என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன் - திருச்செந்தில் கலம்பகம்
    X

    நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன் - திருச்செந்தில் கலம்பகம்

    • சிவபெருமான் மீதான நூல்களை கற்று தேர்ந்ததால் அவரிடம் சைவம் தொடர்பான ஒழுக்கங்கள் மிகுதியாக இருந்தன.
    • திருச்செந்தூர் கலம்பகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த கருத்துக்கள் நிறைந்தது.

    குமரகுருபரரை பேச வைத்து கந்தர்கலி வெண்பாவை இயற்ற வைத்து நாடு முழுவதும் புகழ் பெற செய்த திருச்செந்தூர் முருகன், பகழி கூத்தர் என்பவரை ஆட்கொண்டு திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை பாட வைத்தான். இவர்கள் இருவர் மட்டுமின்றி மேலும் பல புலவர்களை திருச்செந்தூருக்கு வரவழைத்து பாடல்கள் இயற்ற முருகன் அருள்புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன.

    அதில் சுவாமிநாத தேசிகர் வரலாறு சற்று வித்தியாசமானது. சுவாமிநாத தேசிகர் தென் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவருக்கு இளம் வயதிலேயே திருவாவடுதுறை ஆதீனத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு சென்று அவர் ஆன்மீக நூல்களை கற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

    அவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்ட திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு தீட்சை அளித்தார். அதோடு சைவ சமய கோட்பாடுகளில் மேம்பாடு பெற செய்தார். இதன் காரணமாக சுவாமிநாத தேசிகர் சிறு வயதிலேயே தினசரி ஆன்மீக கடமைகளை நேர்மையாக செய்து வந்தார்.

    சிவபெருமான் மீதான நூல்களை கற்று தேர்ந்ததால் அவரிடம் சைவம் தொடர்பான ஒழுக்கங்கள் மிகுதியாக இருந்தன. அதுமட்டுமின்றி அவரிடம் இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டும் குணமும் இருந்தது. இதன் காரணமாக அவர் திருவாவடுதுறை மடத்தில் ஆதீன தேசிகரிடம் மிக சிறந்த தொண்டராக திகழ்ந்தார்.

    அவருக்கும் திருநெல்வேலியில் வாழ்ந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. மயிலேறும் பெருமாள் பிள்ளை தமிழில் கல்லாடம் எனும் நூலுக்கு உரை எழுதியவர். சுவாமிநாத தேசிகரின் சமய ஒழுக்கத்தை கண்டு அவர் மிகவும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

    சுவாமிநாத தேசிகருக்கு மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மயிலேறும் பெருமாள் பிள்ளை மனதில் தோன்றியது. எனவே திருவாவடுதுறை ஆதீனத்திடம் அனுமதி பெற்று அவரை தம்முடன் திருநெல்வேலிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது வீட்டில் தங்க வைத்து ஒவ்வொரு நாளும் சைவ சமய நூல்களை கற்றுக்கொடுத்தார்.

    ஒவ்வொரு நூல் படித்து முடித்ததும் சைவ சமய கோட்பாடுகளின் நியாயமான சந்தேகங்களை கேட்கச் சொல்லி மயிலேறும் பெருமாள் பிள்ளை தெள்ளத் தெளிவான விளக்கங்களை அளித்தார். இதன் காரணமாக மிகக்குறுகிய காலத்திலேயே சுவாமிநாத தேசிகர் சைவ சமயத்தில் பட்டை தீட்டிய வைரமாக மின்னத் தொடங்கினார்.

    திருநெல்வேலி அருகே செப்பறை என்ற ஊரில் வாழ்ந்த கனகசபாபதி சிவாச்சாரியார் என்பவர் இதை அறிந்து ஆச்சரியப்பட்டார். சமஸ்கிருதத்தில் சிறந்த புலமைப்பெற்று இருந்த கனகசபாபதி சிவாச்சாரியார் நெல்லைக்கு சென்று சுவாமிநாத தேசிகரை சந்தித்து சமஸ்கிருத மொழியில் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்.

    இதன் காரணமாக சுவாமிநாத தேசிகர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மிகச்சிறந்த புலமைப் பெற்றவராக மாறினார். திருநெல்வேலியில் சைவ சமய பாடங்களை தெளிவாக கற்று தேர்ந்த பிறகு அவர் மீண்டும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சென்றார்.

