என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மோரிருக்க கோடைக்கு பயமேன்?
- வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிகிற நேரத்தில் உடலின் வெப்பத்தைச் சட்டென்று தணிக்கவல்லது மோர்.
- நீராகாரத்தில் உள்ளதைப் போன்று மோரிலும் நுண்ணுயிரிகள் உண்டு.
"காரென்று பேர் படைத்தாய்
ககனத்து உறுமும் போது
நீரென்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற் பின்
வார் ஒன்று மென் முலையார்
ஆய்ச்சியர்கை வந்தற்பின்
மோர் என்று பெயர் படைத்தாய்"
என்று புகழ்பெற்ற காளமேகப் புலவரின் பாடலொன்று உண்டு.
ஒரு குவளை நீர் முப்பெயரும் பெற்று விட்டதாக புலவர் நகைச்சுவையாகப் பாடலில் வெளிப்படுத்துகிறார். உச்சி வெயிலில் நடந்து செல்லும் அய்யன் காளமேகருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுக்கிறது. சோர்வு ஏற்படுகிறது. தாகத்தையும் சோர்வையும் ஒருசேர நீக்கவல்ல மோர் அருந்தினால் நன்று எனத் தோன்றுகிறது. ஆயர்குலப் பெண்மணி தெருவில் விற்றுச் செல்லும் மோரினை வாங்கிப் பருக, அது வெறும் நீராக இருக்கிறது. (அந்தக் காலத்திலேயே கலப்படம்) மோரைக் குடித்தவர் புலவர். மோரினை விற்றவளும் இளம்பெண். எனவே கடிந்துகொள்ள மனமில்லை புலவருக்கு. ஆனாலும் அப்படியே கடந்து செல்லவும் மனமின்றி, நீரே நீ வானத்தில் இருந்தால் உன் பெயர் மேகம், மழையாகி கொடுந்தரைக்கு வந்த பிறகு நீரென்று பெயர் பெற்றாய். இளம் பெண்ணின் கையில் உள்ள நீரே நீ மோர் என்ற பெயரைப் பெற்றாய்" என்று நயம்படப் பாடிச் செல்கிறார்.
அது நீர் மோராகவே இருந்தாலும் தாகத்தைத் தணிக்கத்தான் செய்யும். தயிரைக் கடைந்து வெண்ணை எடுத்த பின் நீர் சேர்க்காத மோர், மிக இதமாக வயிற்றுக்கு உணவாகவே நிறையும் ஆற்றலைக் கொண்டது.
தயிராக இருந்தால் அப்படியே சாப்பிட முடியாது, கூடாது. ஏனென்றால் அதில் புளிப்புத் தன்மையும் வெண்ணையுடன் கூடிய எண்ணைத் தன்மையும் மிகுந்திருக்கும். புளிப்புடன் கூடிய வெண்ணை செரிக்கக் கடினமானது. மட்டுமல்ல நேரெதிரான விளைவையும் கூடக் கொடுக்கும். அதனால் தான் சோற்றுடன் சேர்ந்து பிசைந்து ஊறுகாய், கெட்டிக் குழம்பு போன்றவற்றை இணைத்தே உண்கிறோம். ஆனால் அது கடினமான உணவு என்பதில் இன்னொரு கருத்து இல்லை.
வெயில் உரத்து அடிக்கும் மயக்க நேரத்தில் கடினமான உணவை உண்டால் சோர்வு இன்னும் அதிகரிக்கவே செய்யும். நாங்கள் படிக்கிற காலத்தில் பின் இருக்கை (பேக் பெஞ்ச்) மாணவர்கள் ஓரிருவரின் தலைகள் ஓணான் போல ஆட, மென் குறட்டையுடன் தூங்கிச் சரிவார்கள். வாத்தியார் பிரம்பால் சுரீரென்று ஒருகார அடி கொடுத்து மேசை மீது நிற்க வைப்பார். "எறுமைத் தயிரைக் குடிச்சா இப்பிடித் தூங்க வேண்டியதுதான்" என்றபடி கையில் எடுத்த பிரம்புடனே லாத்துவார். மேசையில் வைக்கமாட்டார்.
அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட வீட்டு வீட்டுக்கு பசுமாடு எறுமை மாடு என பால்கறவை மாடுகள் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பால், தயிர் மோருக்குப் பஞ்சம் இருக்காது.
