என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பருவ வயதை பெண் குழந்தைகள் பக்குவமாக கடந்து செல்வது எப்படி?
- பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது.
- பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது.
பருவ வயதை தொடும் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அந்த வயதில் சில பெண்கள் தடம்மாறி செல்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது பெற்றோர் களின் பொறுப்பாகும்.
தவறு என்று தெரிந்தும் தவிர்க்க தெரியவில்லை:
தங்கள் பெண் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களிடம் கூட பெற்றோர்கள் கலந்தாலோசனை செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் சிறந்த வழிமுறைகளை கூறலாம். இது தொடர்பாக கவுன்சிலிங் அளிப்பதற்காகவும் மருத்துவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்வார்கள். இதன் மூலம் கல்வி பெறாத பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பருவ வயதை பக்குவமாக கடந்து செல்வதற்கு உதவ முதல் படியை எடுத்து வையுங்கள்.
பருவ வயதில் ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது தொடர்பாக, அந்த வயதில் உள்ள சில பெண் குழந்தைகள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் பல நேரங்களில் அவர்களுக்கு இது தவறு என்று தெரியும். ஆனாலும் அவர்களுக்கு அதில் ஒருவித ஆர்வம் ஏற்படும். அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று என்னிடம் பல குழந்தைகள் கேட்டுள்ளனர்.
அதாவது அது தவறு என்று தெரிகிறது, ஆனால் அதை எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை என்பார்கள். இந்த காலகட்டத்தில் இதை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு தாய்மார்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பருவ வயது குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கான வாழ்க்கை முறைகளில் சில விஷயங்களை, அவர்களின் நடைமுறையை பார்த்து அதற்கு ஏற்ப வரையறுக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு பெரிய அளவில் மனரீதியான குழப்பம் வந்துவிடும். இது தப்பு என்று அவர்களுக்கு தெரியும். அதாவது 15, 16 வயதில் ஆண்கள் மீது வரும் ஈர்ப்பு நல்லது இல்லை என்று தெரியும், ஆனால் அவர்களுக்கு அதைத்தான் செய்ய வேண்டும் என்று தோன்றும்.
கல்வி கற்கும் குழந்தைகளுக்கு தெளிவான சிந்தனை:
இதுபோன்ற குழந்தைகள் இதில் இருந்து கடந்து வருவதற்கு பல வழிமுறைகள் உண்டு. இவர்களை வழிமுறைப்படுத்துவதற்கு முக்கிய மான சில விஷயங்கள் உள்ளன. அவர்களின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் எது முக்கியமான தேவை என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் திரும்பத் திரும்ப அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளும் தங்களின் எதிர்கால இலக்கு என்ன என்பதை கண்டிப்பாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது. அந்த மாதிரியான பெண் குழந்தைகள் பருவம் அடைந்து வீட்டில் இருக்கும் போது தேவையில்லாத சிந்தனைகள், சமூக வலைதளங்கள் பார்த்து வருகிற எண்ணங்கள் ஆகியவை அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடும். ஆனால் கல்வியை கொடுக்கும்போது இது போன்ற குழந்தை களுக்கு இதைப்பற்றி ஒரு தெளிவான சிந்தனை வரும்.
எனவே அவர்களுக்கு படிப்பதற்காக நல்ல புத்தகங்களை கொடுக்கலாம். நல்ல நிலையில் அதிகாரத்தில் உள்ள நிறைய பெண்களின் வரலாற்று புத்தகங்களை கொடுக்கலாம். அதைப்பற்றி ஆர்வமூட்டும் கதைகளை அவர்களுக்கு சொல்லலாம். இவையெல்லாம் மிகவும் எளிமையான முறைகள் ஆகும். பருவ வயது காலகட்டத்தில் ஒரு பெண் வாழ்க்கையை எப்படி நல்ல முறையில் கடந்து வந்தார், எப்படி ஒரு பெண் இந்த காலகட்டத்தில் தவறான வழியில் சென்று சிக்கலை சந்தித்தார் என்பதை எடுத்து சொல்லலாம்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
உதாரணங்களுடன் கூடிய நிஜ வாழ்க்கை கதைகள்:
உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் இணைய தளங்களில் பெண்களின் முன்னேற்றம் பற்றி நல்ல பதிவுகள் பல உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து பார்த்தால் அவர்களுக்கு பல விஷயங்கள் புரியும். பருவ வயது பெண் ஒருவர் இந்த மாதிரியான ஒரு ஈர்ப்பு, காதல் விவகாரம் என்று வரும்போது, எப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கடந்து சென்றார், கல்வியில் சிறந்து விளங்கி நல்லதொரு வாழ்க்கையை எப்படி தேர்ந்தெடுத்தார், வாழ்க்கையில் எப்படி முன்னேறினார் என்று சாதித்த பெண்களின் நிஜ கதைகள் இருக்கும்.
