என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சொத்தா? சொந்த பந்தமா?
- வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே நாம் அன்றாடம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- ஆழ்ந்த அக்கறையோடு பாடுபட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மனிதர்கள் குடும்பமாகக் கூடி வாழும் வாழ்வியலில் அவர்களுக்கு உற்ற நேரத்தில் உதவியாக இருக்கப் போவது சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெரு மக்களே! வணக்கம்.
ஆணும் பெண்ணுமாகப் பிறவியெடுக்கிற ஒவ்வொரு தனிமனிதரும், திருமண பந்தத்திற்குள் இணைந்து, குடும்பம் என்கிற அமைப்பிற்குள் அடியெடுத்து வைக்கும் போதுதான், அவர்கள் முழுமையான மனிதர்களாகத், தம்முடைய வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கிற மனிதர்களாக, உருப்பெருக்கம் அடைகிறார்கள். ஆணும் பெண்ணுமாக இணைந்து தொடங்குகிற புது வாழ்வியல், தமக்கு வளம் நல்குவதாகவும், நலம் சேர்ப்பதாகவும், நிலைத்த மகிழ்ச்சியையும், அமைதியையும் வழங்குவதாகவும் அமைய வேண்டும் என்பதிலும், அதற்கு ஆழ்ந்த அக்கறையோடு பாடுபட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே நாம் அன்றாடம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத் தேவைகளைப் பார்த்துக் கொள்வதற்கே கடின உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். தன் மனைவி, தன் பிள்ளைகள் இவர்களின் தட்டுப்பாடற்ற உணவுத் தேவைகள், அன்றாடம் பாதுகாப்பாக உறங்குவதற்கு உறைவிடத் தேவைகள், பிறகு பிள்ளைகளின் கல்வி, குடும்பத்தாரின் நாகரிகமான வாழ்வியல் வசதிகள், சொத்து மற்றும் காசு பணச் சேமிப்பு என்று இவற்றிலெல்லாம் இடைவிடாது கண்கொத்திப் பாம்பாய்க் கவனம் செலுத்தினான்தான், கஷ்டமில்லாத வாழ்க்கை உத்தரவாதமானதாக இருக்கும்.
பணம் சம்பாதித்தலே முக்கியம் என்று இருப்பவர்களுக்கு மளமளவென்று சொத்து சுகங்கள் பெருகலாம். ஆனால் சுற்றியுள்ள சொந்த பந்தங்கள் அவர்களுக்கு அரணாகச் சூழ்ந்து நிற்பார்களா? என்பது கேள்விக்குறியாகி விடும். பணம் தேடும் உலகிலே மனம் தேடுவது குறைந்து போகும் என்பது இயல்புதான் என்றாலும் மனம் தருகிற ஆறுதலைப் பணம் தந்து விடுமா?. தனித்துப் பிறந்தாலும் சமுதாயமாகக் கூடிப் பொது வாழ்க்கை வாழத்தான் மனிதன் அமைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் சுயநலம் என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவனை அறியாமலேயே அவனுள் கரைந்துதான் காணப்படுகிறது. எல்லோர் பொதுநலத்திலும் கொஞ்சம் சுயநலம் கலந்திருக்கவே செய்யும். ஊர்ப் பாசனத்திற்காக வெட்டப்படுகிற குளத்தால், தனது வயலும் பயன்படும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், வெட்டப்படுகிற குளத்தால், தன் வயல் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று நினைப்பது சுயநலம்.
மனிதன் பொதுநலவாதியாகச் சிறக்கும்போது அவனது உழைப்பு மற்றும் சம்பாத்தியங்கள் எல்லாம் தமக்கும் பயன்பட்டு, மற்றவர்க்கும் பயன்படும். ஆனால் தன்வீடு, தன் வசதி, தன் பிள்ளைகள், தன் வாழ்க்கை என்று சுருங்கிப்போகும்போது தனிமைச் சிறைக்குள் அடைபட்டு, சொந்த பந்தங்கள் ஏதுமற்ற வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கத் தொடங்கி விடுகிறான். நமது பெரும்பாலான எல்லா உழைப்புகளும் ஊதியம் கருதியதாகவே இருக்கின்றன. பெறுகின்ற ஊதியம், சம்பாதிக்கின்ற சம்பாத்தியம் அனைத்தையும் தமக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதில் ஒரு பகுதியைச் சமுதாயத்திற்காகவும் செலவு செய்கிற பரோபகாரம் இருந்தால் அதுவே சமூக நலம். சமுதாயம் என்பது நமது குடும்பம், நமது உறவினர்கள், நமது நண்பர்கள், நமது குடியினர், நமது இனத்தினர், நமது ஊரினர், நமது நாட்டினர், மனித குலத்தினர்... என எல்லைகள் விரிவடைந்து, உலகமெங்கும் உயிர்த்திருக்கும் உயிரினங்கள் வரை செல்லும் நீட்சியை உடையது. 'சொத்து பத்து இருந்தால்தான் சொந்தங்களும் சுற்றி வரும்' என்கிற சொல்வழக்குக்கு ஏற்ப நாமும் கொஞ்சம் செல்வச் சேமிப்பு உடையவர்களாக இருந்தால்தான் உறவினர்கள் மத்தியில் கொஞ்சம் மரியாதையும் இருக்கும்.
