என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஏரியைக் காத்த கன்னி!
- மடையில் இருந்து வெளிவரும் நீர் ஒரு தொட்டியில் தேங்கி அதன் மூன்று புறங்களிலும் வெளியேறும்.
- கோதையாருக்கு பல துணை நதிகள் உள்ளன.
ஆய்நாட்டில் நீர்நிலைகள் அனைத்தும் கரையார்கள் எனும் மருதநில மீனவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கரையார், மருத நிலத்தின் நீர் நிலைகளில் மீன் பிடித்தலும், மடை திறப்பதும் போன்ற மரபுத் தொழிலை செய்பவர். மன்னன், வணிகன், வேளார்களை உள்ளடக்கிய கட்டமைப்பின் நீர் ஆதாரம் என்பது நாட்டின் அடிப்படை தேவை அல்லவா. ஓடும் நதியில் இருந்து கால்வாய் வெட்டி அதை நாட்டின் அகழியோடும், இயற்கையாய் அமைந்த நீர் நிலைகளோடு இணைக்க அவ்வகை நீர் நிலைகளை பேணி பராமரிக்க கரையார்கள் நீர் துறையில் இருப்பார்கள்.
கரையார்கள் நீர் நிலைகளில் இருக்கும் மடைகளைத் திறந்து பல பெரிய நிலபரப்புகளில் இருக்கும் உழவு நிலத்திற்கு நீரை பாய்ச்சிவிட்டு, பின்னர் அடுத்த நிலப்பரப்புகளுக்கும் செல்லும். நீர் பாசனத்தில் இருந்து மடை வழியாக வெளியேறும் நீர் தங்கு தடையில்லாமல் அனைத்து உழவு நிலங்களுக்கும் சென்றுகொண்டு இருக்கும். அதனால் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் தங்கிக் கொள்ளும். பெரிய அளவில் கடலில் சென்று கலப்பதில்லை.
மடையில் இருந்து வெளிவரும் நீர் ஒரு தொட்டியில் தேங்கி அதன் மூன்று புறங்களிலும் வெளியேறும். அவ்வகை மடைகளை திறந்தும், அடைக்கவும் செய்யும் கரையார்கள் நீரோடு முட்டி மோதும் பெரிய மாவீரர்களாகவும், தெளிவாக நீரின் நுணுக்கத்தை அனு அனுவாக அறிந்தும் வைத்திருப்பார்கள்.
குழித்துறையார், திருவட்டாறு அருகே பரளியாரும் கோதையாரும் இணைந்ததால் உருவானது. கோதையாருக்கு பல துணை நதிகள் உள்ளன. இதில் சித்தார் முக்கிய துணை நதி. குழித்துறையாற்றின் முக்கிய நதியின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த ஆறு குமரிநாட்டுக்கு மேற்கே தேங்காப்பட்டினம் அருகே அரபிக்கடலில் சங்கமிக்கிறது. மகேந்திரகிரி மலைகளின் வடக்கே உள்ள மலைகளில் பரளியாறு உருவாகிறது.
இயற்கையின் காட்சிகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே. ஒரு கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் ஆரம்பித்த அடை மழை, அந்த மாதம் முழுவதும் விடாமல் பெய்துகொண்டே இருந்தது. ஏரி, குளம் எல்லாம் ரொம்பிடிச்சி. மழையும் விடற மாதிரி தெரியல. ஏரியில் கடல் போல ஒரே அலையா அடிச்ச வேகத்துல ஏரிக்கரை ஒடையற மாதிரி இருக்குது. அந்த ஏரியின் காவக்காரர் வயசான தாத்தா, ஏரி ரொம்பற வேகத்தைப் பார்த்த அவருக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. எப்படியாவது அரண்மனைக்குச் சேதி தெரியணும்னு துடிக்கிறாரு.
இங்க அப்பிடியே விட்டுட்டு போயிட்டா ஏரிய யார் பாத்துக்கறதுன்னு நெனச்சி ஆள் யாராவது வந்தா தேவலையேன்னு வேண்டிக்கிறார். யாரும் வர்ற மாதிரி தெரியல. என்ன செய்யறதுன்னு நெனச்சிக்கிட்டே தலையில ஒரு சம்பு கூடைய கவுத்துக்கிட்டு காவ காத்துட்டு இருக்கறாரு. வெகு நேரம் ஆனதுக்கப்பறம் அச்சத்துல நாக்குழற காப்பாத்து தாயின்னு கதற ஆரம்பிச்சுட்டார். அப்பதான் அந்த அதிசயம் நடந்துச்சி.
