என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சதாவதானி செய்குதம்பிப் பாவலர்!
    X

    சதாவதானி செய்குதம்பிப் பாவலர்!

    • நெசவுத் தொழில்தான் பாவலரின் குடும்பத் தொழில்.
    • பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்துக் கல்வி கற்க அவருக்கு வசதியில்லை.

    இஸ்லாமியத் தமிழறிஞர்கள் வரிசையில் பெரிதும் குறிப்பிடத்தக்க ஓர் அறிஞர் சதாவதானி செய்குதம்பிப் பாவலர். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெருமகன் அவர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு என்னும் பகுதியில், இடரில் ஆயக்குடி என்னும் பெயர் படைத்த `இடலாக்குடி` அவரது சொந்த ஊர். 1874 ஜூலை 31ம் நாள் பக்கீர் மீரான் சாகிப்புக்கும் திருமதி அமீனாவுக்கும் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இவர்.

    அரபுமொழியிலும் குரானிலும் இளம் வயதிலேயே தேர்ச்சி பெற்றார். எட்டாம் வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.

    முதல் வகுப்பில் பயின்று கொண்டிருக்கும் போது வகுப்பாசிரியர் இயற்கையிலேயே இவரிடம் உள்ள அபாரமான அறிவாற்றலை உணர்ந்து வியந்தார். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளை ஒரே ஆண்டில் தேற வைத்தார் அவர்.

    நெசவுத் தொழில்தான் பாவலரின் குடும்பத் தொழில். வறுமை அந்தக் குடும்பத்தினரை வாட்டியது. அதனால் செய்குதம்பிப் பாவலர் தமது பத்து வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.

    தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழிலில் தாமும் கூடமாட உதவி செய்யலானார். என்றாலும் ஓய்வு நேரமெல்லாம் தமிழைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்.

    பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்துக் கல்வி கற்க அவருக்கு வசதியில்லை. எனவே முறையான படிப்பு அவருக்கு அமையவில்லை.

    அதனால் என்ன? கோவில்களில் உபன்யாசங்கள் நடைபெறும். புராணங்கள் பற்றியும், இதிகாசங்கள் பற்றியும் சொற்பொழிவாளர்கள் வந்து பேசுவார்கள். அதைச் சென்று கேட்கக் கட்டணமெதுவும் கிடையாது அல்லவா?

    பாவலர் கோவில்களுக்குச் செல்லத் தொடங்கினார். அந்தச் சொற்பொழிவுகளைக் கருத்தூன்றிக் கேட்பதன் மூலம் தம் இலக்கிய அறிவைப் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார்.

    வீட்டில் நெய்த துணிமணிகளைக் கடை வீதிகளில் சென்று விற்பது அவர் பொறுப்புத்தான். கடைகளில் விளம்பரப் பலகைகளில் காணப்படும் தமிழ்ச் சொற்களைப் பிறர் உதவியுடன் கேட்டு அறிந்துகொள்வார். மீண்டும், மீண்டும் அவற்றை மனத்தில் இருத்தி ஞாபகப்படுத்திக் கொள்வார். இப்படியாக கடைவீதி அறிவிப்புப் பலகைகளே அவருக்குத் தமிழ் கற்பித்தன.

    தமிழ் அறிஞர்களிடம் இருந்து நூல்களைக் கடனாக வாங்கிப் படிப்பார். இவரது குன்றாத ஆர்வத்தைக் கண்டு வியந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் புத்தகங்களை அவர் படிக்க இரவல் கொடுத்தார்கள்.

    இரவல் வாங்கிய புத்தகங்களை இரவில் படித்தார் பாவலர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், தேசிங்குராஜன் கதை, அல்லி அரசாணி மாலை போன்ற பல நூல்கள் அவருக்கு அவ்விதம் படிக்கக் கிடைத்தன.

    பாவலரிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்தப் புத்தகம் கைக்குக் கிடைத்தாலும் அவற்றை அன்றே முழுமையாகக் கற்று மனப்பாடம் செய்துவிடுவார். பிறகு அவருக்கு அந்த நூலைப் பற்றிய செய்திகளுக்கு நூல் தேவைப்படாது. நூல்தான் அவர் மனத்திற்குள் வந்துவிட்டதே?

