என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 23
- கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.
- கோட்டைப் போடு, கோட்டைச் சுவர் வேண்டாம் என்று கூறுகிறோம்.
மகரிஷி உத்தங்கருக்கு ஒரு பாலை வனத்தின் வழியாக நடக்கவேண்டியது ஏற்பட்டது.
அவருக்கு சரியான தாகம். எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போதுதான் கிருஷ்ணர் அவருக்குக் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது.
அவர் நினைத்தது கிருஷ்ணருக்கும் தெரிந்தது.
"வரம் கிடைப்பதாக இருந்தால், ஒரு சராசரி மனிதன் உலகத்தையே கேட்டு விடுவான். ஆனால் இவரோ வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இவருக்கு தண்ணீருக்குப் பதிலாக தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தையே கொடுத்துவிட வேண்டும்" என்று கிருஷ்ணர் விரும்பினார்.
அவர் உடனடியாக இந்திரனைத் தொடர்பு கொண்டு உத்தங்கருக்கு அமிர்தத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்திரன் சம்மதிக்கவில்லை.
"அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே உரியது. உத்தங்கர் ஒரு மனிதர். அதனால் அவர் அமிர்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறி இந்திரன் ஆட்சேபித்தார்.
கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.
இந்திரனும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார்.
"நான் அவருக்கு அமிர்தத்தை வழங்குகிறேன். ஆனால் அமிர்தம் என்று கூறி வழங்க மாட்டேன். அவர் தனது சாமர்த்தியத்தைக் காட்டி அமிர்தத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று இந்திரன் கூறினார்.
கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார்.
இந்திரன் ஒரு காட்டுப் புலையனாக வேடமிட்டு, ஒரு தோற் பையில் அமிர்தத்தை எடுத்துச்சென்றார்.அந்த தோற்பை சில இடங்களில் கிழிந்து இருந்தது. அவற்றில் ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தன.
ஸ்ரீ பகவத்
அந்தத் தோற்பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, கைகளில் நான்கைந்து
வேட்டை நாய்களைப் பிடித்த வாறே இந்திரன் உத்தங்கருக்கு எதிராக வந்தார்.
அவர் உத்தங்கரைப் பார்த்து,
"என்னா சாமி, தாகமாக தெரியுது. தண்ணீர் வைத்துள்ளேன் சாப்பிடறியா?" என்று கேட்டார்.
உத்தங்கருக்கு ஒரே அருவருப்பு. இப்படி ஒரு தண்ணீரை வாங்கிக் குடிப்பதை விட தாகத்தில் செத்துவிடுவதே சிறந்தது.
- இப்படி எண்ணிய அவர், அதனை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
இந்திரனும் அங்கிருந்து சென்று மறைந்து விட்டார்.
உத்தங்கர் கிருஷ்ணரை நினைத்து வருத்தம் கொண்டார்.
"உன்னிடம் வரம் வாங்கிய குற்றத்துக்காக இப்படி ஓர் ஆபாசமாகவா தண்ணீரை எனக்குத் தருவது?"
கிருஷ்ணரும் அவர் முன் தோன்றி நடந்ததை விளக்கிக் கூறினார்.
பிறகு அவருக்கு இன்னும் ஒரு வரத்தையும் வழங்கினார்.
"இனிமேல் நீங்கள் எங்கு சென்றாலும் உத்தங்க மேகம் என்றொரு மேகம், உங்களைப் பின்தொடர்ந்தே வந்து கொண்டிருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாகவே சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
அது முதல் பாலைவனத்தில் மழை பெய்திடும் மேகங்கள் அனைத்தும் உத்தங்க மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அடுத்து வருவது எட்டாவது விதிமுறை.
அந்த எட்டாவது விதிமுறை என்ன கூறுகின்றது?
ஒரு செயலை நாம் செய்வது என்று முடிவு செய்து விட்டோம்.
அந்த செயலை நாம் என்ன விதமான அணுகுமுறையில் செய்து முடிக்க வேண்டும்?