அவரு பேத்தி மாதிரி பாவாடை சட்டை போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு சிரிச்சுக்கிட்டே அங்க வருது. தூக்கு போசியோட வந்த பொண்ணு, தாத்தா கஞ்சி எடுத்திட்டு வந்திருக்கேன் குடின்னு சொன்னபோது தாத்தாவும் கஞ்சிய வேக வேகமா குடிக்கிறதப் பார்த்த அந்த சின்னப்பொண்ணு, ஏன் தாத்தா ஒரே பதட்டமா இருக்கிற என்ன பிரச்சனைன்னு கேட்குது. அதுக்கு தாத்தா பாத்தியாம்மா மழை இப்படி பிச்சிக்கிட்டு போகுது? ஏரியும் ரொம்பிப் போச்சி, மழை வேற நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. இப்படியே போனா ஏரி ஒடஞ்சிடும். இந்தச் சேதிய அரசவைக்கு தெரியப்படுத்தணும்.
என்னால தனியா இத சமாளிக்க முடியாது. நிறைய ஆட்களை கூட்டிட்டு வரணும், அதான் எப்படி ஏரிய விட்டுட்டுப் போறதுன்னு தெரியாம இருக்கிறன்மான்னு தாத்தா சொல்றாரு. அதுக்கு அந்தச் சின்னப் பொண்ணு அப்பிடியா தாத்தா நீங்க வேணுமுன்னா போய்ட்டு வாங்க இந்த ஏரிய நீங்க வரும்வரை ஒடையாம நான் பாத்துக்கறன்னு சொல்லுது.
ஆனால் தாத்தாவோ ஏம்மா நீயோ சின்னப் பொண்ணு. என்னாலயே முடியல நீ எப்படிமா பாத்துக்கவன்னு கேட்கறாரு. அதுக்கு அந்தப் பொண்ணு, இல்ல தாத்தா நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க. நான் பாத்துக்கறன்னு சொல்லுது. சரி இந்த நேரத்துல இந்தப் பொண்ண விட்டா வேற வழியில்லை என்ன செய்யிறது. அந்த இரவு நேரத்துல தலையில சம்பு கூடையைக் கவுத்துகிட்டு கௌம்பினவரு, பொழுது விடியற நேரமாயிடிச்சின்னு வேகவேகமா ஓடுராறு.
இதுக்கு நடுவுல நல்லா தூங்கிக்கிட்டு இருந்த செம்பவளம் திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு, அப்பா, அப்பான்னு புலம்ப ஆரம்பிக்க, எல்லோரும் ஓடிவந்து சுற்றி நின்னு என்னன்னு கேட்கப்போக, அவளும் தான் கனவு கண்டதாகச் சொன்னாள். அந்தக் கனவுல அடை மழை விடாது பெய்யற மாதிரியும், ஏரி நிரம்பி வழியிற மாதிரியும், கன்னியாத்தா (சாமி) வந்து ஏரிய காக்கற மாதிரியும், ஏரிய காவக் காத்தவரு இங்க வந்து ஏரி ரொம்பி, ஒடையிற மாதிரி இருக்குதுன்னு செய்தி சொல்லற மாதிரியும், எல்லாருக்கும் செய்தி சொல்லிட்டு ஏரிக்கு திரும்பிப் போற மாதிரியும், இவர் போனவுடனே கன்னியாத்தா அங்கிருந்து போயிடற மாதிரியும், உடனே ஏரிக்கரை உடைந்து ஊரே வெள்ளத்தில் மூழ்கிப்போயிடற மாதிரியும் தெரியுதுன்னு சொல்லி துடிச்சிப்போனா. விடியற்கால நேரத்துல கண்ட கனவு பலிக்குமே, மழை வேற விடாம பேஞ்சிக்கிட்டே இருக்குதே கடவுளே என்று பரபரக்க ஆரம்பித்துவிட்டோம்.
பவளசங்கரி
கொஞ்ச நேரம் கூட இல்லை, செம்பா கனவு கண்டது போல ஏரிய காத்த காவக்காரன் வீட்டு வாசல்ல நின்னு அய்யா அய்யான்னு கூப்பிடறாரு. வெளியில வந்து பார்த்து என்ன ஆச்சின்னு கேட்டதுக்கு காவக்காரனோ நெறைய மழை பேஞ்சி ஏரி ரொம்பி வழியிது, இப்படியே போச்சின்னா ஏரி உடைந்து ஊரே அழிஞ்சிடும், உடனே ஆட்களை கூட்டிட்டுப் போவணும் ஏரிக்கரைய பலப்படுத்தணுமுன்னும், ஏரியில் ஒரு சின்னப் பெண்ணான தன் பேத்திய காவலுக்கு விட்டுட்டு வந்திருக்கேன்னும் சொல்றாரு.