    அவரது சிறப்புகளை அறிந்து திருவாவடு துறை ஆதீன தம்பிரான் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்கினார். அதோடு புதிய நூல்களை இயற்ற அறிவுறுத்தினார். இதன் காரணமாக பல அரிய செய்திகள் கொண்ட "இலக்கண கொத்து" என்ற நூலை சுவாமிநாத தேசிகர் எழுதி முடித்தார். "தச காரியம்" என்ற ஞான நூலையும் எழுதினார். இதையடுத்து அவருக்கு 'ஈசான தேசிகர்' என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

    அவரை மேலும் சிறப்பிக்கும் வகையில் திருநெல்வேலிக்கு சென்று அங்குள்ள திருவாவடுதுறை மடத்தின் பணிகளை கவனிக்குமாறு ஆதீனம் உத்தரவிட்டார். அதை ஏற்று சுவாமிநாத தேசிகர் மீண்டும் திருநெல்வேலிக்கு வந்தார். அதன் பிறகு அவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகள் செய்ய தொடங்கினார்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருச்செந்தூருக்கு சென்று முருகப் பெருமானிடம் மனம் விட்டு பேசுவதை அவர் வழக்கத்தில் வைத்திருந்தார். விசேஷ நாட்கள் மற்றும் உற்சவங்கள் நடக்கும் விழா நாட்களிலும் திருச்செந்தூருக்கு செல்வதை சுவாமிநாத தேசிகர் விரும்பினார்.

    அப்படி ஒரு தடவை அவர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகள் செய்தார். கருவறை எதிரே நின்று முருகனுடன் மனதுக்குள் உரையாடினார். முருகனோடு இரண்டற கலந்து விட்ட உணர்வை அவர் அப்போது பெற்று இருந்தார். அந்த சமயத்தில் அவரது காதுக்குள் ஒருவர் பேசியது போன்று குரல் ஒலித்தது.

    "என் மீது கலம்பகம் பாடலாமே?" என்று அந்த குரல் கூறியது. சுவாமிநாத தேசிகருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. தனது காதுக்குள் வந்து பேசுவது யார் என்று திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த் தார். தனது அருகில் ஒருவர்கூட இல்லை என்பதை உணர்ந்து மெய் சிலிர்த்தார்.

    முருகனை பார்த்தார். முருகன் சிரிப்பது போன்று அவருக்கு தோன்றியது. கலம்பகம் பாட சொன்னது முருகன்தான் என்பதை அவர் அப்போது உணர்ந்தார். அந்த நிமிடமே சுவாமிநாத தேசிகர் மனம் உருகி, கண்ணீர் மல்க திருச் செந்தூர் முருகன் மீது கலம்பகம் எனும் பாமாலை பாடத் தொடங்கினார்.

    கலம் என்றால் 12 என்று அர்த்தம். பகம் என்றால் 6 என்று அர்த்தம். அதாவது 18 உறுப்புகளை கொண்ட சிற்றிலக்கிய வகைகளில் கலம்பகம் ஒன்று. இதை எல்லோராலும் பாடி விட முடியாது. கவிதைகளை சுவைப்பட பாடினால்தான் கலம்பகம் உருவாகும்.

    திருச்செந்தூர் முருகன் ஆசைப்பட்டபடி சுவாமிநாத தேசிகர் கலம்பகம் பாடி முடித்தார். அந்த நூலுக்கு திருச்செந்தில் கலம்பகம் என்றும் அவர் பெயர் சூட்டினார். அந்த கலம்பகம் நூலை திருச்செந்தூர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக அரங்கேற்றமும் செய்தார்.

    இதை அறிந்த மற்ற தமிழ் புலவர்கள், சான்றோர்கள் திருச்செந்தூர் கலம்பகம் நூலை வாங்கி ஆவலுடன் படித்தனர். அந்த கலம்ப கத்தில் இருந்த பக்தி சுவையையும், இலக்கிய சுவையையும் கண்டு பிரமித்துப் போனார்கள். இது போன்று இன்னொரு கலம்பகம் நூலை எவராலும் இயற்ற முடியாது என்று பாராட்டி புகழ்ந்தனர்.

    திருச்செந்தூர் முருகன் மீது கலம்பகம் பாடப்பட்டு இருப்பது போல தமிழகத்தில் பல்வேறு ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மீதும் ஏராளமான கலம்பகம் நூல்கள் பாடப்பட்டு இருக்கின்றன. ஆனால் திருச்செந்தூர் முருகன் மீது சுவாமிநாத தேசிகர் பாடிய கலம்பகம் நூல் மட்டுமே இன்றுவரை தனித்துவம் கொண்டதாக இருக்கிறது.

