என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சமையல்காரர் எழுதிய தல புராணம்!
- திருச்செந்தூர் கோவிலில் ஆராதனை செய்யும் உரிமை பெற்றவர்கள் 20 ஆயிரம் பேர்.
- கரைக்கு திரும்பிய அவரிடம், கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன்.
திருச்செந்தூர் திருத்தலம் எண்ணற்ற அற்புதங்களைத் தன்னுள் கொண்டது.
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் சிவபெருமானாகத் தோன்றி நடன தரிசனம் அளித்த திருத்தலம். முருகன், ''தன் இஷ்ட தெய்வமான திருமாலைத் தவிர வேறு தெய்வங்களைப் பாடுவதில்லை'' என்றிருந்த வைணவரைத் தடுத்தாண்டு, தன் மீது 'சிறை விடு அந்தாதி' எனும் நூலை பாடும்படிச் செய்த தலம். சண்முகர், தன் பக்தர் கனவில் தோன்றி, இரண்டாண்டு காலமாகக் கடலுக்கடியில் கிடந்த தன்னை காட்டிக் கொடுத்து வெளிக் கொணரச் செய்த புண்ணியபூமி என்று அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல், செந்திலாண்டவன், ஏட்டறிவு சிறிதும் இல்லாத ஒருவரை, வடமொழியில் இருந்த திருச்செந்தூர் தலபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்த நிகழ்ச்சி இன்றளவும் பெரும் அற்புதமாகப் போற்றப்படுகிறது. அந்த பக்தரின் இயற்பெயர் பற்றி ஏதும் தெரியவில்லை. ஆனால், பிற்காலத்தில் வென்றிமாலைக் கவிராயர் என்ற பட்டம் பெற்றவர்.
திருச்செந்தூர் கோவிலில் ஆராதனை செய்யும் உரிமை பெற்றவர்கள் 20 ஆயிரம் பேர். இவர்கள் திரிசுதந்திரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் ஒருவருக்கு முருகன் அருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. வயதான பின்னும் அவனுக்குப் படிப்பில் நாட்டம் ஏற்படவில்லை. வயது வளரவளர திருச்செந்தூர் கோவிலைச் சுற்றுவதையும் ஆறுமுகனை அடிக்கடி வணங்கி எழுவதையும் தவிர வேறு எதிலும் அவனால் கவனத்தை செலுத்த முடியவில்லை.
அவனது தந்தை அவனை கோவில் மடப்பள்ளியில் சமையல் வேலைக்குச் சேர்த்துவிட்டார். இதுவும் ஒரு புனிதப் பணி ஆதலால் செந்தில் முருகன் உடனான அவன் உறவு மேலும் மேம்பட்டது.
செந்திலாண்டவன் கோவிலைச் சுற்றுவதும், முருகனின் திருநாமத்தை எந்நேரமும் கூறுவதும், மனம்போலப் பாடுவதும் என அவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தைத் தயார் செய்யாமல் செந்திலாண்டவனை நினைத்து தியானத்தில் இருந்து விட்டார்.
பிரசாதம் வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து, "எதற்கும் உதவாதவன்' என்று கூறி அடித்து, உதைத்து அவரை விரட்டிவிட்டனர். மனம் வருந்திய வென்றிமாலை திருச்செந்தூர் கடற்கரையில் அமர்ந்து, "இனி உயிரோடிருப்பதில் பயனில்லை' என்று கடலில் விழத் துணிந்தார். தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் கடலுக்குள் இறங்கி நடந்தார்.
அவர் கடலுக்குள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதல் ஆகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல கடல்நீர் உயராமல் இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் தொடர்ந்து கடலுக்குள் இறங்கினார்.
அப்பொழுது "நில்' என்ற குரல் கேட்டது.
கடலில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் வென்றி மாலையிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான்.
கரைக்கு திரும்பிய அவரிடம், கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். வென்றிமாலை அந்த சிறுவனிடம், தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள்!, என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்? என்றான்.
அதற்கு வென்றிமாலை, எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன் சொன்னார். உடனே அந்த சிறுவன், நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!, இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான்.
இதைக்கேட்டு வென்றிமாலை கடும் அதிர்ச்சி அடைந்தார். பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே!, என்னால் இது எப்படி சாத்தியமாகும்?' என்றார்.
ஆனால் அதை அந்த சிறுவன் ஏற்கவில்லை. அவரைப் பார்த்து அவன், "மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும், நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ, அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணி முடிப்பை அவர் கையில் வைத்தான்.
சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தை வென்றி மாலை பெற்றுக் கொண்டார். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல!, இன்று முதல் 'வென்றிமாலை கவிராயர்' என்று அழைக்கப்படுவீர்கள் என்றான் அந்த சிறுவன். மேலும் "செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பாருங்கள்'' என்று கூறி மறைந்தான்.
வென்றி மாலை ஒன்றும் புரியாமல் நின்றார். அவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ? நீண்ட நேர தவிப்புக்கும், குழப் பத்துக்கும் பிறகு வென்றிமாலை மனத்தெளிவு அடைந்தார். முருகன் கட்டளைப்படி செவலூர் சென்று, சாஸ்திரிகளிடம் நடந்ததைக் கூறினார்.