அதேபோல் சாதித்த பெண்ணுடன் படித்த இன்னொரு பெண், பருவ வயதில் ஒரு தவறான உறவில் விழுந்து, காதல் விவகாரத்தில் சிக்கி, இளம் வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்று, வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பலவித இழப்புகளை சந்தித்து, வாழ்க்கையில் முக்கியமான எதிர்காலத்தை இழந்து, எப்படி மோசமான நிலைக்கு சென்றார் என்கிற உண்மையான சம்பவங்களும் கதைகளாக இருக்கும். இந்த கதைகள் பருவ வயது பெண்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலவிதமான உதாரணங்களுடன் கூறப்பட்டு இருக்கும்.இதை எடுத்து உங்கள் குழந்தைகளுக்கு படிக்க கொடுக்கலாம்.
அவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்வதை விட இந்த மாதிரியான விளக்கங்களை கொடுக்கலாம். இதுபோன்ற கதைகளை பருவ வயது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் எடுத்து படிக்க கொடுக்கலாம். பெற்றோர்களுக்கு இதுபற்றி தெரியவில்லை என்றால், தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம். இது பெற்றோர்களின் முக்கியமான கடமை.
இவற்றை கொடுக்கும்போது அந்த பெண் குழந்தைகளுக்கு இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்கான மன மாற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் படிப்பு என்பது, தனது வாழ்க்கையின் லட்சி யத்தை அடைவதற்கு மிகவும் முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர வைக்கும்.
இந்த காலகட்டத்தில் நாம் படிப்பில் கவனம் செலுத்தாமல் திசை மாறி சென்று, வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற உணர்வுகளை இந்த மாதிரியான சம்பவங்களும், கதைகளும் அவர்களுக்கு புரிய வைக்கும். தவறான விஷயத்தை செய்யாதே என்று கூறி அதனால் வருகிற விளைவுகளை நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளக்கங்களோடும், சில உதாரணங்களோடும் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.
மனநிலை உணர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும்:
இந்த காலகட்டத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஆதரவு என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தோழிகளிடம் தான் முக்கிய மாக பகிர்ந்து கொள்வார்கள். அவர்களிடம் போய் சொல்லும் போது அவர்களுக்கு இவர்களை சரியாக கையாள தெரியாது. அவர்கள் இந்த குழந்தைகளை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது.
எனக்கு ரொம்பவும் மன அழுத்தமாக இருந்தது. அதனால் புகைபிடித்தேன். இப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்பார் கள். இவர்களும் அதேபோல் செய்ய ஆரம்பித்தால் பிரச்சினைதான் ஏற்படும். ஒரு சினிமா பார்க்கும் போது பெரியவர்கள் அதில் வரும் ஒரு விஷயத்தை பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். இளம் பருவத்தினர் பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். குழந்தைகள் பார்ப்பது இன்னொரு மாதிரி இருக்கும்.
இப்படி இவர்களின் பரிமாணங்களோ, ஏற்றுக்கொள்கிற தன்மையோ வித்தியாசமாக இருக்கும்போது, பருவ வயதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால் ஒரு பொதுவான விஷயம், இது தவறான ஒன்று என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும். இந்த விஷயம் தவறு என்று புரிந்தால் இதை தவிர்க்க முயல்வார்கள். அதற்கு மேல் ஆர்வம் இருந்தால் கூட அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது. ஆனால் அது ரொம்பவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் சொல்லும் போது சரி என்பார்கள். அதன்பிறகு அவர்கள் அதை வேறு மாதிரி யோசிப்பார்கள். இது சரியா, தவறா என்பது போல அவர்களின் மனநிலை உணர்வுகள் இருக்கும். அவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாத மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.
இதில் சிலர் என்ன செய்வது என்று தெரி யாமல் கவலையுடன் இருப்பார்கள். சிலருக்கு இது சோகமான விஷயங்களாக இருக்கும். சிலர் அதில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழிமுறை இருக்கிறது என்று யோசிப் பார்கள். எனவே அவர்களுக்கு இந்த பருவ வயது காலகட்டத்தை கடந்து வரு வதற்கான வழிமுறைகளை நாம் கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் என்ன...? அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.