இன்று எல்லா நகரமயப் பெருக்கத்தால் கறவை மாடுகள் பண்ணை உற்பத்திக் களங்கள் ஆகி விட்டன. பக்கெட் பக்கெட்டாக பாலும், தயிரும் நிறைந்திருந்த காலம் போய் இன்று பாக்கெட், பாக்கெட்டாக உருமாற்றம் பெற்று விட்டன. ஆனால் மோர் மட்டும் அரிதானவொன்றாகி விட்டது. குடங்குடமாகக் குடிக்கத் தகுந்த மோரினை யோகர்ட், யாகுல்ட் என்ற பெயரில் சின்னக் குப்பிகளில் அடைத்து விற்கிறார்கள்.
பாலையும் தயிரையும் கெடாத வகையில் ப்ராசஸ் செய்யலாம். ஆனால் மோரினை அப்படி ப்ராசஸ் செய்து விற்பதற்கு விலை வைக்க முடியாது. சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட முடியாது.
ஆனால் பால்பொருட்களான பால், தயிர், மோர், நெய், வெண்ணை இன்று புதிதாக வணிக கவனத்தைப் பெற்றிருக்கும் பாலாடைக் கட்டி (சீஸ்) பன்னீர் போன்ற அனைத்திலும் சிறந்தது மோரே ஆகும். விலை மலிவாக இருப்பதாலும், வெண்ணை எடுக்கப்பட்டதாலும் அதன் மருத்துவப் பண்பினை நாம் உணராமல் இருக்கிறோம்.
வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிகிற நேரத்தில் உடலின் வெப்பத்தைச் சட்டென்று தணிக்கவல்லது மோர்.
மேலே சொன்னது போல தயிரின் நீர்த்த வடிவம் தான் மோர் என்றாலும், தயிரான புளிப்புத் தன்மை உடையது. குடலில் உணவு தேக்கமுற்று குடலும், வயிறும் கெட்டு வாயில் நாக்கில் புண் உடையோர் பரவலாகி விட்டனர். இந்த அசிடிட்டி பிரச்சினைக்கு கை கண்ட எளிய மருந்து மோர் ஆகும்.
நோயுற்று செரிமானப் பிரச்சினை உடையவர்களுக்கும், வயிற்று உப்புசம், கெட்ட வாயுப் பிரச்சினை உடையவர்களுக்கும் மிக விரைவான தீர்வைத் தரக்கூடியதாகும் மோர். புளித்த தயிரின் நீர்த்த வடிவம் தான் என்றாலும் மோரானது காரப் பண்பை அடைந்து விடுகிறது. புளிப்பை உடைத்தால் அதன் அசிடிட்டிப் பண்பு, குணம் அனைத்தும் மாறி எதிரான பண்பாக ஆகி விடுகிறது. அதனால் தான் சொல்கிறோம், அசிடிட்டி, குடல் புண், வாய்ப்புண் (இரைப்பையின் வெளி உறுப்பு தான் வாய்) இரைப்பையில் புண் ஏற்பட்ட பின்னரே வாய்ப் புண்ணுக்குப் பொருத்தமானது மோர் என்று.
கடந்த கட்டுரையில் பார்த்தது போல நீராகாரத்தில் உள்ளதைப் போன்று மோரிலும் நுண்ணுயிரிகள் உண்டு. எனவே கெட்ட வாயுக்களை நீக்கும் பண்பு மோருக்கு உண்டு.
நெஞ்செரிச்சல், ஏப்பம் வராமல் திணறுதல், மூச்சு முட்டுதல், வயிற்றுக்கும், தொண்டைக்கும் இடையில் ரன்வேயில் விமானம் ஓடுவது போல கர்முர் சத்தம் ஆகிய அனைத்திற்கும் மோர் சிறந்த தீர்வாக இருக்கும்.
மோர் சிறந்தது என்பதில் யாருக்கும் எதிர் கருத்து இருக்க முடியாது. ஆனால் மோர் என்ற சொல்லைக் காதால் கேட்டவுடன் தும்மல், மூக்கடைப்பு எதிர் விளைவுகள் (அலர்ஜி) சிலருக்கு ஏற்படலாம். பிரச்சினை மோரில் இல்லை, அதனை ஏற்கும் திறனை உடல் இழந்து விட்டது தான் பிரச்சினை. அவர்களது உடலைப் பக்குவப்படுத்துவதே உடனடி வேலையாக இருக்க வேண்டும். மோரைச் சிறிது சிறிதாக சேர்ப்பதன் மூலம் மோர் மூச்சுப் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வினைத் தரும் அருமருந்தாக இருக்கும்.
ஐஸ் சேர்த்த மோர், கடைந்த பின்னர் புளிப்பேறிய மோர்தான் சுவாசப் பிரச்சினைக்கு எதிரியே தவிர கடைந்த புதுமோர் இத்தகைய உபாதைகளைத் தராது. புளிப்பேறாத மோரினை சிறிது சிறிதாகக் குடித்து உடலைப் பழக்குவதே நல்லது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் காலைநேரத்தில் சோற்றில் அல்லது சிறுதானியக் கூழில் மோர் கலந்து உண்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை எளிதில் நீங்கும்.
