என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அன்பால் ஆக்கிரமிப்போம்!
    X

    அன்பால் ஆக்கிரமிப்போம்!

    • அடுத்தவர் சொத்துக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஆசைப்படுவதே இந்த ஆக்கிரமிப்புச் செயல்களுக்குக் காரணமாக அமைகிறது.
    • நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்து விடுகிறது.

    அன்பால் ஆக்கிரமித்துப் பாசமிகு அரவணைப்பை நல்குவதில் அக்கறை காட்டும் அன்பு வாசகர்களே வணக்கம்!

    நமக்கு உரிமையும் சொந்தமும் இல்லாத பொருள்களை அபகரிப்பதும், நிலங்களில் இடங்களில் அத்துமீறல் செய்வதும் ஆக்கிரமிப்பு ஆகும். அடுத்தவர் சொத்துக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஆசைப்படுவதே இந்த ஆக்கிரமிப்புச் செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. வயல்களையும் காடுகளையும் வரப்புகளும், வேலிகளும் எல்லைக்கோடுகளாக நின்று பிரிக்கின்றன. என்றாலும், அடுத்தவர்க்குத் தெரியாமல் அன்றாடம் வாய்க்கால்களைச் சீர்பண்ணுவதாக வரப்புகளை நகர்த்திப்போடுவதும், வேலிகளைத் தள்ளிப்போட்டுப் பொது இடங்களை வளைத்துப் போடுவதும் ஆக்கிரமிப்பு ஆகும்.

    பொது நிலையில், சாலையோரங்களில் இருக்கின்ற மைதானங்கள், விவசாயக் களங்கள், ஏரி, குளம், கண்மாய், ஆறுகள் போன்ற நீர்நிலைகளின் மேட்டுப் பாங்காக இருக்கின்ற கரைப்பகுதிகள், கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், சாலையோரங்களின் இருபுறமும் மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் இங்கெல்லாம் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகிறது. சிறிது சிறிதாகக், கற்களைப் போடுவது, குடிசைகளைப் போடுவது, தள்ளுவண்டிகள் நிறுத்துவது, குப்பைகளைக் கொட்டுவது ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்புகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாய்க்கால்களையும் வரப்புகளையும் ஆக்கிரமிப்புச் செய்ததற்காக, வழக்குத் தொடர்ந்து, வழக்கை நடத்துவதற்காக வயல்களையே இழந்தவர்களும் உண்டு.

    ஆக்கிரமிப்பு என்பது, உள்ளூர் அளவில் நடைபெறும் வரப்புத் தகராறு மற்றும் வாய்க்கால் தகராறு மட்டுமல்ல; சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் அண்மைக்கால வரலாறு ஆகும். படைகளைக் கொண்டுவந்து அடுத்த நாட்டின் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நிறுத்துவது, போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றவையும் ஆக்கிரமிப்பின் ஒரு வகை மிரட்டலே ஆகும். இடம், பொருள் சார்ந்து ஆக்கிரமிப்புச் செய்பவர்கள் தவிர வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல்களில் ஆக்கிரமிப்புச் செய்கின்ற சர்வாதிகார நாடுகளும் உண்டு. இம்மாதிரியான ஆக்கிரமிப்புகளால், பாதிக்கப்படும் நாடுகள், பொருளாதார ரீதியான இழப்புகளையும், நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்து விடுகிறது.

    ஆக்கிரமிப்புகள், பொருளாதார ரீதியான லாப நஷ்டங்களைச் சார்ந்திருந்தாலும், பல நேரங்களில் மனரீதியான அற்ப சந்தோஷங்களையும், வீண் உளைச்சல்களையும் உருவாக்கவே செய்கின்றன. நகரப்பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடப் போகிறவர், ஓடிப்பிடித்து, இரண்டு இருக்கை இடத்தில், ஒன்னரை இருக்கை அளவுக்கு அகலித்து அமர்ந்து கொண்டு, பக்கத்தில் அமருபவர் உட்காரச் சிரமப்பட்டு நெளிகிற கஷ்டத்தைக் கண்டு மகிழ்கிற அற்ப நிகழ்வுகளும் உண்டு. கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்! என்று பணிவாகச் சொன்னாலும், 'இது என்ன உன் அப்பன் வீட்டு இடமா?' என்று சண்டைக்கும் வந்து விடுவார்கள். அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறவருக்கு அடுத்தவர் இடத்தை ஆக்கிரமிப்பதில் எவ்வளவு ஆர்வம் பாருங்கள்.

