என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை
    X

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    • உ.வே.சா. தமது குருவான இவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளார்.
    • உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பற்பல வடிவங்களில் செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்.

    உண்மையான வித்வான்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மகாவித்வான் தமிழில் ஒருவர் உண்டு. அவர்தான் தலபுராண வேந்தர் என்று தமிழறிஞர்களால் கொண்டாடப்படும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

    காலத்தால் காணாமல் போகவிருந்த சங்க இலக்கியங்களைத் தொகுக்க வேண்டி ஏடுதேடி நடந்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் குருவாக விளங்கிய பெருமையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உண்டு.

    பிள்ளையவர்களின் வாழ்க்கை பல வியக்கத்தக்க சம்பவங்களை உள்ளடக்கியது. நெஞ்சை உருக்கும் நினைவுகளுக்கும் அவர் வாழ்வில் பஞ்சமே இல்லை.

    உ.வே.சா. தமது குருவான இவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளார். எவ்வளவு தூரம் தமிழே வாழ்வாக வாழ்ந்த தமிழறிஞர் அவர் என்பதை அந்த நூலைப் படித்து அறியலாம். தமிழ்த் தாத்தா எழுதியுள்ள அந்த நூலின் ஒவ்வொரு சொல்லும் அவரது குருவான பிள்ளையவர்களின் பெருமையை உணர்த்தும்.

    தவிர உ.வே.சா.வின் தன் வரலாறான `என் சரிதத்திலும்` மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய பல முக்கியமான குறிப்புகள் உண்டு.

    எண்ணற்ற கோயில்களின் பழைய வரலாறுகளை ஆராய்ந்து தல புராணங்களை அழகிய செய்யுள்களில் எழுதிக் குவித்தவர் இவர். தம் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியை அவர் சோர்வில்லாமல் செய்து வந்தார். இதன் காரணமாக தலபுராண வேந்தர் என அழைக்கப்படும் பெருமையும் இவருக்கு ஏற்பட்டது.

    சிதம்பரம் பிள்ளைக்கும் அன்னத்தாச்சி அம்மையாருக்கும் 1815 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த தேர்ச்சியோடு விளங்கினார். உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பற்பல வடிவங்களில் செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார். பழைய இலக்கண வகைகள் பலவற்றிற்கு அவர் புத்துயிர் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

    பக்தி இலக்கியத் துறையில் கற்பனை வளத்திற்காகக் `கற்பனைக் களஞ்சியம்` எனக் கொண்டாடப்பட்டவர் பிரபுலிங்க லீலை உள்படப் பல அரிய நூல்களின் ஆசிரியரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள். அவரைப் போலவே மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் கூடத் தமது அழகிய புத்தம்புதுக் கற்பனைகளால் பக்தி இலக்கியத் துறையை வளப்படுத்தியவர்.

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தாம் எழுதிய நூல்களை ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார் என்று சொல்வதை விடவும் அருவியாய்க் கொட்டினார் என்று சொல்வதே பொருந்தும். பேச்செல்லாம் கவிமழையாய்ப் பொழியும் மாபெரும் மேதைமை அவருடையது.

    நிற்கும்போது தமிழ் அவருடன் துணை நின்றது. நடக்கும்போது தமிழ் அவரோடு நடைபயின்றது. நின்றவாறும் நடந்தவாறும் தாமே எழுத்தாணி கொண்டும் தம் உதவியாளரிடம் சொல்லியும் அவர் படைத்த நூல்கள் பலப்பல.

    சிதம்பரம் பிள்ளை என்னும் கனவான் பிள்ளையவர்களை நோக்கி, "திருவானைக்காவில் உறையும் ஸ்ரீ அகிலாண்டேசுவரி மீது ஒரு மாலை இயற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    அப்பொழுது உடன் வந்த ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் ஒருமுறை வலம் வருவதற்குள் சோணாசல மாலையைப் பாடி முடித்தார். அதுபோல நீங்கள் திருவானைக்காவில் உள்ள சம்புநாதரைத் தரிசனம் செய்து திரும்புவதற்குள் அம்மாலையைச் செய்வதற்கியலுமா?" என்று கேட்டார். இது பிள்ளையவர்களின் கவிப்புலமைக்கு விடப்பட்ட நேரடியான சவால்.

    அடக்கமே உருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நேருமானால் செய்யலாம் என்று பணிவோடு பதில் கூறினார்.

