என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வரவு எட்டணா! செலவு பத்தணா!... பணம் பெருக்கும் வழிமுறைகள்- 4
    X

    வரவு எட்டணா! செலவு பத்தணா!... பணம் பெருக்கும் வழிமுறைகள்- 4

    • ஒரு செலவை அதிகம் செய்திருந்தாலும் அதை உணர்ந்து, வரும் மாதங்களில் திருத்திக் கொள்ள முடியும்.
    • வெளிநாட்டினர் விரும்பி மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கை இது.

    மாலை மலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் சேமிப்பு முக்கியம் என்றும், அதற்கு முக்கியத் தடையாக இருப்பது நமது செலவுப் பழக்கம் என்றும் பார்த்து வருகிறோம். இந்தப் பழக்கமானது, நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த ஜல்லிக்கட்டுக் காளை விளைவிக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதை அடக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் தொடர்ந்து பேசலாம்.

    "தேவையில்லாத செலவா? நானா? என்னிடம் காசே இல்லையே? எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. கடனுக்கும், கிெரடிட் கார்டுக்கும் சரியான நேரத்தில் இ.எம்.ஐ. கட்டமுடியாமல் போவதால், வட்டி, பெனால்ட்டி என்று கட்டி நொந்து போயிருக்கிறோம். இந்த அழகில் எப்படி அதிகப்படியான செலவு செய்ய முடியும்?" என்று கேட்கிறீர்களா? வாருங்கள், உங்களின் செலவுகளைக் கொஞ்சம் பட்டியலிடுவோம். தினமும் இரண்டு முறை டீ, காபி நியாயம்தான். அதற்கு மேல் டீ, காபிக்கு செலவழித்தது எவ்வளவு? ஓட்டல் உணவுக்கு செலவழித்தது எவ்வளவு? இதை வீட்டில் தயாரித்திருந்தால் எவ்வளவு மிச்சமாகும்?



    பீடி, சிகரெட், பாக்கு, புகையிலை, பீடா, சோடா, லாட்டரி டிக்கெட், மது, அழகுப் பொருட்கள் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு வேண்டாத பழக்கம் வைத்திருக்கிறோம். போகாத ஜிம்முக்கு, பார்க்காத ஓ.டி.டி.க்கு சப்ஸ்க்ரிப்ஷனை நிறுத்துகிறோமா? குடும்பத்தார் அனைவரும் உட்கார்ந்து பேசி செயல்பட்டால் கரண்ட் பில், வாட்டர் பில் குறையும் அல்லவா? நீங்கள் கவனித்திருப்பீர்கள், செல்போனில் போஸ்ட் பெய்ட் பிளானை விட பிரீபெய்ட் பிளானில் செலவு மிகவும் குறைவு. வீட்டில் ஒருவர் மட்டும் போஸ்ட் பெய்டும், மற்றவர்கள் பிரீபெய்ட் பிளானுமாக உபயோகப்படுத்துவது போன் செலவை வெகுவாகக் குறைக்கும்.

    இரண்டு கார்களுக்கு பதில் ஒரே கார் வைத்துக் கொள்வது, காரில் செல்வதற்கு பதில் பைக்கில் செல்வது, பைக்கில் செல்வதற்கு பதில் மெட்ரோவில் செல்வது எல்லாமும் செலவை குறைக்கும் வழிகளாகும். (உங்களுக்கு வசதி இருந்தால் இரண்டென்ன, மூன்று கார் கூட வைத்து, காரிலேயே ஊரைச் சுற்றலாம். தவறில்லை. ஆனால் நாம் பேசுவது பணம் சேமிக்க முடியாமல் தத்தளிக்கும் குடும்பங்களைப் பற்றித்தான்.)

    இப்படியான அதீத செலவுகளைக் குறைத்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்க்க முடிந்தால் கூட, மாதக் கடைசியில் உங்களிடம் 3 ஆயிரம் ரூபாய் இருக்கும். உங்களுக்கு வயது 30 என்றால், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளன. அது வரை மாதம் மூவாயிரம் ஒரு வங்கியில் போட்டால், 6 சதவீதம் வட்டியில், ரூ. 64,24,526 (சுமார் 64 லட்சம் ரூபாய்) சேர்ந்திருக்கும். இல்லை, மியூச்சுவல் பண்டில் போட்டால், 10 சதவீதம் வட்டியில், ரூ. 2,06,75,937 (சுமார் ரூ.2 கோடியே 6 லட்சம்) சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. 30 வருடங்கள் கழித்து இரண்டு கோடிக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது என்று எண்ணவேண்டாம். அதுவும் இல்லாவிட்டால் நமக்கு என்ன மதிப்பு என்று எண்ணிப் பாருங்கள்.

