என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்குறள் ஞான அமுதம்- வலியறிதல்
    X

    திருக்குறள் ஞான அமுதம்- வலியறிதல்

    • நமக்கு அருளாற்றல் இருந்தால், தொடர்ந்து வரும் பிறவியை வெல்லலாம்.
    • நம்மால் செய்யக்கூடியதை நம்முடைய சக்தியை அறிந்து செய்தால் அந்த செயல் நல்லபடியாக நடக்கும்.

    அதிகாரம்: வலியறிதல்

    இந்த அதிகாரத்தில் ,

    வினைவலியும் தன்வலியும் மாற்றான்

    வலியும்

    துணைவலியும் தூக்கிச் செயல்.

    என்ற குறளில் தொடங்கி

    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

    வளவரை வல்லைக் கெடும்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    வலி என்பது வல்லமை, ஆற்றல், பலம். இதனையே வலிஅறிதல் என்பர். சிலர் திடமாகவும், அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். அருளால் அறிவாற்றலும், உடல் வலிமையும், மனவலிமையும், கருணையும், பொருள் பலமும் உண்டானது.

    சிலருக்கு மனவலிமை இருக்கும், பொருள் வலிமை இருக்கும், அவர்களுக்கு உடல்வலிமை இருக்கும்வரை மனவலிமை இருக்கும். பணபலமும் ஆள்பலமும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இருக்கும்.

    அறிவுபலம் ஆயுள் உள்ளவரை இருக்கும். அருள்பலம் மட்டுமே தொடர்ந்து துணையாக இருக்கும். அருள்பலம் ஜென்மத்தை கடைத்தேற்றும், காமதேகத்தையே உடைத்தெறியும்.

    நமக்கு அருளாற்றல் இருந்தால், தொடர்ந்து வரும் பிறவியை வெல்லலாம். ஒரு தனிப்பட்ட மனிதனுடைய ஆற்றல் சிறப்பாக அமைய அருள்பலமும் நல்வினையும் காரணமாக அமையும். தளர்ச்சியடையாத மனவலிமை இருக்க வேண்டும்.

    யானையைவிட புலி உருவத்தில் சிறியதாக இருக்கும். யானை உருவத்தில் பெரியதாக இருக்கும்.

    புலி சீற்றத்துடன் பாய்ந்தால் யானை அஞ்சும். உடல் வலிமையைவிட மனவலிமைதான் உயர்ந்தது. வீரஉணர்ச்சி ஆசான் ஞானபண்டிதனால் கொடுக்கப்பட்டது.

    வீரதீர பராக்கிரம செயல்களை இளமையில் செய்யலாம். ஆனால் முதுமையில் உதவாது. அது ஓர் எல்லைக்குட்பட்டது.

    மனிதவர்க்கம் எல்லையில்லாத ஓர் பெரிய ஆற்றலை பெற்றிருக்கிறது. அதனை இளமை இருக்கும்பொழுதே பெற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லாம் அநித்தியமானது, நாளாகநாளாக நலிவடையும். ஞானிகள் மட்டும் என்றும் ஒரே தன்மையுடையவர்களாக இருப்பார்கள்.

    தலைவனை உருகி பூஜை செய்து, அருள்பலம் பெற்றவர்களுக்கு உடல்வலிமை குறையாது.

    ஞாபக சக்தி இருக்கும். பொருளாதாரம் குறையாமல் இருக்கும். எல்லைக்குட்பட்ட நாம் எல்லையில்லாத சக்தியை பெறவேண்டும்.

    உடம்பின் துணைகொண்டு, உயிர் ஆக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். அன்னதானம் செய்வதாலும் பூஜை செய்வதாலும் திருவருள் துணை கிட்டும்.

    திருவருள் துணையிருந்தால் சிறப்பறிவும், சிறப்பான வாழ்வும் கிடைக்கும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் எமனை வெல்லுகின்ற வலிமையை பெறலாம்.

    நம்மை நாம் மிகுதியாக உயர்த்தி நினைத்தல் கூடாது. நம்மால் செய்யக்கூடியதை நம்முடைய சக்தியை அறிந்து செய்தால் அந்த செயல் நல்லபடியாக நடக்கும்.

    பூஜை செய்பவர்கள் தம்மிடம் பெரிய அருள்பலம் இருப்பதாக நினைப்பார்கள். இது ஓர் மனப்பிரம்மை. எது நடந்தாலும் முன்செய்த வினைப்பயனால் வந்தது என்பதை உணர வேண்டும்.

    முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பற்றினால், அவர்கள் தம்முடைய அருள் கடாட்சத்தால் நம் பாவங்களைக் கழுவி நம்மை தூய்மைப்படுத்துவார்கள். ஆக இளமை இருக்கும் போதே பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஒருவருக்கு வல்லமை, ஆற்றல், திறமை, யூகம் இதுபோன்ற சிறப்புகள் பிறவியை வென்ற ஞானிகளின் திருவடியைப் பற்றினால் கிடைக்கும்.

    பிறவிப் பிணியை வெல்லுகின்ற வல்லமையும் மரணத்தை வெல்லுகின்ற வலிமையையும் ஞானிகளின் திருவடியைப் பூஜை செய்தால் பெறலாம்.

    அதிகாரம்: காலம் அறிதல்

    இந்த அதிகாரத்தில்,

    பகல்வெல்லும் கூகையைக் காக்கை

    இகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

    என்ற குறளில் தொடங்கி

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

    குத்தொக்க சீர்த்த இடத்து.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    காலம் அறிதல் என்பது அரசியலுக்குரியது. எதிரியை எப்போது எந்த காலத்தில் வெல்லலாம் என்பதைப் பற்றி கூறுவது ஆகும்.

    கோட்டானுக்கு பகலில் கண்கள் தெரியாது. கோட்டான் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது காக்கையைத்தான்.

    கோட்டான் பகல் நேரத்தில் வெளியில் வந்துவிட்டால் எல்லா காக்கையும் சேர்ந்து கொத்தி அதைக் கொன்றுவிடும்.

    கோட்டான், காக்கையை இரவு நேரத்தில் தூக்கிக் கொண்டு போய் தின்றுவிடும். அதுபோல் சமயம் பார்த்து எதிரியை வெல்லக்கூடிய உபாயத்தை கூறுவது இந்த அதிகாரம்.

    காலம் மூன்று வகைப்படும்.

    காலை, மதியம், மாலை இது உலக நடை. சிலர் இளமையில் வறுமையில் இருப்பார்கள். முதுமையில் செல்வம் குவியும்.

    பராக்கிரமம் உள்ளவனுக்கென்று ஒரு காலமுண்டு. ஏழைக்கும் ஒரு காலமுண்டு. எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட காலமே. தக்க நேரத்தில், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நிலையில்லாத ஒன்றை பெற்றிருக்கின்றோம். எல்லா சிறப்புகளும், படைகள், சேனைகள் இருந்தாலும் அந்தந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்து, மறைந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவர்களைப் பற்றி தெரியாது.

    காலத்தில் அழியாதவர்கள் ஞானிகளே. ஞானிகளின் புகழும், அவர்கள் அருளியவைகள் எதுவுமே அழியாது. ஏனெனில் அவர்கள் காலத்தை வென்றவர்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் மூச்சுக்காற்று ஒடுகிறது. தாய் தந்தை இல்லறம் நடத்துகிறார்கள்.

    அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் உருவாகின்ற காற்றின் இயக்கத்தால் குழந்தை உருவாகிறது.

    தாயின் மூச்சுக்காற்று அசைந்தால் உள்ளே குழந்தை உயிரோடு இருக்கும். தாயின் மூச்சுக்காற்று நின்று விட்டால் உள்ளே உள்ள குழந்தையும் இறந்துவிடும்.

    தாயின் மூச்சுக்காற்றின் இயக்கம்தான் குழந்தை. தாயின் மூச்சுக்காற்றின் இயக்கத்தால் கருவும் வளர்கிறது.

    மூச்சுக்காற்றே ஆன்மா. உயிர் தாயாக உள்ளது. பத்துமாத மூச்சுக் காற்றின் இயக்கத்தினால் நாம் இருக்கிறோம்.

    தாயினுடைய மூச்சுக் காற்றுதான் இப்போது நமக்கெல்லாம் ஓடிக்கொண்டுள்ளது.

    காலத்தின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கம். இதுவே நமக்கு காலத்தை உண்டாக்குவது. அதாவது முடிவை உண்டாக்குவது மூச்சுக் காற்றே.

    மூச்சுக்காற்று நின்றால் காலம் முடிந்துவிடும் என்பதை அறிந்தவர்கள் ஞானிகள். அவர்கள் அந்த உண்மையை அறிந்து மூச்சுக் காற்றை புருவமத்தியில் செலுத்துவார்கள்.