பழைய காலத்து அனுபவ மொழி ஒன்று இப்படியாக வருகிறது: 'கொண்டு வந்தால் தந்தை!, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்!, சீர் கொண்டு வந்தால் தங்கை!, உயிர்காப்பான் தோழன்!, கொலையும் செய்வாள் பத்தினி!. இந்த வாசகம் உறவுகள் குறித்த பல்வேறு மனப்போக்குகளைத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு சொற்றொடருக்கும் விரிவுரை பொழிப்புரை காண்பதைவிட, ஒட்டுமொத்தமாக உறவென்று இருந்தால், ஏதாவது செல்வம் சார்ந்த எதிர்பார்ப்புடன்தான் இருக்கும் என்கிற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடலாம். எவ்வளவுதான் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், சொந்தங்கள் சூழாத வாழ்க்கை, கரையற்ற குளத்தில் நீர் தேக்கி வைப்பது போல என்கிறார் திருவள்ளுவர்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர் நிறைந் தற்று.
இந்த உலகத்தையே வளைத்துப் போட்டது போன்ற நிலபுலன்களும், செல்வச் செழிப்பும், காசுபணங்களும் நிரம்பி வழிந்தாலும் அவை அடிப்படையில் உயிரற்றவை. நாம் மன நிம்மதி இழந்து சில வேளைகளில் அல்லாடும்போது, காசுபணம், நகைநட்டுகள் போன்றவை உயிர்பெற்று வந்து நம்மோடு உரையாடல் செய்யாது. உயிர்ப்போடு உலவிக் கொண்டிருக்கிற ஐந்தாறு சொந்தங்கள் வந்து சுற்றி நின்றுகொண்டு, 'ஏன் கலங்குகிறீர்கள்!, எது வந்தாலும் வருந்தாதீர்கள்! நாங்கள் இருக்கிறோம்! கடைசிவரை உங்களுக்குப் பாதுகாவலாக இருப்போம்!" என்று உணர்வோடு வந்து உறவாக நின்று அவர்கள் சொல்லுகின்ற ஆறுதல் வார்த்தைகளுக்கு எத்தனை கோடிப் பணங்களும் இணையாகாது.
சுந்தர ஆவுடையப்பன்
ஒரு மனிதனுக்கு சொத்து எவ்வளவு? என்பதை அசையும் சொத்துக்கள்!, அசையாச் சொத்துக்கள்! என்று வகைப்படுத்தி மதிப்பீடு செய்வார்கள். சொத்து மதிப்பு என்பது நில புலன்கள், வீடுகள், கட்டிடங்கள், மனைகள், நகைகள், காசு பணங்கள், வங்கியில் உள்ள சேமிப்புகள், வேளாண் நிலங்களில் இருந்து வரும் வருமானங்கள், தொழில்கள் மற்றும் தொழில் நிறுவன வருமானங்கள் என இவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அன்றாடம் வேலைக்குப்போய் அன்றாடம் சம்பாதிப்பவராக இருந்தாலும், மாத ஊதியம் பெறுகிற அலுவலர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் வருமானம் உண்டு; சேமித்துச் சொத்துச் சேர்க்கும் வாய்ப்புகளும் உண்டு; எவராக இருந்தாலும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்க்காமல் இருந்தால் அதுவே மதிப்புமிக்க சொத்து ஆகும்.
அன்றாடம் உழைத்து, அன்றாடச் சம்பளத்தில், அன்றாடம் உண்டு, அன்றாடம் வாழ்க்கையை நடத்தினாலே போதுமே பிறகு எதற்கு சொத்துச் சேர்க்க வேண்டும்? சேமிப்பைப் பெருக்க வேண்டும்? ஒரு வீடு போதாதா? ஒரு வாகனம் பத்தாதா? ஒன்றிரண்டு நகையணிந்தால் அழகு குறைந்து விடுமா? எல்லாவற்றையும் தாண்டி, அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்க்கப் போகிறேன் என்று ஏன் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்?.