யாருக்கும் ஒன்னும் புரியல, செம்பா கனவுல கண்ட மாதிரியே இருக்குதேன்னு நெனச்சி அடுத்து நடக்கப் போவதை எண்ணி எல்லோரும் குழம் பிப்போய் நின்னாங்க. சாமிதான் செம்பாவின் கனவில வந்து நடக்கப்போறத சொல்லி எச்சரிக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டோம். சரி அதுக்கு நாம என்ன பண்ணனும், என்ன பரிகாரம் பன்னா ஏரி மடைய உடையாமல் பாதுகாக்க முடியும்ன்னு கேக்கறாரு அரசர். அதுக்குள்ள எல்லாருக்கும் செய்தி தெரிஞ்சி ஊரே ஒன்னு கூடி, என்ன செய்யிலாம்னு அதிர்ந்து போய் நின்னாங்க.
அப்பதான் செம்பா மடமடவென்று காரியத்தில் இறங்கினாள். ஊரிலுள்ள இளந்தாரிகள், வேலை தெரிஞ்சவங்க, ஆண்கள், பெண்கள் என அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஏரிக்கரையை நோக்கி விரைந்து செல்கிறாள். கன்னிமார் சாமியையும், குல தெய்வம் ஆயிரை அம்மனையும் வேண்டிக்கொண்டு களம் இறங்கினார்கள்.
ஏரிய காவல் காத்த சின்னப்பொண்ணு தன்னுடைய கால் கட்டைவிரலை எடுத்து ஏரி உடைகிற இடத்தில வச்சிருந்தது. ஏரிக்கரை உடையாமல் அப்படியே இருந்திடுச்சு. ஊர் சொல்லப்போன காவக்கார தாத்தா வருவார்ன்னு பார்த்த சின்னப்பொண்ணு காவக்காரன், ஊர் மக்களுடன் சேர்ந்து வருவதைப் பார்த்தவுடன் அப்படியே மறைந்து போயிடிச்சி. உண்மையில் காவக்காரனின் பேத்தி அவங்க வீட்டில் தான் இருந்தாள். அப்படீன்னா அங்கு ஊரைக்காக்க வந்தது கன்னிமார் சாமிதான்னு புரிஞ்சிக்கிட்டோம்.
தெய்வாதீனமாக மழையும் சற்று ஓய்ந்தது. செம்பா தலைமையில் ஊர் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் விடாமல் போராடி ஏரிக்கரையை சரி செய்தார்கள். கன்னியாத்தா சிலை ஒன்றையும் அங்கு வச்சிருக்காங்க. இந்த கன்னியாத்தாவால் தான் ஏரி உடையாமல் இருக்குது. கன்னியாத்தா மட்டும் இங்க இருந்து போயிட்டா ஏரி உடைந்து ஊரே அழிஞ்சிடும். சிலை வடிவுல கன்னியாத்தா அங்கேயே நிரந்தரமா தங்கிப்பிட்டா. ஊர் மக்கள் செம்பாவையும் கன்னியாத்தாவாகவே பார்க்கத் தொடங்கிட்டாங்க.
அன்றுதான் பத்து வயதே நிரம்பிய அந்தப் பெண் குழந்தை செம்பவளத்தாயி என்று ஊரே கொண்டாடும் நிலைக்கு உயர்ந்து நின்றாள். மாரியன்னை வழிபாடுகளில் ஒரு பகுதியாக அன்று கன்னிமார் பூசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழு கன்னிப் பெண்களை அமர வைத்து அவர்களை சப்த கன்னியரான, பிராமி, வைணவி, மகேசுவரி, கவுமாரி, வாராகி, மகேந்தரி, சாமுண்டி என்ற ஏழு அன்னையாக எண்ணி அலங்கரித்து, அவர்களுக்கு பூசை செய்வது வழக்கம். அன்று அந்த பூசையில் நடு நாயகமாக சென்று அமர்ந்து கொண்டவள் செம்பவளம். கடுமையான விரதம், பல மணி நேர பூசை என ஒரு சிறு பெண்ணிற்கு மிக சிரமமான விசயம் என்று எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கத் தயாராக இல்லை. கன்னியாத்தாவாகவே காட்சியளித்த செம்பாவைப் பார்த்து ஊரே அதிசயித்தது.
தொடருவோம்...
coraled@gmail.com