    இதன் காரணமாகத்தான் திருச்செந்தில் கலம்பகம் நூலில் உள்ள பாடல்களில் பக்தி சுவைமிக்க 30 பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல்களை ஒவ்வொரு நாள் இரவும் திருச் செந்தூர் முருகன் பள்ளியறைக்கு செல்லும்போது ஓதுவார்கள் பாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த 30 பாடல்களை தினமும் மனம் உருகி பாடுபவர்களும் இருக்கிறார்கள்.

    திருச்செந்தூர் கலம்பகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த கருத்துக்கள் நிறைந்தது. முருகனை சிறப்பித்து பாடும் வரிகள் சிந்தனைக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளன. உதாரணத்துக்கு சில..

    * அலைகளை உடைய கடலைப் போல ஏழுமடங்கு மிகுதியாக உன் கருணையை அடியார்களிடம் செலுத்துகிறாய்.

    * நீ விண்ணாகவும், மண்ணாகவும் இருக்கின்றாய் எல்லார்க்கும் தலைவன் நீ செம்மேனியன் நீ முதற்பொருளாகவும் ஒளி வடிவாகவும் விளங்குகின்றாய்.

    * சுறா மீன்களை வீசும் சங்குகள் ஊரும் கடற்றுறையான திருச்செந்தூரில் இருக்கும் கடப்பம் மாலை அணிந்தவனே எனக்கு உன் தாமரை போன்ற மலரடிகளை தருக என வணங்கி நிற்பேன்.

    * ஊழ்வலியால் கெட்டாலும் வறுமையால் இரந்தாலும் அறிவிலிகளாய் அவன் மீது சொல்லும் மந்திரத்தை மறந்தாலும் அவன் இருக்கும் செந்தில் பதிவை வாயால் கூறுவோர் என்றும் வீடுபேற்றை அடைந்து மகிழ்வர்.

    * எழுதிய சித்திரத்திலுளள விண்மீனை நெல் பொரி என எண்ணிக் கொத்தித் தின்னும் அழகிய கால்களையே ஆயுதமாகக் கொண்ட கோழிக் கொடியை ஏந்திய பெருமானே, குடுமித் தலையை உடைய கூற்றுவன் எதிர்த்து வரும்போது அவனை நெருக்கும் வல்லமை தரும் நீ இருக்கும் செந்தில் பதியும் என் நெஞ்சகத்தே உள்ளது.

    * செந்தில் பதியில் இருக்கும் முருகப் பெருமானைத் தொழாதவர் கொடும்பசியால் பிறரைத் தொழுது சோர்வார்கள்.

    * திருச்செந்தூரில் தென் கலையாகிய முத்தமிழையும் முடமுனி அகத்தியருக்கு ஓதிய குமரகுருபரனே, வறியோர்க்கு கொடுத்து மகிழ்ந்தலையும் ஆறு எழுத்து மந்திரம் ஓதலையும கருதாதவர் பலர் உளர். உன் திருவடிகளை வணங்கவும் மூலாதாரம் முதலிய ஆறு இடங்களையும் நீ பிரியாமல் இருக்கும் உன் கருணை வெள்ளத்தை எனக்கு அருள்க.

    இப்படி நூறு விதமான கருத்துகளை திருச்செந்தில் கலம்பகம் நூல் கொண்டிருக்கி றது. திருச்செந்தூர் கலம்பகம் நூலை யார் ஒருவர் முழுமையான மனதுடன் உணர்வு பொங்க படிக்கிறாரோ அவருக்கு பிறவிப்பி ணிகள் நீங்கி முக்தி கிடைக்கும் என்று சுவாமிநாத தேசிகர் தனது கடைசிப் பாடலில் நிறைவு செய்துள்ளார். திருச் செந்தூர் முருகன் அருளால் உருவான இந்த கலம்பகம் நூல் மிக மிக அரிய பொக்கிஷமாக முருகப் பக்தர்களால் கருதப்படுகிறது.

    இந்த நூலின் சிறப்பை கருத்தில் கொண்டு கடந்த 2008-ம் ஆண்டு சென்னை குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினர் திருச்செந்தில் கலம்பகம் நூலை பதிப்பித்து வெளியிட்டனர். இந்த நூலை படித்தால் திருச்செந்தூர் முருகன் செய்யும் அற்புதத்தை வாழ்வில் உணர முடியும் என்ற நம்பிக்கையும் பக்தர்கள் மத்தியில் உள்ளது. பல பக்தர்கள் வாழ்வில் திருச்செந்தில் கலம்பகம் நூல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    நீங்களும் படியுங்கள், திருச்செந்தூர் முருகன் உங்கள் வாழ்விலும் மாற்றம் செய்வதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். திருச்செந்தூர் முருகன் செய்த இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×