மனித வாழ்க்கையில் எத்தனை படிப்பு இருந்தாலும், எத்தனை அறிவு இருந்தாலும், எத்தனை நம்பிக்கை இருந்தாலும் மனிதனுக்குப் பொருளாதாரம் தொடர்பான பாதுகாப்பு உணர்வு சற்று அதிகமாகவே உண்டு. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உண்டு; திடீரென தளர்ச்சி நிலை வந்து விட்டால், யார் உதவுகிறார்களோ இல்லையோ நாம் சேர்த்து சேமித்து வைத்திருக்கிற சொத்தும், பணமும் நிச்சயம் நம்மைக் கைதூக்கி விட்டுவிடும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு எப்போதும் உண்டு. நாம் சேர்த்து வைக்கிற செல்வம் நம்மைப் பொருளாதாரத் தற்சார்பு உடையவர்களாக வைத்திருக்கிறது. பொருள் ஒன்றே வாழ்வியலுக்குப் போது மானது; உறவுகளும், நட்புகளும் புறந்தள்ளப்பட வேண்டியவை என்கிற மமதை உணர்வைக் கூட நமது செல்வங்கள் நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன.
ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். இறந்த மனிதரின் இறுதிச் சடங்கு வேலைகள் அவரது வீட்டில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அவரது நண்பர் என்று கூறிக்கொண்டு, வெளியூரில் இருந்து ஒருவர் வந்து அங்கே நின்றார். ஊர்மக்கள் கேட்கும் படியாக உரக்க ஒரு செய்தியை அங்கே சொன்னார். " நான் இங்கே இறந்து கிடக்கும் இந்த மனிதரின் பத்தாண்டுக்கும் மேற்பட்ட நண்பன்; என்னுடைய இந்த நண்பன் ஐந்தாண்டுகளுக்குமுன் என்னிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதுவரை அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. அவர் இறந்துவிட்ட செய்தி அறிந்து வந்திருக்கிறேன். இவர் எனக்குத் தரவேண்டிய பதினைந்து லட்சம் ரூபாயை அவரது பிள்ளைகள் எனக்கு இப்போதே கொடுத்தால்தான் அவரது உடலை எடுத்து அடக்கம் செய்ய அனுமதிப்பேன்; இல்லையென்றால் நடப்பதே வேறு!" என்று மிரட்டும் தோரணையில் சொன்னார். அவரது மூன்று மகன்களும் தனியே சென்று கூடிப் பேசினார்கள். பிறகு கூட்டத்திற்குள் வந்து, தனது தந்தையின் நண்பரைப் பார்த்து, 'ஐயா! எங்களது தந்தையார் தங்களிடம் பணம் வாங்கியிருந்த விவகாரம் இதுவரையும் எங்களுக்குத் தெரியாது; இப்போது தெரிந்தும் இனிமேல் பெரிதாய் ஆகப்போவது ஒன்று மில்லை; எங்களிடம் நீங்கள் கேட்கும் பணம் இருக்கிறது. என்றாலும் அனாமத்தாய் அதை உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இஷ்டமில்லை; எங்களால் உங்களுக்கு எங்கள் தந்தை வாங்கிய கடன்தொகையைத் திருப்பித் தரமுடியாது; இவர் எங்கள் தந்தையே இல்லை!; உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று கூறிவிட்டு மகன்கள் மூவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்.
அப்போது அங்கே நின்றிருந்த ஒரே மகள் கண்ணீரும் கம்பலையுமாக ஓடிவந்து தனது தந்தையின் நண்பரிடம் பேசினார், "ஐயா நீங்கள் சொல்லும் 15 லட்சம் ரூபாய் இப்போதைக்கு என் கைவசம் இல்லை!; இதோ என் காதில், கழுத்தில் போட்டிருக்கிற நகைகளைக் கழற்றித் தருகிறேன். எனது தந்தையின் இறுதிச் சடங்குகள் தடையின்றி நடக்க அனுமதியுங்கள்; மீதித்தொகையைக் கூடிய விரைவில் உங்களிடம் திருப்பிச் செலுத்தி விடுகிறேன்" என்று கதறினார். தான் கொண்டு வந்திருந்த கைப்பைக்குள்ளிருந்து ஒரு மஞ்சள் பையை வெளியே எடுத்த இறந்தவரின் நண்பர், "ஊர்ப் பெரியவர்களே! இறந்து கிடக்கும் இவரிடம் உண்மையில் கடன் வாங்கியிருந்தது நான் தான்; 'பணத்தை, நான் இறந்த பிறகு என் ஊருக்கு வந்து இப்படியொரு நாடகத்தை நடத்தி, யார் எனக்காகப் பணம் தரச் சம்மதிக்கிறார்களோ அவரிடம் தந்து விடுங்கள்! என்று சொன்னவரும் இவர்தான். இதோ அந்தப் பணம் அவரது மகளுக்கு!" என்று தந்து விட்டு நண்பருக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.
செல்வம் உறவுகளை இணைக்கவும் செய்யும்; பிரிக்கவும் செய்யும். மனிதர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்று பார்க்கும் அற்ப நிலையைத் தாண்டி, அவர் பணக்காரரோ, ஏழையோ அவரிடம் இருக்கும் மனிதநேய மதிப்பு எவ்வளவு? என்று பார்க்கும் நிலை உருவானால் எல்லோரும் அவர்களுக்குச் சொந்த பந்தங்களே!.
தொடர்புக்கு - 9443190098






