என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள் - வ.சுப. மாணிக்கம்!
- பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரிடம் தொடக்கத்தில் தமிழ் கற்றார்.
- கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சீதை படும் மனத்துயரை விளக்கி ஒரு பாடல் வருகிறது.
தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், கட்டுரை ஆசிரியர் எனப் பற்பல பெருமைகள் கொண்ட தமிழறிஞர்.
அவரது நடை அழகிய பழந்தமிழ்ச் சொற்களோடு தனி எழிலுடன் அமைந்திருக்கும். அவரது எழுத்தைப் படிக்கும்போது கருத்திற்கும் முன்பாக நம்மை வசீகரிப்பது அவரின் தமிழ் நடைதான்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில், வ. சுப்பிரமணியன் செட்டியார், தெய்வானை ஆச்சி ஆகியோரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் மாணிக்கம். (1917-ம் ஆண்டு எப்ரல் 17-ந் தேதி.) ஏழு வயதிற்குள்ளாகவே தாய் தந்தையை இழந்த மாணிக்கம், தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டார்.
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரிடம் தொடக்கத்தில் தமிழ் கற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முதுகலைப் பட்டம் பெற்றார். இலக்கண ஆய்வுக்காக எம் ஓ எல் பட்டமும் சங்க இலக்கிய ஆய்வுக்காக முனைவர் பட்டமும் பெற்றார்.
ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் இவரின் மாணவர்கள்.
பின்னர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இவர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிக்கான தொண்டுகள் காலத்தால் நிலைபெற்றவை.
பற்பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்த இவர் தமிழ் யாப்பிலக்கண வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார்.
அவரின் நூல்களில் மிக முக்கியமான நூல் என்று `கம்பர்` என்ற நூலைத்தான் சொல்ல வேண்டும். தட்டிப் பார்த்து டி.கே.சி. கம்பர் எழுதாதவை என்று விலக்கிய பாடல்களும் கூட கம்பர் எழுதியவைதான் எனத் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு, வ. சுப. மா. விளக்கும் இடம் அவரின் அறிவாற்றலுக்குச் சான்று.
டி.கே.சி. நீக்கிய பாடல்களை விட்டுவிட்டுப் பார்த்தால் கதைத் தொடர்ச்சி கிட்டவில்லை என்பதை வைத்துக்கொண்டு மேலும் ஆராய்கிறார் வ.சுப. மாணிக்கம். காப்பியத்தில் கதைப் போக்கிற்காக அமைந்த சில செய்யுள்களும் மற்றபடி உன்னதமான கவிதைகளும் இருப்பது இயல்பே என்றும் எந்தக் காப்பியமும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் தெரிவிக்கிறார்.
ராமன் நடந்தான் என்று ஒரு செய்யுளில் சொன்னால்தான், `மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ` என்று அதன் பின்னர் ஒரு கவிதையை எழுதமுடியும் என்கிறார்.
சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி தஞ்சாவூர்க் கோபுரத்திற்கு அந்த ஒற்றைக் கலசத்தைக் கொண்டு வந்தார்கள். கோபுரத்தில் உச்சியிலிருக்கும் கலசத்தைப் பார்க்கும்போது சாரத்தின் உதவியால்தான் அது உச்சிக்கு வந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாக உவமை கூறி வ.சுப. மாணிக்கம் விளக்கும் அழகே அழகு.
மண்டோதரி புலம்பலாகக் கம்பராமாயணத்தில் வரும் `வெள்ளெருக்கஞ் சடைமுடியான்` என்ற பாடலுக்கு வ.சுப.மா. தரும் விளக்கம் நயமானது.
`கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!`
என்ற வரிகளில் வரும் `ஒருவன் வாளி` என்ற சொற்றொடரை `ஒப்பற்றவனின் அம்பு` என்பதாகப் பொருள் கொள்வதே மரபு. ஆனால் வ.சுப. மாணிக்கம் அந்தச் சொற்றொடரை `ஒரு வன்வாளி` எனப் பிரித்து ஒரு வலிமையான அம்பு எனப் பொருள் காண்கிறார்.
`விற்பெருந் தடந்தோள் வீர...` எனத் தொடங்கும் கம்பன் கவிக்கு வ.சுப.மா. தரும் விளக்கம் போற்றத் தக்கது. `நங்கையைக் கண்டேனல்லேன்` என்ற சீர்களைக் `கண்டேன் அல்லேன்` என்று பிரிப்பதே வழக்கம். இவரோ `கண்டேன் நல்லேன்` எனப் பிரித்துப் புதிய விளக்கம் தருகிறார்.
இப்படி அவர் காணும் நயங்கள் இன்னும் எத்தனையோ. ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்றபடி, இந்த நயமே வ.சுப.மா. வின் அறிவாற்றலைப் புலப்படுத்தும்.
`சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம்` போன்ற அவரின் புதிய சொல்லாக்கங்கள் நம் சிந்தனையைத் தூண்டுபவை.
வ.சுப.மா. ஒரு மரபுக் கவிஞரும் கூட. `புரட்சி மண்டோதரி` என்பது அவரின் கவிதைப் படைப்பு. அதில் ராவணன் அசோகவனத்தில் இருக்கும் சீதையைச் சந்திக்கப் போவதற்கும் முன்பாகத் தான் அங்குபோய்க் காத்திருக்கிறாள் மண்டோதரி. ராவணன் சீதையைக் காண அங்கு வந்ததும் மண்டோதரியைக் கண்டு நடுங்குகிறான்.
அந்தக் காட்சியைக் கவிதையாக்கும் வ.சுப.மா. ராவணனின் மனநிலையை விளக்கப் பற்பல உவமைகளைக் கையாள்கிறார். ஒரே மன உணர்வுக்குப் பல உவமைகளைக் கூறும் அவரது அபார ஆற்றல் வியப்பில் ஆழ்த்துகிறது.