"நாம் செய்ய வேண்டிய செயல்களை, தியானமாக செய்து முடிக்க வேண்டும்".
- இதுதான் எட்டாவது விதிமுறை.
நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், அவற்றில் ஈடுபாடு எதுவுமே இல்லாமல், ஏனோ தானோ என்று செய்தால் அந்தச் செயல் வெற்றி பெறுமா?
எந்த அளவுக்கு அக்கறையோடும், ஈடுபாட்டோடும் செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்தச் செயல் வெற்றி பெறும்.
ஒரு செயலை அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செய்வது என்பது, அந்த செயலை தியானத்துடன் செய்வது என்பதே ஆகும்.
ஆகவே நாம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள ஒரு செயலை, தியானம் செய்யும் மனப்பான்மையுடன் செய்து முடிக்க வேண்டும்.
தியானம் செய்யும் மனப்பான்மையுடன் ஒரு செயலைச் செய்வது என்பது என்ன?
எந்தவொரு செயலானாலும் அந்தச் செயல் இரண்டு பகுதிகளாக உள்ளது.
செயல்பட வேண்டிய பகுதி மற்றும் அப்படி செயல்படுவதால் அடையப்படும் பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளன.
அதாவது செயல் என்பது முதற்பகுதி.
அதன் விளைவாக-பயன்பாடாக வருவது இரண்டாவது பகுதி.
இரண்டாவது பகுதியின் முக்கியத்துவத்தை முடிந்த வரைக்கும் குறைந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முற்பகுதியின் மீதுள்ள ஈடுபாட்டை மட்டும் முடிந்த அளவுக்கு கூட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் ஒரு செயலின் மீது ஈடுபாடு காட்டுவதே அந்தச் செயலில் தியானத்தோடு இணைந்து கொள்வதாகும்.
அடுத்ததாக வருவது ஒன்பதாவது விதிமுறை.
இந்த விதிமுறை என்ன கூறுகின்றது?
இது ஒரு தனிப்பட்ட விதிமுறை அல்ல. மற்றைய விதிமுறைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே கூறுகின்றது.
"கோட்டைப் போடு; கோட்டைச் சுவர் வேண்டாம்."
- இதுதான் அந்த ஒன்பதாவது விதிமுறை.
கோடு என்பது என்ன?
கோட்டைச் சுவர் என்பது என்ன?
தேசிய நெடுஞ்சாலை என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
ஒரு சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்.
சென்னையில் இருந்து மும்பை செல்பவர்கள் இடது பக்கத்தில் செல்ல வேண்டும். அதேபோல் மும்பையில் இருந்து சென்னை வருபவர்கள் நமக்கு வலது பக்கமாக உள்ள ரோட்டில் வரவேண்டும்.
இடது பக்கத்தையும், வலது பக்கத்தையும் பிரிக்கும் வகையில் சென்டர் மீடியன் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது அரளி போன்ற செடிகள் கூட வளர்க்கப்பட்டிருக்கும்.
அதனால் இடது பக்கமாகச் செல்பவர்கள் இடது பக்கமாக மட்டுமே செல்ல முடியும். அதுபோல் வலது பக்கமாகச் செல்பவர்கள் வலது பக்கமாக மட்டுமே செல்ல முடியும்.
இடது பக்கமாக செல்பவர்கள் வலது பக்கத்துக்கு மாறிக் கொள்ள முடியாது. அது போல் வலது பக்கமாக செல்பவர்களும் இடது பக்கத்துக்கு மாறிக் கொள்ள முடியாது.
ஆனால் சில நெடுஞ்சாலைகளில் இப்படி ரோட்டைப் பிரித்து சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருக்காது.
ஆனாலும் கூட இடது பக்கத்தையும் வலது பக்கத்தையும் பிரிக்கும் வகையில் ரோட்டின் நெடுக கோடு ஒன்று மட்டும் போட்டிருக்கும். இங்கிருந்து முன்னோக்கிச் செல்பவர்கள் அனைவரும் கோட்டுக்கு இடது பக்கமாகவே செல்ல வேண்டும். அது போல் எதிர்த்திசையில் இருந்து இந்த பக்கமாக வருபவர்கள் கோட்டுக்கு வலது பக்கமாக மட்டுமே வரவேண்டும்.