    லட்சக்கணக்கில் பணம்போட்டு, இடம்வாங்கி வீடு கட்டுவார்கள். தெருப்பாதையோடு, நெருக்கி, அத்துக், கட்டடம் கட்டி விடுவார்கள்; இரண்டாயிரம் சதுர அடியில் வீடு கட்டினாலும், வீட்டு வாசலுக்கான படிகளைத் தெரு இடத்தை ஆக்கிரமித்தே அமைத்திருப்பார்கள். படிகள்தாம் ஆக்கிரமிப்பு என்றால், மேலே முதல்மாடி பால்கனியும் மேலேகூடி, கால்வாசித் தெருவுக்கு நீட்டி அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் நடக்கிற பாதையாயிற்றே, நடக்கும்போது அவர்கள் சிரமப் படுவார்களே! என்கிற அக்கறை சிறிதுமில்லாமல், ஆக்கிரமிப்புச் செய்ததில் ஆனந்தத்தோடு இருப்பார்கள். வீட்டிடத்தில் கார் பார்க்கிங் வைக்காமல், வெளியே பாதித் தெருவை அடைத்தே காரை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

    சுந்தர ஆவுடையப்பன்


    நகரத் தெருக்களில் வாகனங்கள் செல்வதே அரும்பாடு என்பதால், பாதை மேலே பாதை போட்டு, மேம்பால அமைப்புகளால் வழியை ஓரளவுக்குச் சீர் செய்திருக்கிறார்கள். சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் சிரமமின்றி நடந்து போவதற்கு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் நடந்து செல்லவே வாய்ப்பில்லாமல், நடைபாதை முழுவதும் சிறுசிறு நடைபாதைக் கடைகளும், குறுக்கே மறுக்கே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களும் இடைஞ்சலாக உள்ளன. இதனால் சாலை விபத்துகள் பெருகுவதற்கு சாலையோர ஆக்கிரமிப்புகளே பெருங் காரணங்களாக அமைகின்றன.

    ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில், விவசாய நிலங்களாகவோ, கட்டடப் பகுதிகளாகவோ ஆக்கிரமிப்புகள் பெருகும்போது, அங்கு நீர்வரும் மூலங்கள் அடைபட்டுப் போகின்றன. என்றாவது ஒருநாள், பெரு வெள்ளமும் புயல் மழையும் விஸ்வரூபம் எடுக்கும்போது, ஆக்கிரமிப்புகளெல்லாம் அழிந்துபோகும்படி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப், பெரும் உயிர்ச்சேதமும், பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டு விடுகிறது. அந்த இக்கட்டு நேரத்தில், குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது என்று கூக்குரலிட்டுப் பயனில்லை. இந்த மாதிரி அழிவுகளிடமிருந்து வரும் முன் காக்க வேண்டுமென்றால், ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

    அவரவர்க்கு உரிமையானது, சொந்தமானது என்று நிலங்களும் பொருள்களும் பூமியில் உண்டு. மேலும் மேலும் அவற்றைப் பெருக்க வேண்டும் என்றால், அவற்றை நியாயமான முறையில் சம்பாதிப்பதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து, அடுத்தவர் சொத்தை அபகரிக்கவும், அனுபவிக்கவும் நினைப்பது ஆக்கிரமிப்பு மட்டுமல்ல; அது திருட்டும்கூட.

    "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

    கள்ளத்தால் கள்வேம் எனல்."

    திருட்டைப் பொறுத்தவரை, செய்தபிறகுதான் அது குற்றம் ஆகும் என்பதில்லை; மனத்தளவில் நினைத்து விட்டாலே அது திருட்டுத்தான்; தண்டனைக்குரிய குற்றமும் தான் என்பது வள்ளுவப் பெருங்கூற்று. ஆக்கிரமிப்பின் மூலமும், அபகரிப்பின்மூலமும், ஊடுருவலின் மூலமும் பெறுகிற செல்வம், முதலில் பெருகுவது போலப் பெருகிப், பிறகு எதுவுமற்று அழிந்துபோகும் என்பது வள்ளுவ எச்சரிக்கை.

    "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

    ஆவது போலக் கெடும்."

    ஒருவர் ஆடுவளர்க்க ஆசைப்பட்டுப், பத்து ஆடுகளைச் சந்தையில் வாங்கினார். ஆடுகளை மேய விடுவதற்கு ஊரோரமாக ஒரு புறம்போக்கு இடத்தில் பசுமையான புல்வெளி போதுமானதாக இருந்தது. அந்தப் புல்வெளி நிலத்தில் ஆடுகள் மேயும்போது பார்த்துக் கொள்வதற்கு, அருகில் நண்பனின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காலியிடம் இருந்தது. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டால், அருகிலிருந்து ஆடுகளைப் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். பகலில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அந்தக் காலியிடத்தில் ஒரு வெயில்கூரை அமைக்கத் தொடங்கினார். அவரது நண்பன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான். என் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள இடத்தை ஆக்கிரமித்துக் கூரை போடக்கூடாது என்று வாதிட்டான். இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்வதற்குத் தகுதியான ஒரு நீதிபதி பக்கத்து ஊரில் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டுப் பக்கத்து ஊருக்கு இருவரும் சென்றார்கள்.

    நண்பர்கள் இருவரும் பக்கத்து ஊருக்குள் நுழைந்து, அந்த நீதிபதிவீடு எங்கிருக்கிறது என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது அந்த வழியே தலையில் தண்ணீர்க்குடம் சுமந்தபடி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரிடம் அந்த நீதிபதி குறித்து நண்பர்கள் விசாரித்தார்கள். "நான்தான் அந்த நீதிபதி! உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்!" என்று நின்றது நின்றபடி கூறினார் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்திருந்த நபர். " ஐயா! மகிழ்ச்சி!

