நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கியது.
அந்த நேரத்தில்தான் 'மீனா-40' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கலா மாஸ்டர் என்னிடம் கூறினார். கலைத்துறையில் 40 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் ஹீரோயின் என்பதை பாராட்டும் வகையில் அந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்வதாக கூறினார்கள். அதை ஒத்துக் கொள்ள ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் என்னை விட சீனியர்கள் பலர் இருக்கும் போது எனக்கு பாராட்டு விழா என்றால் சரியாக இருக்குமா? என்று யோசித்தேன்.
எனது தயக்கத்தையும் கலா மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர் தந்த விளக்கம், நீ யோசிப்பது சரிதான். ஆனால் அவர்கள் எல்லாம் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகி இருப்பார்கள். அதிலும் சிலர் திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகளை இழந்து இருப்பார்கள் அல்லது அம்மா, அத்தை என்று வெவ்வேறு ரோல்களுக்கு மாறியிருப்பார்கள். ஆனால் நீ அப்படி இல்லை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் வந்தாய். அதன் பிறகு கதாநாயகி ஆகி இன்று வரை தொடர்ந்து கதாநாயகியாகவே இருந்து கொண்டிருக்கிறாய். இது சாதாரண விசயமல்ல.
அது மட்டுமல்ல நடிகை என்றால் பேரு... புகழ்... பணம்.. என்ற பார்வை மட்டுமே இருக்கும். ஆனால் நீ குழந்தை பருவத்திலேயே சினிமாவுக்குள் வந்ததால் உனது சின்ன சின்ன ஆசைகளை கூட தியாகம் செய்து இருப்பாய். சாதாரண பெண்களை போல் ஒரு கடைத்தெருவுக்கு அல்லது ஏதாவது விரும்பிய பொருட்களை வாங்க கடைகளுக்கு இதுவரை உன்னால் போக முடிந்ததா?
தெருவில் வர முடியாது. ஆசையாய் சைக்கிள் கூட ஓட்ட முடியாது. இப்படி எவ்வளவோ விசயங்களை சினிமாவுக்காக விட்டுக் கொடுத்து இருப்பாய்.
இதையெல்லாம் வெளியே சொன்னால்தான் 'ஓ... சினிமாவில் இவ்வளவு இருக்கா....? என்று மற்றவர்களும் யோசிப்பார்கள். எத்தனையோ பேர் 'இன்ஸ்பயர்' ஆவார்கள். இதை வெறும் பாராட்டு விழாவாக மட்டும் நினைக்காதே. திரைப்படங்களை போல் இதுவும் சமூகத்துக்கு நீ சொல்லப்போகும் பாடம் என்பதை புரிந்து கொள் என்றார். இது அவர் கொடுத்த விளக்கமாக இருந்தாலும் அதையும் தாண்டி கவலைகளின் பிடியில் இருந்து என்னை மீட்க வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சியை நடத்துவதில் கூடுதல் அக்கறை எடுத்தார்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு தான் சம்மதித்தேன்.
மீனா-40 நிகழ்ச்சி வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது. கடின உழைப்பு வீண் போகாது என்பார்கள். அதே போல் எனது கடின உழைப்புக்கு திரைத்துறை கொடுத்த அங்கீகாரமாகவே அந்த நிகழ்ச்சியை இன்றும் நினைக்கிறேன்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். நிகழ்ச்சிக்கு ரஜினி சார் உள்பட என்னோடு பணியாற்றிய கலைஞர்கள் வந்திருந்தார்கள். சுகாசினி மேடம், ராதிகா மேடம், குஷ்பு மேடம், ரோஜா என்று என்னை விட சீனியர்களும் வந்திருந்தார்கள். 3 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சி களை கட்டியது.
அந்த நிகழ்ச்சியை பார்த்து நாம் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகி விட்டதா...? என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருந்தது.
ராஜ்கிரண் சார், நாசர் சார், சேரன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு சம்பவங்களை நினைவு படுத்தி பாராட்டிய போதுதான் நாம் இப்படியெல்லாம் செய்திருக்கிறேமோ என்று ஆச்சரியப் பட்டேன்.
அதை விட ஆச்சரியம் எல்லோரும் எந்த அளவு உன்னிப்பாக என்னை பார்த்து இருக்கிறார்கள் என்பதை நினைத்த போது மிகவும் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு வரும் மனம் திறந்து பாராட்டிய போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.
ரஜினி சாரோடு குழந்தை நட்சத்திரமாக நடித்தவள் நான். பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தேன். அந்த நேரம் அவர் எப்படி நினைத்து இருப்பார்? அதையும் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது தெரிந்து கொண்டேன்.
எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் படங்களில் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்தவர். என்னை தூக்கி கொஞ்சியவர். எஜமான் படத்தில் நான்தான் ஹீரோயின் என்றதும் அவருக்கு மீனாவா? அந்த அமுல் பேபியா? ேஜாடி சரிப்பட்டு வருமா? என்று தயங்கி இருக்கிறார். அதன் பிறகு நான் ஏற்கனவே ஹீரோயினாக நடித்திருந்த ஒரு தெலுங்கு பட காட்சிகளை போட்டு காட்டி இருக்கிறார்கள். அதை பார்த்து ஆச்சரியப்பட்டு அதன் பிறகுதான் சம்மதித்து இருக்கிறார்.
இப்படி தனது நினைவுகளை பகிர்ந்தது மட்டுமல்ல தனக்கு பிடித்த ஹீரோயின்களில் நானும் ஒருத்தி என்று அவர் கூறியது பெருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்படி ஹீரோயினுக்கு விழா எடுத்தது கிடையாது. அந்த பெருமையும் எனக்கே வாய்த்தது.
எல்லா பெருமையும் வாய்த்தாலும் நடப்பதை யார்தான் அறிவார்? அதைத்தான் ரஜினி சார் தனது பேச்சில் குறிப்பிட்டார். மீனா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான நிகழ்வு நடந்து இருக்க கூடாது.
ஆனால் விதியாரைத் தான் விடும். விதியில் என்ன எழுதப்பட்டதோ அதுதான் நடக்கும் என்று கூறி விட்டு மீனா மீண்டும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேடையில் வாழ்த்திய அத்தனை பேரின் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தான் என்னை மீண்டும் மீண்டு எழ வைத்துள்ளது என்பேன் பெருமையோடு.....
அடுத்த வாரம் இன்னொரு நிகழ்வை பற்றி கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்....
(தொடரும்)