    30 வயதுக்காரர்களுக்கு இது வழி என்றால், 40, 50 வயதுக்காரர்கள் இன்னும் சற்று இறுக்கிப் பிடித்து, அநாவசிய செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு இருக்கும் காலம் குறைவு அல்லவா? என்னது, செலவைக் குறைக்க வேண்டுமா என்று மலைக்காதீர்கள். வலி இல்லாத வெற்றி இல்லை.

    மேலும் செலவைக் குறைத்து அதனை சேமிப்பாக மாற்ற, அவர்கள் கடைப்பிடிக்கக் கூடிய இன்னொரு வழியும் உள்ளது. சற்று அதிக வயதில் உள்ள பலர் தங்கள் பணப் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ளோரிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை. "ஏதோ அவர்களாவது ஜாலியாக இருக்கட்டும்; என் பிரச்சினையைக் கூறி அவர்கள் மூடைக் கெடுப்பானேன்" என்ற நல்ல எண்ணமே காரணம் என்றாலும், வாழ்வில் உள்ள பணப் பிரச்சினைகளின் தீவிரம் குடும்பத்தாருக்குப் புரிவது நல்லது.

    ஷாப்பிங் நேரங்களில் பல குடும்பத் தலைவர்கள் நெருப்பை விழுங்கியது போல உம்மென்று இருப்பதையும், அவர்கள் தரப்பில் உள்ள நியாயம் புரியாமல் குடும்பத்தார் அவர்கள் உம்மணாமூஞ்சி என்று தீர்மானித்து அவர்களை ஒதுக்கிவிட்டு, இஷ்டம் போல செலவழித்துக் கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. பணம் சேமிப்பதன் நன்மை குறித்தும், உங்கள் முயற்சிகள் குறித்தும் வீட்டு உறுப்பினர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரியவைத்தால், அவர்கள் முயற்சியும் இதில் சேரும்போது முதலீடு பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வலிக்கான காரணம் அவர்களுக்குப் புரியும்போது உங்கள் மீதான மரியாதையும் உயரும்.

    சுந்தரி ஜகதீசன்

    இப்போது நம் நாட்டில் வறுமை குறைந்து உள்ளது. சாதாரண மக்களிடம் கூட வீட்டு உபயோகப் பொருட்கள், வங்கிக் கணக்கு, வாகனம் போன்றவை இருக்கின்றன. ஆகவே இன்று நமக்குத் தேவை, அவசியமான பொருளைக் கூட வாங்க மறுக்கும் கஞ்சத்தனமும் அல்ல; குறைந்த விலைப் பொருட்களை மட்டுமே வாங்கும் சிக்கனமும் அல்ல; "இது என் வாழ்வுக்குத் தேவைதானா" என்று தீர்க்கமாக யோசித்து, கண்டிப்பாகத் தேவை என்னும் பொருட்களை சற்று அதிகம் செலவழித்துக்கூட வாங்கலாம் என்ற தெளிவுதான்.

    ஆனால் ஜல்லிக்கட்டுக் காளையாகத் திமிறும் இந்தச் செலவினங்களை வரவுக்குள் அடக்கி, சேமிப்பிலும் வெற்றி பெற்றால்தான் இன்பம் நிலைக்கும். அதற்கான வழி என்ன?

    1. 45 வயதுக்கு மேல் வேலை நிலைக்குமா, வளர்ச்சி தொடருமா, ஓய்வு பெற்றபின் சொந்தக் காலில் நிற்க முடியுமா என்று மனதை அரிக்கும் கவலைகளோடுதானே செலவுகளை மேற்கொள்கிறோம்? அதை மாற்றி நமது செலவுகளை நாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்றால் நம் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். இதனை "பே யுவர் செல்ப் பர்ஸ்ட்" என்பார்கள். நமது வரவில் ஒரு தொகையை வங்கி சேமிப்புக்கு, மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கு, கடனுக்கு என்று தீர்மானிக்கிறோம் அல்லவா?அதனை மாதம் முதல் வாரத்திலேயே அந்தந்த அக்கவுன்ட்டுகளுக்கு செலுத்திவிட்டால், மீதி இருப்பதையெல்லாம் ஆனந்தமாக செலவு செய்யலாமே?