    அன்று திருவானைக்கா பிரகாரத்தைச் சுற்றிவரும் போது அகிலாண்டேஸ்வரியின் அருளால் அவரிடமிருந்து செய்யுள்கள் பொங்கிப் பிரவகித்தன.

    அப்படிச் சுற்றி வருவதற்குள் பாடி முடித்த பெருமைக்குரிய செய்யுள் நூல்தான் `அகிலாண்ட நாயகி மாலை` என்னும் தமிழ் நயம் செறிந்த அரிய நூல். சவாலை முன்வைத்தவர் அளவற்ற பிரமிப்போடு அவர் காலில் விழுந்து பணிந்தார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஒருமுறை திருச்சியில் இருந்து நடந்தே திருச்சி அருகே உள்ள உறையூர் சென்று கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். வழியில் ஒரு வாய்க்கால் தென்பட்டது. நேரமோ அதிகாலை நேரம்.

    பல் துலக்குவதற்காக அங்கு நின்று ஆலங்குச்சியை எடுத்துப் பல் துலக்கத் தொடங்கினார். சில வழிப்போக்கர்கள் அதைப் பார்த்தவாறு அவரைக் கடந்து சென்றார்கள்.

    சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வழிப்போக்கர்கள் அதே வழியில் திரும்பி வந்தார்கள். என்ன வியப்பு. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அங்கேயே கையில் பல் துலக்கும் குச்சியோடு சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார்.

    திகைப்படைந்த வழிப்போக்கர்கள் அவரிடம் `பெருமானே! உதய காலம் முதல் வெய்யில் வரும் வரையில் பல் துலக்குவது ஏன்?` என்று ஆச்சரியத்தோடு வினவினார்கள்.

    அப்போதுதான், எழுதவிருக்கும் கவிதைகளைப் பற்றிச் சிந்தித்தவாறே நெடுநேரம் பல் துலக்கியிருக்கிறோம் என்பது பிள்ளையவர்களுக்கு உறைத்தது.

    அவர் நகைத்தவாறே தலைப்பாகையில் செருகியிருந்த ஓலைகளையும் எழுத்தாணியையும் எடுத்து அங்கேயே அமர்ந்து தங்குதடை இல்லாமல் வெள்ளம்போல் கடகடவென்று பாடல்கள் எழுதலானார்.

    சிறிது நேரத்தில் அவர் எழுத்தாணியில் இருந்து முழுமையாக உருவாகியது தியாகராச லீலை என்னும் புத்தம் புதிய செய்யுள் நூல். அந்த அதிசயத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் திகைத்தார்கள். தேவரீர் சரஸ்வதி கடாட்சத்தை முழுமையாகப் பெற்றவர் எனக் கூறி அவரை இருகரம் கூப்பி வணங்கினார்கள் அவர்கள்.

    மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிவனை வழிபடும் சைவர். அவர் சிவாலயங்களுக்குத் தான் தலபுராணங்கள் எழுதினார். அவரது அப்பழுக்கற்ற சிவபக்தியின் வெளிப்பாடே அவர் எழுதிய தலபுராணங்கள் என்று சொல்லலாம்.

    ஒருமுறை விஷ்ணு ஆலயம் ஒன்றிற்குத் தல புராணம் இயற்ற வேண்டும் என அவருக்கு ஒரு வேண்டுகோள் வந்தது.

    சிவ பக்தரான பிள்ளையவர்கள் ஒருபோதும் திருமாலை நிந்தனை செய்தவர் அல்லர். ஆனாலும் சிவனடியாரான தான் விஷ்ணு கோவிலுக்குத் தலபுராணம் எழுதுவது பொருத்தமாக இராது என எண்ணியது அவரது உள்ளம்.

    திருமால் அடியவரான வேங்கடாசல முதலியாரிடம் விஷ்ணு புராணத்தை எழுதிப் பெறுவதே பொருத்தம் எனக் கூறி அந்தப் பணியை இன்னொருவர் செய்யுமாறு பரிந்துரைத்தார் பிள்ளை.

    `தன்பெருமை தானறியாத் தன்மையன்` என்று சில அறிஞர்களைப் பற்றிச் சொல்வதுண்டு. இந்தக் கூற்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குப் பெரிதும் பொருந்தும்.

    எண்ணற்ற செய்யுள்களை எழுதிக் குவித்த பிள்ளையவர்களுக்குத் தாம் எழுதிய செய்யுள்கள் பல மறந்துபோன சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு செய்யுளை ஒருவர் சொன்னபோது `அடேடே. இந்தக் கற்பனை மிகச் சிறப்பாக உள்ளதே, இச்செய்யுள் எதில் உள்ளது?` என வியப்போடு வினவினார் பிள்ளை.