    மறுநாளே தாம் கற்ற நூலைத் திருப்பிக் கொடுத்து விடுவார். அடுத்த புத்தகத்தைப் படிக்கக் கேட்பார். இப்படி ஒவ்வொரு நாளும் தாம் புதிதாக அறிந்துகொண்ட கதைகளை இரவில் தன் தாயிடம் கூறுவார் பாவலர். தாய் அமீனா தன் மகன் கூறும் கதைகளைக் கேட்டு மகிழ்வார். இது நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக இருந்தது.

    நெசவுத் தொழில் சார்ந்த கணக்குகளை மனதிற்குள்ளே கணக்கிட்டு உடன் விடையைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார் பாவலர். ஒருநொடியில் கணிதத்தில் விடை சொல்லிவிடுவார். மிக நீண்ட எண்களைக் கூட ஒரு நொடியில் மனத்திலேயே கூட்டி அவர் சரியான விடையைச் சொல்வதைப் பார்த்துப் பலர் வியந்திருக்கிறார்கள்.

    மெல்ல மெல்லப் பல இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தொடங்கினார். நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், நைடதம் போன்ற நூல்களைக் கற்று அவற்றில் நிபுணரானார். சிறந்த கவிஞரான அவர், சித்திரக் கவிகள் தீட்டும் ஆற்றலும் பெற்றிருந்தார்.


    திருப்பூர் கிருஷ்ணன்

    பாவலரின் ஆசிரியரான சங்கரநாராயண அண்ணாவி அவரது மொழி ஆளுமையை உணர்ந்து `நாயகத்தின் சீர்களெல்லாம் நன்கு' என்னும் ஈற்றடிக்கு வெண்பா பாடுமாறு கூறினார்.

    "பந்தம் அகல, பரியும் மனமுருக

    செந்தமிழ்ச் சீறா தெரிக்குமே - முந்திநம்

    தாயகத்தின் ஓங்கு தவமுகம்ம தென்னுநபி

    நாயகத்தின் சீர்களெல்லாம் நன்கு"

    என்று உடனே நேரிசை வெண்பா பாடி ஆசிரியரை வியப்பிலாழ்த்தினார். வெண்பா மட்டுமல்ல, அந்தாதி, சிலேடை, யமகம், திரிபு போன்ற அணிகளெல்லாம் அமையுமாறு பல கவிகளைப் பாடினார்.

    உமறுப் புலவர் எழுதிய சீறாப் புராணத்துக்கு உரையெழுதிப் பதிப்பித்தார். 'தேவலோகத்துக் கிரிமினல் கேசு, வேதாந்த கிரிமினல் கேசு, சீறா நாடகம், நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம்' என்றிப்படியான பல நூல்களை எழுதினார்.

    `இஸ்லாமிய மித்திரன், யதார்த்தவாதி` என்னும் செய்தித் தாள்கள் மூலமாகச் சமூகத் தொண்டும் ஆற்றினார்.

    அவரது பேச்சாற்றலை உணர்ந்து தமிழ் நாட்டின் பல இடங்களில் அவரைப் பேச அழைத்தார்கள். கேட்போர் வியக்கும் வண்ணம் தங்குதடை இல்லாமல் அவரால் உரையாற்ற முடிந்தது. அவர் பேச்சை ஒருமுறை கேட்டவர்கள் மறுபடி மறுபடிக் கேட்க விரும்பினார்கள்.

    இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சுதந்திரப் போர் உருக் கொண்டது. பாவலர் மகாத்மா காந்தியாலும் அவரது கொள்கைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார்.

    கதராடை மட்டுமே அணிந்த அவர், காந்தியடிகளின் கொள்கைகளையே வாழ்விலும் பின்பற்றினார். பற்பல இடங்களில் மேடைகளில் உரையாற்றி மக்களிடையே தேச பக்தியைத் தூண்டினார்.

    இவரது பேச்சாற்றலால் கவரப்பட்ட மக்கள் இவருக்கு 'தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், கலைக்கடல்' ஆகிய பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

    மதுவிலக்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார் பாவலர். மதுவிலக்கை ஆதரித்துப் பல மேடைகளில் மதுவிலக்குப் பிரசாரம் செய்தார். மூளையை மழுங்கச் செய்து உடல்நலனைக் கெடுக்கும் மதுவைத் தமிழர்கள் தொடக் கூடாது என்ற கொள்கையில் அவர் தீவிரமாக இருந்தார்.