`கள்ளமாய் எழுதித் தேர்வில்
கைப்படு பேதை போல,
எள்ளலாய்ப் பெண்ணைப் பேசி
இடிபடும் கயவன் போல,
துள்ளலாய் வேலி தாண்டித்
தொடுத்துணும் மாடுபோல,
உள்ளமாய் நடுக்கம் கொண்டான்
உம்பரை நடுக்கஞ் செய்தான்!`
கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சீதை படும் மனத்துயரை விளக்கி ஒரு பாடல் வருகிறது. அவள் மனநிலையை விளக்க அடுத்தடுத்துப் பல சொற்களை அடுக்குகிறார் கம்பர். கம்பரைக் கவிச்சக்கரவர்த்தி என்று காட்டும் பல பாடல்களில் அதுவும் ஒன்று:
`விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல்
வெருவல்
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை
எண்ணித்
தொழுதல் சோருதல் துளங்குதல் துயருழந்
துயிர்த்தல்
அழுதல் அன்றி மற்றயலொன்றும்
செய்குவதறியாள்!`
வ.சுப. வின் புரட்சி மண்டோதரியைப் படிக்கும்போது அவர் கூறும் ராவணனின் மனநிலை குறித்த உவமைகள் கம்பரின் இந்தப் பாடலில் வரும் சொல்லடுக்குகளை ஒப்பிட்டுப் பார்த்து நம்மை மகிழத் தூண்டுகின்றன.
`மாணிக்கக் குறள்` என்ற கவிதை நூலில் வ.சுப.மா. தமிழுக்குக் கையாண்டிருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நயமான அடைமொழிகள் பற்றி என்ன சொல்ல! `குளிர்தமிழ், பழுத்த தமிழ், கனிதமிழ்` என்றெல்லாம் தமிழைக் கொஞ்சுகிறார் அவர். அவற்றைப் படிக்கும்போது, `தமிழுக்கும் அமுதென்று பேர்` என்ற பாரதிதாசன் கவிதையும் கூடவே நம் மனத்தில் எழுந்து நம்மை மகிழ வைக்கின்றது.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என்னும் கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர் வ.சுப.மா.. நா.பா. எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்ட புதிதில் அதைக் கடுமையாக எதிர்த்தார். செருப்புக்காகக் காலை வெட்டலாமா எனக் கேட்டுத் துக்ளக் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். ஆனால் பின்னர் எழுத்துச் சீர்திருத்தத்தின் இன்றியமையாமையை உணர்ந்து அவரே அதை ஏற்றார்.
கி.ஆ.பெ. விஸ்வநாதன் கடைசி வரை எழுத்துச் சீர்திருத்தத்தின் கடும் எதிர்ப்பாளராகவே இருந்தார். ஐராவதம் மகாதேவன், வா.செ. குழந்தைசாமி போன்ற சில பிரமுகர்கள் தொடக்கத்தி்ல இருந்தே அதை ஆதரித்தார்கள்.
கணிப்பொறிக்குச் சீர்திருத்த எழுத்து சுலபமாய்ப் பொருந்தக் கூடியது என்பது இன்று நிரூபணமாகியிருக்கும் ஓர் அறிவியல் உண்மை. இன்று கணிப்பொறித் துறை மிகப் பெரிதாக வளர்ந்து எல்லாத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் வ.சுப.மா. இப்போது இருந்தால் முற்போக்குச் சிந்தனைகள் உடைய அவர், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பாரா என்பது ஒரு கேள்விக் குறியே.
`நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை,
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை,
நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை,
நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை,
பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை,
பண்ணரம்பின் இசைமுழுதும்
யாழுக்கில்லை,
எல்லாமே பிறர்க்குழைக்கக்
காணுகின்றேன்,
என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்
வேண்டும்!`
என்பது வ.சுப.மா. எழுதிய மரபுக் கவிதைகளில் ஒன்று.
திருப்பூர் கிருஷ்ணன்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதே இவரது கோட்பாடு. தமிழ் வழியிலேயே குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். `தமிழ் வழிக் கல்வி இயக்கம்` என்ற அமைப்பை நிறுவினார். இந்த இயக்கம் நன்கு பரவ வேண்டும் எனப் பல் ஊர்களுக்குத் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.
தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழக வடிவமைப்புக் குழுத் தலைவர் எனப் பற்பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவரது உயிலில் இவர் தெரிவித்திருந்தவை:
`தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கு அறநிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டும். தாம் பிறந்த ஊரான மேலைச் சிவபுரியில் மருத்துவம், குழந்தை நலம், கல்வி போன்ற தொண்டுகள் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செய்யப்பட வேண்டும். தாம் சேமித்து வைத்த 4500 புத்தகங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும்.`
இவையெல்லாம் அவரது குடும்பத்தினரால் பின்னர் நிறைவேற்றப்பட்டன. இவர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் 1989 ஏப்ரல் 25-ந் தேதி புதுச்சேரியில் காலமானார். இவர் காலமானபோதும் கூட இவர் கையில் இருந்தது திருவாசகப் புத்தகம்தான்.
வ.சுப. மாணிக்கத்தின் மனைவி பெயர் ஏகம்மை ஆச்சி. மூன்று புதல்வர்கள். தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி. மூன்று புதல்விகள் தென்றல், மாதரி, பொற்கொடி.
வ.சுப. மாணிக்கத்தின் குழந்தைகள் எல்லோரும் காலஞ்சென்ற தங்கள் தந்தை மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
தமிழ் நாடு அரசு வ.சுப. மாணிக்கம் காலமான பின்னர் அவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கி அவர் பெயருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com