நீண்ட மலச்சிக்கல், செரிமானப்பிரச்சினை ஆகியவற்றை அடுத்தே பித்தப்பைக் கல், சிறுநீரகக் கல் ஆகியவை தோன்றும். ஆகவே மேற்படிக் கல் பிரச்சினைகளுக்கு அறுவை, மாற்று மருந்து போன்ற கடினமான, ஆபத்தான முயற்சிகளுக்குப் பதிலாக மோரை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் இலகுவான தீர்வாகும். காரம், உப்பு, எண்ணைப் போன்றவற்றைத் தவிர்த்து புளிப்பு ஏறாத மோர், புளி சேர்க்காத ரசம் சோறு ஆகிய எளிய உணவினை உண்டு வர மிகச் சில நாட்களிலேயே சிறுநீரகம் அல்லது பித்தப்பை கல் தொல்லைகள் நீங்கி விடும்.
தயிரை நீர் விட்டு ஆற்றினால் அது மோர் என்று நினைக்கிறோம். தயிரில் வெண்ணையை விலக்கா விட்டாலும் பாதகமில்லை. தயிரை உடைப்பது முக்கியம். உடைப்பது என்றால் அதன் இயல்பைச் சிதைப்பது. தயிர் திரிதிரியாகக் கூட இல்லாத அளவிற்கு நீர்க்கச் செய்வது. மோர் ஊற்றிய பாத்திரத்தில் சிறிதும் ஒட்டாத அளவிற்கு நீர்க்கச் செய்தல் வேண்டும்.
அதிலும் இன்றைய பாக்கெட் தயிரை மோராக்க நினைத்தால் அதில் உடல் நலப்பண்பு கிடைக்காது. பாக்கெட் பாலைக் காய்ச்சி உறை ஊற்றினாலும் நல்ல மோருக்கான தயிரைப் பெற முடியாது. கறந்த பாலை வாங்கி, நிதானமான சூட்டில் காய்ச்சி, உறை ஊற்றி, சுமார் 8 மணிநேரம் புளிக்க விட்டு அதனையே மோராக்க வேண்டும். அதிலும் காய்ச்சிய பாலை மண்பாண்டத்தில் ஊற்றி ஆற வைத்து உறை ஊற்றி வைத்தல் கூடுதல் பலனைத் தரும்.
தயிர் சேர்ந்து சேர்ந்து மீந்து விட்டால் அதில் நீரை ஊற்றி அடித்து மோர்க் குழம்பு சமைக்கிறார்கள். தயிர் ஒரு அளவுக்கு மேல் புளித்து விட்டால் அதில் நச்சேறி விடும். எனவே அதில் மோர்க்குழம்பு சமைப்பது உடலுக்கு உகந்ததல்ல. அடிக்கடி இத்தகைய குழம்பை எடுத்துக் கொண்டால் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
போப்பு, 96293 45938
கறந்த பாலில் உறையூற்றி தயிராக்கி அதனைக் கடைந்து தேறின மோரைச் சோற்றுடன் பிசைந்து உண்டால் இந்தக் கோடை கால வெயிலுக்கு அத்தனை இதம். கடைந்தெடுத்த மோரில் வாசமிக்க கறிவேப்பிலையை கையால் பிச்சிப் போட்டு, கெட்டிப் பெருங்காயத்தை துளியளவு இடித்துப் போட்டு, கடுகு சீரகம், காய்ந்த மிளகாய் தாளிப்பை முறுக விட்டுப் போட்டு அரிந்த மல்லித் தழையை பசுமை குன்றாமல் தூவி வைத்தாலே பார்க்கப் பார்க்க ஆனந்தம்.
அதனை உதட்டோடு பொருத்தி உறிஞ்சிக் குடித்தாலும் சரி, ஆறின சோற்றுடன் நொறுங்கப் பிசைந்து வைத்துக் கொண்டு ஒரு கைப்பருக்கையும், ஒருவாய் மோருமாகக் குடித்தாலும் சரி அது வார்த்தையில் அடங்காத சுவை. சுவையோடு கூடி உடலில் ஏசியைப் பொருத்தி விட்டது போல அத்தனை குளுமை. ஊட்டி கொடைக்கானலைக் கொண்டு வந்து சமதளத்தில் பரவ விட்டதைப் போல அப்படி ஒரு சுகம்.
மோரிருக்க கோடைக்குப் பயமேன்.
காண்போம் கோடையில் குளுமை.