    பெண்ணுரிமையில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் பெண்ணின் அறிவையும், பெருமையையும் விளக்கிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    தமிழில் அஷ்டாவதானிகள் என்று ஒருசிலர் உண்டு. சதாவதானிகள் மிக மிகச் சிலரே. ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது அஷ்டாவதானம். அதுபோல் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்வதே சதாவதானம். சதாவதானம் மிக அரியதொரு கலை.

    பாவலர் சதாவதானக் கலையிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அடைமொழியோடு அவர் அழைக்கப்பட்டார்.

    பாவலர் தன் 31-வது வயதில் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அறிஞர்கள் முன்னிலையில் இச்சதாவதான நிகழ்ச்சியை 1907-மார்ச் 10-ம் நாளில் நிகழ்த்தினார்.

    ஆசுகவிபாடல், தமிழ் இலக்கிய இலக்கண வினாக்களுக்கு விடை சொல்லல், ஈற்றடிக்கு வெண்பா பாடுதல், பாத்திரங்களின் ஒலியால் அவற்றின் எடையைக் கூறுதல், மணி ஒலியின் எண்ணிக்கை கூறுதல், தம் மேல் விழும் மலர்களின் எண்ணிக்கையைக் கூறுதல், ஆயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட நாளின் கிழமை, நட்சத்திரம் போன்றவற்றைக் கூறல் என்று இப்படி நூறு வகையான நிகழ்வுகளிலும் ஒரே நேரத்தில் சதாவதானி பங்கேற்க வேண்டும்.

    நூறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் சதாவதானக் கலையில் வென்றவராகக் கருதப்படுவார். அப்படி வென்றால் மட்டுமே சதாவதானி என்ற பட்டமும், பொற்கிழியும் அவருக்கு வழங்கப்படும்.

    தம்மிடம் கேட்கப்பட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்றார் பாவலர். ஆனால் ஒருவர் முகமதியரான அவரிடம் `துருக்கனுக்கு ராமன் துணை` என்ற ஈற்றடியில் வெண்பா பாடுமாறு வேண்டினார். அவையினர் திகைத்தார்கள். எனினும் பாவலர் அயரவில்லை.

    `பக்தர்களுக்கெல்லாம் ராமன் துணை. அவன் தம்பியரான பரதனுக்கு லட்சுமணனுக்கு, சத்-துருக்கனுக்கு ராமன் துணை' என்று பொருள் வருமாறு சமத்காரமாகப் பாடி முடித்தார். அவை கைதட்டலால் அதிர்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    அவதானம் நிறைவுற்ற பின்னர் சுப்பிரமணிய அய்யர், இவர் மகமதியர் அல்ல, மகாமதியர் எனக் கூறி `மகாமதி' எனப் பட்டம் வழங்கினார்.

    வித்துவான் கண்ணபிரான் முதலியார் பாவலருக்கு 'சதாவதானி' என்ற பட்டம் வழங்கிப் பெருமை சேர்த்தார். சதாவதானப் போட்டியில் வென்றமைக்காக அவருக்குப் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

    பாவலர் தம் மதத்தில் பற்றுடையவயராயினும் பிற மதம் சார்ந்தவர்களை உடன் பிறந்தவராகக் கருதியவர். பாவலரிடம் பழகியவர்களும் கற்றவர்களும் இந்து சமயத்தவராக இருந்தனர். அவரும் இந்து சமயப் பண்பாட்டைப் போற்றினார்.

    1950 பிப்ரவரி 13-ம் நாள் அவர் காலமானார். தமிழ் உலகமே இவரது மறைவை எண்ணி வருந்தியது. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

    "ஓரும் அவதான் ஒரு நூறும் செய்திந்தப்

    பாரில் புகழ்படைத்த பண்டிதனை - சீரிய

    செந்தமிழ்ச் செல்வனை, செய்குதம்பிப் பாவலனை

    எந்தநாள் காண்போம் இனி"

    எனத் தம் துயரத்தை வெளிப்படுத்தி அஞ்சலி வெண்பா எழுதினார். அவரது நினைவாக அவர் பிறந்து வாழ்ந்த வீதிக்கு பாவலர் தெரு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இடலாக்குடி அரசுப்பள்ளிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர் பெயரால் ஒரு மணிமண்டபமும் நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசு அவருக்குத் தபால்தலை வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது.

    இந்திய சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவர், அப்பழுக்கற்ற காந்தியவாதியாகத் திகழ்ந்தவர், அரிய கலையான சதாவதானத்தில் ஆற்றல் பெற்றவர். தமிழுலகில் ஒரு நட்சத்திரமாக அவர் பெயர் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    Next Story
    ×