    `தாங்கள் இயற்றிய கும்பகோண புராணத்தில்தான் இந்தச் செய்யுள் உள்ளது` எனப் பணிவோடு பதில்சொன்னார் அவரது சீடர்! பிள்ளையவர்களின் மனம் வியப்பில் ஆழ்ந்தது.

    மாபெரும் கவியாற்றலோடு திகழ்ந்தாலும், ஒருபோதும் அவர் கர்வம் கொண்டதில்லை. `சிவபெருமான் என் மூலம் தன்னைப் பற்றி எழுதுவித்துக் கொள்கிறான்` என்றே அவர் மனப்பூர்வமாகக் கருதினார்.

    மயிலாடுதுறையில் தமிழாசிரியராக வாழ்வைத் துவங்கினார் பிள்ளை. தம்மை நாடிவந்த மாணவர்களுக்குத் மிகுந்த ஈடுபாட்டோடு தமிழ் இலக்கியம் கற்பித்தார். தமிழைக் கற்பிப்பதில் அவருக்குப் பேரார்வம் இருந்தது.

    அவர் வாழ்ந்த காலகட்டத்தில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மிகக் குறைவு. சங்க காலம் தொட்டுத் தமிழ்ப் புலவர்களின் இல்லங்களில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும் வறுமை அவர் இல்லத்திலும் குடியேறத் தவறவில்லை. வாழ்நாள் முழுதும் பொருளாதாரச் சிக்கல் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.

    திருவாவடுதுறை ஆதீனத்தில் பணிபுரிந்தவர் அவர். பிள்ளையவர்கள் காலமானபின் இவருக்கிருந்த கடனை அறிந்து இவர் மகனை வரச்சொல்லி கடன் கொடுத்தவர்களையும் வரச்சொல்லி எல்லாக் கடனையும் திருவாவடுதுறை ஆதீனம் அடைத்தது.

    பிள்ளையவர்களுக்கென்று சலுகை செய்ததாய்ப் பின்னாளில் யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக அவர் வீட்டிலிருந்த அவரது நூல்கள் அனைத்தையும் செய்த உதவிக்குப் பிரதியாக ஆதீனமே பெற்றுக் கொண்டது.

    `இன்று மடத்திலேயே ஆகாரம் பண்ணினமையால் பலநாள் கழித்து இன்று நெய் கிடைத்தது` என்று உ.வே.சா.விடம் இவர் சொன்னதாக உருக்கத்துடன் உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார்.

    நெய்ச்சோறு உண்ண இயலாத அளவு பொருளாதார சிரமங்கள் இவருக்கு இருந்தன. ஆனால் தம் வறுமையை என்றும் இவர் ஒரு பொருட்டாய் எண்ணியதில்லை. தமிழே வாழ்வாக வாழ்ந்தவர் பிள்ளை.

    மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொல்லச் சொல்ல அவர் சொல்லும் கவிதைகளை ஏட்டில் எழுதிவந்தார் ஓர் உதவியாளர். நான் எழுதும் வேகத்திற்கு அவரால் செய்யுள் சொல்ல இயலவில்லை என்று அவர் தம் நண்பர் ஒருவரிடம் அங்கலாய்த்தார் அவர். அந்த விவரத்தை அறிந்துகொண்டார் பிள்ளையவர்கள்.

    மறுநாள் அந்த உதவியாளர் வந்தபோது, கடகடவென மடைதிறந்தாற்போல் பிள்ளை கவிசொல்லத் தொடங்கினார். அதைப் பிரதியெடுக்க இயலாமல் திகைத்துப் போன அந்த உதவியாளர் பிள்ளையவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

    எழுதுபவரின் கைவலிக்கக் கூடாதே என்பதற்காகத்தான் பிள்ளையவர்கள் கருணையோடு நிதானமாகச் செய்யுள் சொல்லி வந்தார் என்ற விவரத்தை அப்போதுதான் அறிந்துகொண்டார் அந்த உதவியாளர்.

    தம் உள்ளத்தில் பொங்கி வந்த தமிழை ஓலைச் சுவடியில் இறக்கி வைத்த பெரும் புலவரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு காலமானார்.

    இன்றளவும் அவர் எழுதிய அளவு அத்தனை அதிக எண்ணிக்கையில் செய்யுள்கள் எழுதியவர் யாருமில்லை என்பதே அவர் பெருமையைப் புலப்படுத்தும்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    Next Story
    ×