    புருவமத்தியில் மூச்சுக்காற்றை செலுத்திவிட்டால் அது திரும்ப வராது. அங்கு காலம் இல்லை. அவர்கள் காலமாக மாட்டார்கள். இத்தகைய வாய்ப்பை பெற வேண்டும்.

    மூச்சுக்காற்றை மையமாகக் கொண்டதுதான் அயன் கையெழுத்து என்று கூறுவார்கள்.

    முருகனுடைய கால்பட்டு, அதாவது திருவடிபட்டு தனக்கு பிரம்மா எழுதிய தலையெழுத்து அழிந்தது என்று மகான் அருணகிரிநாதர் பாடுகின்றார்.

    ஆசான் சுப்பிரமணியர் ஆசியினால்தான் இடகலையும் பிங்கலையும் புருவமத்தியில் தங்கும். அப்படி தங்கிவிட்டால் பிரம்மாவின் கையெழுத்து அழியும் என்று கூறுகின்றார் ஆசான் அருணகிரிநாதர்.

    தலைவனை உருகி தியானம் செய்தால் இந்நிலை கை கூடும். இதனை சொற்குரு, தன்னை சார்ந்த தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும்.

    இடதுபக்கம் வருகின்ற காற்று இரவு. வலது பக்கம் வருகின்ற காற்று பகல். இரவும் பகலும் அற்ற இடம் புருவ மத்தி.

    அங்கு காற்று செல்ல முடியாது. அப்படி சென்றுவிட்டால் திரும்ப வராது. திருவருள் துணை இருந்தால் தேவர்களும் போற்றுகின்ற அந்த வாய்ப்பு கிடைக்கும்.

    இளமையில் காமவிகாரத்தால் மனம் ஒருநிலைப்படாது. பின்பு திருமணம் முடிந்த பின் மனைவி மக்கள் மீது கொண்ட பாசத்தால் பக்தி தடைபட்டுப் போகும். நாற்பது வயதுக்குமேல் பந்தபாசத்தை விட்டுவிலக மனம் வராது. முதுமை வந்தபின் சிந்தித்துப் பயனில்லை.

    உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் ஞானிகளிடம் பக்தி செலுத்த வேண்டும். நாம் காலம் ஆகாமல் இருக்க, காலம் ஆகாத ஞானிகள் நமக்கு அருள்செய்ய வேண்டும்.

    உடம்பில் மூச்சுக்காற்று இருக்கும்போதே தீவினையை போக்கிக்கொள்ள வேண்டும்.

    இந்த உண்மையை புரிந்துகொண்டு, இந்த உண்மையை அறிந்த சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லா மனிதர்களுக்கும் காலத்தை வெல்லுகின்ற வாய்ப்பு உண்டு.

    ஞானிகளின் திருவடிகளை பூஜை செய்தும், புண்ணியம் செய்தும் மூச்சுக்காற்றின் இயல்பை அறிந்து, மூச்சுக்காற்றை புருவமத்தியில் செலுத்திவைப்பதை சமாதி என்று கூறுவார்கள்.

    அந்த வாய்ப்பை பெற்றவர்கள்தான் காலத்தை வென்றவர்கள். அவர்களுடைய திருவடியைப் பற்றினால் நாமும் காலத்தை வெல்லலாம். இதனை இளமை இருக்கும்போதே அடைய முற்பட வேண்டும்.

    மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கினால் தெய்வம் நம்மை விட்டு நீங்காது. மூச்சுக்காற்றை கட்டுவது என்பது தெய்வத்தைப் பற்றிக்கொள்வதாகும்.

    தெய்வம் என்பதே மூச்சுக்காற்றுதான். ஒருவனை கரை சேர்ப்பதும், அவனை காலில் போட்டு மிதிப்பதும் மூச்சுக்காற்றுதான்.

    காலனை வெல்லக்கூடியது மூச்சுக்காற்று. காலன் என்பவன் நமக்கு காமமாகவும் கபமாகவும் இருப்பான். அதனை அறுத்து எறிவது மூச்சுக் காற்று.

    சான்றோர்களிடம் தொடர்புகொண்டு அதனை அறிந்துகொள்ள வேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினாலன்றி மூச்சுக்காற்றைப் பற்றி அறிய முடியாது.

    ஞானிகளின் திருவடியைப் பற்றி பூஜை செய்தும், புண்ணியம் செய்தும் காலத்தை வெல்லும் மார்க்கத்தைக் கற்கலாம்.

    Next Story
    ×