சென்டர் மீடியன் உள்ள சாலைக்கும் சென்டர் மீடியன் இல்லாத சாலைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால்,
ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் போக முடியுமா, முடியாதா என்பதுதான்.
கோடு மட்டுமே போடப்பட்ட சாலையாக இருந்தாலும்கூட, நமது கடமை நமது வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் ஓட்டுவது மட்டுமே ஆகும்.
(சில நாடுகளில் ரோட்டின் வலது பக்கமாக மட்டுமே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை தான் உள்ளது)
(இந்த சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு பொதுவான கேள்வி. இந்தியாவைப் பொறுத்தவரை வாகனங்கள் அனைத்தும் ரோட்டின் இடது பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும்.
நாம் வாகனம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. ரோட்டில்தான் நாம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நாம் ரோட்டில் இடது பக்கமாக நடந்து செல்ல வேண்டுமா? அல்லது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டுமா? பலரிடமும் கேட்டுப்பாருங்கள், ரோட்டில் இடது பக்கத்தில்தான் நடந்து செல்ல வேண்டும் என்று கூறி விடுவார்கள் .
இந்தியாவைப் பொறுத்தவரை பாதசாரிகள் அனைவரும் வலது பக்கமாக மட்டுமே நடந்து சென்று போக்குவரத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் சாலைவிதி.)
இப்போது நாம் நமது கட்டுரைக்கு வருவோம்.
கோட்டைப் போடு, கோட்டைச் சுவர் வேண்டாம் என்று கூறுகிறோம். எதற்காக அவ்வாறு கூறுகிறோம்?
8 விதமான விதிமுறைகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். அந்த விதிமுறைகளை நாம் எவ்வாறு எடுத்து பயன்படுத்துவது?
அவற்றை ஒரு கோட்டைச் சுவராக மாற்றி மாற்றி அதற்குள் நாம் சிறைப் பட்டுவிடக் கூடாது.
அதற்காக அவற்றை நாம் புறக்கணித்து விடவும் கூடாது.
சென்டர் மீடியன் இல்லாத சாலையில் நாம் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.
ஒரு சமயம் நாம் நமக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டியுள்ளது. வலது
பக்கத்தில் எதிர்த்திசையில் இருந்து எந்தவொரு வாகனமும் வந்து கொண்டிருக்கவில்லை.
அந்நிலையில் நாம் கோட்டையும் தாண்டி வலது பக்கமாகச் சென்று, முன்பக்கமாகச் செல்லும் வாகனத்தை முந்திச் சென்று விடலாம்.
அதற்காக வலது பக்கமாக வாகனமே வராது என்று எண்ணி வலது பக்கமாகவே ஓட்டிச் சென்றுவிடக் கூடாது.
ஏதோவொரு அவசியத்தை முன்னிட்டும் கூட, நாம் நம்முடைய விதிமுறைகளில் இருந்து நழுவி விடலாம். அதற்காக நாம் அந்த
விதிமுறைகளை நிரந்தரமாக புறக்கணித்து விடக் கூடாது. நழுவிச் சென்றதை மறந்து விட்டு விரைவில் நாம் நமது நேர்மறை வாழ்வுக்குத் திரும்பிவிட வேண்டும்.
அடுத்ததாக நாம் பார்க்க வேண்டுவது தான் நமது பத்தாவது கட்டளை. "காம்பவுண்டுச் சுவரை ஒப்படைத்துவிடு"
- இதுதான் அந்த பத்தாவது கட்டளை.
இந்தக் கட்டளை தனிநபர் சம்பந்தமான ஒன்று அல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்தி னரோடு சம்பந்தமான ஒன்று.
அந்த சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கத்தினர் என்ற முறையில் அதனை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது.
அகில உலக அளவில் அப்படி என்ன ஒரு கடமை நமக்கு உள்ளது?
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532