    2.'இ.டி. மனி, மின்ட்' போன்ற இலவச ஆப் ஒன்றை போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு, செலவுகளை அதில் பதிவிடுவதன் மூலம் எந்தச் செலவினம் அநாவசியம் என்று அறிய முடியும். இதனால், ஒரு செலவை அதிகம் செய்திருந்தாலும் அதை உணர்ந்து, வரும் மாதங்களில் திருத்திக் கொள்ள முடியும்.

    3. சில மாதங்களில் உணவு, வாடகை, போக்குவரத்து, மருந்துகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவழிக்கும் பழக்கத்தை மேற்கொள்வது "நோ பை" எனப்படுகிறது. வேறு சில மாதங்களில் இதனை சற்று தளர்த்தி ஆசைக்காக செய்யும் செலவுகளை குறைவாக மேற்கொள்வது "லோ பை" எனப்படுகிறது. உதாரணமாக குடும்பத்துடன் வாராவாரம் ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் அதனை மாதம் இரு முறையாகக் குறைத்து "லோ பை" பழக்கமாக மாற்றலாம். வெளிநாட்டினர் விரும்பி மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கை இது.

    4. இவை தவிர, வீட்டில் வேண்டாது குவிந்திருக்கும் பொருட்களை குவிக்கர் போன்ற ஆப்களை பயன்படுத்தி விற்கலாம். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறி கடைக்குச் செல்வதற்கு வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து சென்று உடல் நலனை அதிகரிக்கலாம். பார்க்குகளில், பீச்சுகளில் நடைப்பயிற்சி, பாடல்களைக் கேட்டல், குழுவாக இணைந்து பாடுதல், தோட்டக் கலையில் ஈடுபடுதல், நண்பர்களுடன் அரட்டை-இது போன்ற செலவில்லாத பொழுதுபோக்குகளையும் ரசிக்கத் தெரிந்து கொள்ளலாம்.

    உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர் வாரென் பபெட் "நீங்கள் ஆசைக்குப் பொருட்களை வாங்கினால், தேவையான பொருட்களை விற்க நேரிடும்" என்கிறார். நமது வள்ளுவரோ, "வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; செலவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.

    பொருளாதாரத்தைப் பொறுத்தவரை "நாளை பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?" என்ற கவலை இன்றி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி அல்லவா? இன்று பலரும் 40 வயதிலேயே ரிட்டயர் ஆவது பற்றியும், பொருளாதார விடுதலை பற்றியும் பேசுகிறார்கள். பணத்தேவைக்காக மட்டும் பிடிக்காத வேலையில் கைகட்டி சேவகம் செய்வதை விடுத்து, நமக்குப் பிடித்த வேலையைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பதே உண்மையான பொருளாதார விடுதலை. அதை அடையும் வழி "குறைவான தேவை; நிறைவான வாழ்வு" என்பதேயாகும். நாம் குறைக்க வேண்டிய செலவுகள் எவை எவை என்பதைக் கண்டறிந்து குறைத்தால் சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பில் சேரும் ஒவ்வொரு ரூபாயும் நாம் செல்வத்தின் ஏணிப்படிகளில் ஏற உதவும் என்பதை ஒரு நாள் சேமிப்பு 100 ரூபாய் என்ற மேற்கண்ட கணக்கு தீர்மானமாகக் கூறுவதைப் பார்த்தோம். இதன் மூலம் நாம் விரும்பும் பொருளாதார விடுதலையை சீக்கிரமே பெற இயலும்.

    ஆகவே உங்கள் செலவினங்களில் நீங்கள் குறைக்க விரும்புகின்ற மூன்று பெரிய செலவினங்கள் எவை எவை என்று பட்டியலிடுங்கள். அவற்றை வரும் மாதத்தில் 10 சதவீதம் குறைக்க முடியுமா; அந்தப் பணத்தைக் கொண்டு சேமிப்பை எவ்வளவு தூரம் அதிகரிக்க முடிகிறது என்று பாருங்கள். (40, 50 வயதினர் குறைக்கவேண்டிய செலவு விகிதம் 15 சதவீதம் மற்றும் 20 சதவீதம்.)

    ஆல் த பெஸ்ட்!

    Next Story
    ×