என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சித்ரா பவுர்ணமி வழிபாடு
    X

    சித்ரா பவுர்ணமி வழிபாடு

    • சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தான் அதிக முக்கியத்துவம் பெற்றது.
    • சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபடும் வழக்கம் உள்ளது.

    சித்திரை மாதம் பல சீரிய சிறப்பு இயல்புகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பன்னிரு மாதங்களில் வருகின்ற பவுர்ணமிகளில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தான் அதிக முக்கியத்துவம் பெற்றது. சித்திரை மாதத்தை சுட்டி காட்டியும் சித்திரை நட்சத்திரத்தை மையப்படுத்தியும் அதனுடன் பவுர்ணமியையும் இணைத்து சித்ரா பவுர்ணமி என்றனர்.

    சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது சித்திரை மாதம் பிறக்கின்றது. சூரியன் இவ்விதம் மேஷத்திற்குள் செல்லும் போது தமிழ் வருடம் பிறக்கின்றது. ஆக சூரிய பிரவேசத்தால் தமிழ் வருட பிறப்பும், மாத பிறப்பும் நிகழ்வது இந்த சித்திரையில்தான்.

    எந்த நட்சத்திரத்தின் அருகாமையில் சந்திரன் முழுநிலவு என்னும் பவுர்ணமி ஆகின்றதோ அதை அடிப்படையாக கொண்டு தமிழ் மாதப் பெயர்களை அமைத்தனர். இவ்விதமே சித்திரை நட்சத்திரத்தன்று பவுர்ணமி ஏற்படுவதால் அந்த மாதப் பெயர் சித்திரை ஆனது.

    சூரியன் மேஷ ராசியில் உச்சத்தில் உள்ள போது நேர் ஏழாம் ராசியான துலாமில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் முழுநிலவாக தென்படுவார்.

    இத்தகைய கிரகநிலைகளை கொண்டு சித்திரை மாத பவுர்ணமி சிறப்பு பெறும். மேலும் இந்த சித்திரை மாத பவுர்ணமியை அனுசரித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவைபவம் நடத்தப்படுகிறது.

    மீனாட்சி திருக்கல்யாணம்:

    கைலாசத்தில் பார்வதிதேவியானவள் தனது தோழி வித்யாவதியின் வேண்டுகோளுக்கு இணங்கி பாண்டிய நாட்டில் மதுரை மன்னனுக்கு மகளாக அவதரித்தாள். மீன் போன்ற விழிகளை கொண்டதால் மீனாட்சி என அழைக்கப்பட்டாள். மீனாட்சி குழந்தையாக பிறக்கும் பொழுது மூன்று மார்புகுறிகளை கண்டு கலங்கினான் பாண்டிய மன்னன்.

    அப்பொழுது விண்ணில் ஒலி எழுந்து " மீனாட்சி தனது கணவனை எப்பொழுது காண்கின்றாளோ அச்சமயம் 3வது மார்பு குறி மறைந்து விடும்" என்றது. இதனால் பேருவுவகை அடைந்த மன்னன் மீனாட்சிக்கு கல்வியில் போர்கலையில் என 64 கலைகளையும் தக்க குருமார்களை நியமித்து கற்றுக் கொடுத்தான்.

    போர்கலையில் அபாரமான திறமை பெற்று அகில உலகமெங்கும் திக்விஜயம் செய்து ஜெயக்கொடி நாட்டினாள் மீனாட்சி. கைலாய மலைக்கு சென்று போர்புரிந்தாள். சிவகணங்களுடன் போரிட்டு வந்தபோது சிவபெருமானை கண்டு நாணிளாள். அச்சமயம் அவளது 3-வது மார்பு குறி மறைந்தது.


    தனது கணவர் இவர்தான் என மனந்தெளிந்து தன் கரம்பிடித்து மணம்முடிக்க சிவபெருமானை பாண்டிய நாட்டுக்கு அழைத்தாள். அன்பான வேண்டுகோளை ஏற்று பாண்டிய நாட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டார் சிவபெருமான்.

    பாண்டிய மன்னன், ராணியுடன் ஆலோசித்து சித்திரைமாதம் உத்திரம் நட்சத்திரம் வளர்பிறையில் முகூர்த்தம் குறித்தான். இந்த நாளில் தான் இறைவன் சுந்தரேசுவரர் இறைவி மீனாட்சியை மணமுடித்த நன்னாள்.

    கள்ளழகர் வைகை உற்சவம்:

    சுதபரிஷிக்கும் துர்வாச முனிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் துர்வாசர் ரிஷியை மாண்டூகமாக (தவளை) மாற சாபமிட்டார். சாப விமோசனமாக வைகை ஆற்றுக்குச் சென்று அங்கு வரும் விஷ்ணுவிடம் பிரார்த்திக்குமாறு சொல்லப்பட்டது. மாண்டூக ரிஷியும் வைகை ஆற்றுக்குச் சென்று தவம் செய்து கொண்டிருந்தார்.

    இச்சமயம் கள்ளழகர் தனது தங்கை மீனாட்சி திருக்கல்யாண வைபவம் காண வந்து கொண்டிருந்தார். இவரது வருகை தாமதமானதால் சிவபெருமான் விஷ்ணுவை அழகராக வந்து திருமணத்தை நிறைவேற்று மாறு கூறினார். இவ்விதமாக திருமணமும் நடந்தேறியது.

    பயணம் தாமதித்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது திருமணம் நடந்து முடிந்து விட்டது என செய்தி கேட்டறிந்தார். இதனால் தனது தங்கைக்காக கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களுடன் தனது இருப்பிடம் நோக்கி புறப்பட தயாரானார்.

    அந்த சமயம் அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் வந்து கள்ளழகருக்கு தரிசனம் கொடுத்தனர். கள்ளழகரும் சீர்வரிசைகளை தங்கைக்கு வழங்கி திரும்பினார். இந்த நிகழ்வே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினமே மாண்டூக மகரிஷிக்கு தரிசனம் தந்து அவரது சாப விமோசனம் செய்து அருளிய நாளாகும்.

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்நாளில் விரதமிருந்து மலர்கள் கனிகள் கொண்டு துதித்து விரதம் நிறைவேற்றும் வழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும்.

    சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபடும் வழக்கம் உள்ளது. மானிடர்களின் வாழ்நாள் கணக்குகளில் பாவ வினைகளை போக்கவும், நல்வினைகளை உண்டாக்கவும் இவ்வழிபாடு உள்ளது.

    எனவே இந்த சித்ரா பவுர்ணமி தன்னகத்தே பல அரிய நிகழ்வுகளை கொண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, மீனாட்சி சுந்தரேசுவரர் தரிசனம், கள்ளழகர் தனது இருப்பிடம் திரும்புதல், மாண்டூக மகரிஷியின் சாப விமோசனம், சித்திர குப்த பூசை, சித்ரா பவுர்ணமி விரதம், சைவ வைணவ மத வழிபாடு என கோலாகலமாக தென்படும். மக்கள் மனதில் இனம் புரியாத சந்ேதாசம், மனநிறைவு உண்டாகும். மக்களும் இந்த சித்ரா பவுர்ணமியில் விரதம் இருந்து வேண்டிய கோரிக்கைகள் நிறைவேற காண்பர்.

    Next Story
    ×