மனம் மகிழ்ந்த சாஸ்திரி, தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர் மகாத்மியத்தை, தமிழில் "திருச்செந்தூர் தலபுராண'மாகப் பாடக் கூறினார். "எப்படிப் பாடுவேன்... ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன். தமிழே சரிவர தெரியாத நான் எப்படிப் பாடுவது'' என்றார் வென்றிமாலை.
திருச்செந்தூர் ஆண்டவனை நினைத்துப் பாடு'' என்றார் சாஸ்திரி. முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார் வென்றிமாலையார். அவர் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான். சிவபெருமானை முதலாவதாக வைத்து இனிய, எளிய தமிழில் திருச்செந்தூர் தலப் புராணத்தைப் பாடினார். வென்றி மாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி அவருக்கு "வென்றிமாலைக் கவிராயர்' என்ற பட்டத்தை வழங்கினார்.
பின்னர் தாம் பாடிய திருச்செந்தூர் தலபுராணச் சுவடிகளுடன் வென்றிமாலை கவிராயர் திருச்செந்தூர் வந்தார். "திருச்செந்தூர் தலப் புராணத்தை பாடல்களாக பாடி இருக்கிறேன். அந்த பாடல்களை அரங்கேற்றப் போகிறேன்' என்று கூறினார். அவருடைய உறவினர்கள் வென்றி மாலைக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று கேலி செய்தனர்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத வென்றி மாலை கவிராயர், திருச்செந்தூர் முருகன் தல புராணம் பற்றி எடுத்துச் சொல்லி, கோவில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார். "சமையல் கூடத்தில் வேலை செய்தவன் கவிதை பாடுவதா' என்று அவர்களும் கிண்டல் செய்தனர். தனக்கும் தனது திருச்செந்தூர் தலபுராண நூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் வென்றிமாலை கவிராயர் மனம் வருந்தி கண்ணீர் மல்கினார்.
அச்சுவடிகளை திருச்செந்தூர் கடலில் தூக்கி எறிந்து விட்டு தவமிருந்தார். கடலில் வீசப்பட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று இலங்கை நாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கரை ஏறியது. அவ்வேடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைக்க, அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அவ்வடியார் மெய்சிலிர்த்தார்.
திருச்செந்தூர் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப்பயன் என்று கொண்டாடினார். தினமும் ஏடுகளுக்குப் பூ சூட்டி அலங்கரித்து, தூப தீபம் காட்டி பூஜை செய்து வழிபட்டார். அந்நாளில் கொடிய நோய் ஒன்று அதாவது சக்கர சுவாசம் என்ற விஷக்காற்று நோய் அவ்வூரில் பரவி பலரும் இறந்து போயினர். ஆனால், திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் சக்கர சுவாசம் விஷக்காற்று நோய் புகவில்லை - பரவவில்லை. என்னே வியப்பு! இந்த அற்புத நிகழ்ச்சி இலங்கை நாடு முழுவதும் பரவியது. வென்றிமாலைக் கவிராயரின் அந்த நூல், பிற்காலத்தில் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தது.
அந்நூலை செந்திலாண்டவன் கோவிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார்கள். நூலின் முடிவில் நூலை எழுதியது *வென்றிமாலை கவிராயர்* என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு, தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் திருச்செந்தூர் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.
வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களிலும் அரங்கேறியது. வென்றிமாலைக் கவிராயர் இயற்றிய "திருச்செந்தூர் தல புராணம்' படிப்பவர் உள்ளத்தை உருக்கி, தீந்தமிழின் இன்பச் சுவையையும், திருமுருகன் அருளையும் ஒருங்கே பெற வைக்கிறது.
இந்த தல புராணம் 18 சருக்கங்களும், 899 பாடல்களும் உடையது. இந்த தல புராணம் அரங்கேற்றப்பட்ட பிறகு பல தடவை அச்சிடப்பட்டு வெளியானது. கடந்த 1998-ம் ஆண்டு திருச்செந்தூர் கோவில் சார்பில் குகஸ்ரீரஸபதி என்பவர் திருச்செந்தூர் தல புராணத்துக்கு உரை எழுதி வெளியிட்டார். ஆனால் சமீப காலமாக இந்த தல புராணம் வெளியாகாததால் பெரும்பாலான முருக பக்தர்கள் இதுபற்றி தெரியாமலேயே இருக்கிறார்கள்.
17-ம் நூற்றாண்டில் தூய தமிழில் உருவான திருச்செந்தூர் தல புராணம் திருச்செந்தூர் முருகனால் விரும்பி எழுத வைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த தல புராணத்தை படித்தால் திருச்செந்தூர் முருகனின் அருளை பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வென்றி மாலைக் கவிராயர் இயற்றிய திருச்செந்தூர் தல புராணத்தை ஏராளமானோர் பாராட்டி புகழ்ந்துள்ளனர். ஒரு தடவை நீங்களும் இந்த தல புராணத்தை படித்துப் பாருங்கள். திருச்செந்தூர் முருகனின் தனிச்சிறப்புகளும், அற்புதங்களும் உங்களுக்கு தெரிய வரும்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் முருகனின் மற்றொரு அற்புதத்தை காணலாம்.