    முதலில் உங்கள் தலையில் இருக்கும் தண்ணீர்க் குடத்தை இறக்கிக் கீழே வையுங்கள். எவ்வளவு நேரம்தான் தலைச்சுமையோடு நிற்பீர்கள்; பிறகு எங்கள் வழக்கைச் சொல்கிறோம்!" என்றனர் நண்பர்கள். "இப்போது நாம் நின்று பேசிக்கொண்டிருக்கும் பாதை ஊர்ப் பொது இடம்; இங்கே குடத்தை இறக்கிக் கீழே வைத்தால், அது பொதுமக்கள் நடந்துசெல்ல இடைஞ்சலாக இருக்கும்; பரவாயில்லை! நான் தலையிலேயே குடத்தை வைத்துக் கொள்கிறேன்; உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்; நான் தீர்ப்புச் சொல்கிறேன்" என்றார். " மிக்க நன்றி ஐயா! வழக்கை நாங்கள் சொல்லாமலேயே தீர்ப்பை நீங்கள் எங்களுக்கு வழங்கி விட்டீர்கள்; நாங்கள் இருவரும் இனிச் சண்டை போடாமலேயே எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறோம்!" என்று கூறிவிட்டு நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

    ஊர்ப்பொதுப் பாதையோ, அல்லது அடுத்தவருக்குச் சொந்தமான இடமோ, அவற்றை நமது வசதிக்காக ஆக்கிரமிப்புச் செய்வதும், பயன்படுத்த நினைப்பதும் தவறு என்பதை அந்த நீதிபதி தலையிலிருக்கும் தண்ணீர்க் குடத்தை இறக்கி வைக்காமலேயே தீர்ப்பாகச் சொல்லிவிட்டார். நண்பனின் வீட்டிற்கு அருகில் ஆக்கிரமிப்புச் செய்யப் போவதில்லை என ஆட்டுக்கார நபரும் முடிவெடுத்து விட்டார். நீதிபதியின் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் வீண் ஆசைகளும், ஆக்கிரமிப்புகளும், மன சஞ்சலங்களும் வரவே வராது.

    வீட்டெல்லைகள் தொடங்கி, நாட்டெல்லைகள் வரை எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. சங்கத் தமிழர்கள், தங்களின் வாழ்விட எல்லைகளை, வாழ்வியல் நிலவியல் தன்மைகளுக்கு ஏற்பக், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்துக்கொண்டு வாழ்ந்தனர். அதனால் நேரிய வாழ்வும், நிலம் சார்ந்த தொழில்களும், குறைவற்ற செல்வமும், பெருகிடும் வளமும் அவர்களுடையதாக இருந்தன. அரசர்களும் அரசாங்கங்களும் தத்தமது நாட்டெல்லை களுக்குள் ஆட்சி அதிகாரங்களைச் செலுத்தி ஆண்டு வந்தனர். எல்லை மீறுதல் என்கிற நிலை உருவாகும் போதுதான், போர்களும் சண்டைகளும், பிரிவினைகளும் உருவாகத் தொடங்கின. பக்கத்து நாடாக இருந்தாலும், பக்கத்து வீடாக இருந்தாலும், பக்கத்து நிலமாக இருந்தாலும் எல்லை மீறினால் அது ஆக்கிரமிப்பாக மாறிவிடுகிறது.

    சாலையில் வாகனங்கள் செல்லும்போது, குறிப்பிட்ட வேகத்தைமீறி முந்திக்கொண்டு செல்வதுகூட ஆக்கிரமிப்புதான்; வரிசையில் நின்றிருக்கும் போது, இடையில் புகுந்து ஊடுருவி, வரிசைமுறை சீர்குலைப்பதும் ஆக்கிரமிப்புதான். பொது இடங்களில், பேருந்து, ரயில் பயணங்களில் அடுத்தவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கும்படி அத்துமீறி நடந்து கொள்வதும் ஆக்கிரமிப்புதான். பெரு விருந்துகளில் அளவறிந்து உண்ண ஆசைப்படுபவர்களைப் பாடாய்ப் படுத்தி அதை உண்ணுங்கள்! இதை உண்ணுங்கள்! என்று தொந்தரவு செய்வதும் ஆக்கிரமிப்புதான்.

    அடுத்தவர்க்குத் தெரியாமல் அவர்களது சொத்துக்களைத் தமதாக்கிக் கொள்ள நினைப்பது, அதற்கான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது பெரும் வஞ்சகச் செயல் ஆகும்; அதே வேளையில் அடுத்தவகளுக்குத் தேவையான உதவிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே செய்து அவர்களது இதயப் பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்வது சிறந்ததினும் சிறந்த செயல். ஆசைகளால் அல்ல; அன்பால் ஆக்கிரமிப்புச் செய்வோம்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×