என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மகத்துவம் மிக்க மண்பானை பொங்கல்!
- வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீர் தரும் ஒன்றாகத்தான் மண்பானை இன்றைய தலைமுறைக்கு தெரியும்.
- உணவளிக்கும் உழவைக் கொண்டாடும் திருவிழா பொங்கல் மட்டுமே.
"ஏனமெல்லாம் எவர்சில்வர் இருந்து விட்டால் அவர் செல்வர்
ஏழைப்பெண்களும் வேண்டும் என்று சொல்வர் - கணவர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்"
இது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ஒரு பாடல்.
எவர்சில்வர் பாத்திரங்கள் அதிகமாக புழக்கத்தில் வரத்துவங்கிய காலகட்டமாக இருக்கவேண்டும்.
அப்படின்னா எதுல சோறு பொங்குவீங்க...? என இளசுகளின் குரல் கேட்கிறது.
எவர்சில்வருக்கு முன்னால் ஈயம்... பித்தளை... தாமிரம் என பாத்திரங்கள் புழங்கின.
அதிலும் அன்றாடத்துக்கு ஈயம்...
அதற்கடுத்து பித்தளை...
அப்புறம் துட்டுப்பானை.
இந்தப் பாத்திரங்களை புழங்குவதை வைத்தே ஏழையா...பணக்காரரா என கணித்து விடலாம்.
அப்படியெல்லாம் கணிக்க விடாமல் எல்லோரும் சமமாக புழங்கிய பாத்திரம் ஒன்று இருந்தது...
அது மண்பானை!
வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீர் தரும் ஒன்றாகத்தான் மண்பானை இன்றைய தலைமுறைக்கு தெரியும்.
ஆனால்.. முன்பெல்லாம் மண்பானைதான் சகலமும்.
கீழ பெரிய்ய பானை...
அதுக்கு மேல அத விட சின்னது...
அதுக்கும் மேல அத விட சின்னது...
இப்படி நாலஞ்சு அடுக்குப் பானைதான்...
அந்தக்கால வைப்பறை...!
ஒன்னுல தானியம்... தவசு.
ஒன்னுல கருப்பட்டிச் சில்லு...
ஒன்னுல மாவடு...
ஒன்னுல கருவாடு...
இதுக்கிடையில ஏதோவொரு பானையில அம்மாவோட சிறுவாட்டுக் காசு.
எல்லா வீட்டு மூலையிலையும் இப்டி ஒரு அடுக்குப்பானை வரிசை இருந்தது.
உண்மையில் சோற்றை விட... கூழுக்கே மண்பானை ஏற்றது.
கூழ்ப்பானை... சோத்துச்சட்டி...
என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
அரிசி சோறு வரும்போதே தன்னோடு ஈயச்சட்டியையும் கூட்டிக்கொண்டே வந்திருக்கும் போல.
இன்றைக்கு எல்லாம் காலையில் பொங்கின சோறை மத்தியானம் சாப்பிடுவதில்லை.
சுடச்சுட சூடான உலகம் இது.
ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சோறு பொங்கி, அதை மறுநாள் அதே நேரம் வரை வைத்திருந்து சாப்பிட்ட கடைசித் தலைமுறை நாம்தான்.
காடு கண்ணிகளுக்கு போய்ட்டு வந்து...
பொழுதடைய சோறாக்க உட்கார்ந்தா...
நல்லா இருட்டுன பிறவுதான்... சோறு கிடைக்கும்.
அந்த மண் பானை நிறைய்ய சோறாக்கி...
சாப்பிட்ட பிறகு... தண்ணி ஊத்தி வச்சு...
அந்த நீச்சத்தண்ணிய காலையில குடிச்சுட்டு..
மிச்சம் இருக்குற நீச்சத்தண்ணியில கிடக்குமே அதுதான் ஊற வச்ச சோறு. அதன் மகிமையே தனி...!
கூழ்... சோறு மட்டுமல்ல... தொட்டுக் கொள்ளும் வெஞ்சனத்திற்கும் மண்பானையே ருசி தரும்.
கைநிறைய்ய மிளகாய்ப் பழத்தை கிள்ளிப்போட்டு...
அஞ்சாறு புளியம்பழத்தை அதுல போட்டு...
அதுக்குத்தக்கன உப்பையும் சேர்த்து...
மண்பானையில மூனு நாளு ஊற வச்சு...
அதை கூழுக்கு கடிச்சுக்கிட்டா...
அட அட... கொண்டா கொண்டானு கூழ்ப்பானை காலியாகும்.
வாழ்வோடு ஒன்றிணைந்திருந்தது மண்.
பிறந்த ஊரை விட்டு வெளியே போகும்போது ஊரின் எல்லையில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு போவது...
விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டால் அங்கேயே கொஞ்சம் மண்ணை அள்ளி காயத்தில் போடுவது...
வெளியூரில் உள்ள குலசாமி கோயிலில் பிடி மண்ணெடுத்து...
அந்த மண்ணை கலந்து சொந்த ஊரில் குலசாமிக்கு கோயில் கட்டுவது...
பாவம் செய்தவர்களை மண்ணையள்ளித் தூற்றி சாபமிடுவது... என மண்ணோடு உறவாடிய சமூகம் நாம்.
நாம் மட்டுமல்ல உலகின் எத்திசையிலும் உள்ள மரபார்ந்த இனக்குழுக்களும் இப்படித்தான்.
அந்த மண் நம்கூடவே குடிக்கும் நீரில்... உண்ணும் உணவில்...
ருசியேற்றி நம்மை வளர்ந்தெடுத்தது மண்பானை வடிவில்.
இன்றைக்கு மண்பானைகளை இழந்து நிற்கிறோம்...
சரியாகச் சொன்னால் மண்ணையே இழந்து கொண்டிருக்கிறோம்...!
நீர்... நிலம்... நெருப்பு காற்று... வெளி... இப்படி பஞ்சபூதங்களில் ஈர்க்கும் சக்தி உள்ள ஒரே இயற்கை மண்.
பிறந்த மண்ணை வைத்தே நம் குணமும் இருக்கும்.
உலகின் பெரும்பாலான பண்டிகைகள் அவரவர் மண்ணை மையமிட்டே இருக்கும்.
அப்படியான பண்டிகைகளில் தலையாயது நம் பொங்கல்.
எல்லா பண்டிகைக்கும் மதம் சார்ந்த கதைகள் பின்புலம் உண்டு.
அப்படியெல்லாம் எந்த மதப்பின்புலமோ... சாதிப்பின்புலமோ இல்லாமல்,
இயற்கையை...
உணவளிக்கும் உழவைக் கொண்டாடும் திருவிழா பொங்கல் மட்டுமே.
இன்னும் சரியாகச் சொன்னால் தீட்டுகளுக்கு. சடங்குகளுக்கு அப்பாற்பட்டது பொங்கல்.
பொங்கல் சமயத்தில் வீட்டில் இறப்பு நிகழ்ந்துவிட்டாலும் கூட விரைவாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு.. பொங்கலுக்கு தயாரான மரபு நமக்கு உண்டு.
பொங்கல்...
சொல்லும்போது மட்டுமல்ல. நினைக்கும் போதே தமிழர் உள்ளமெல்லாம் தித்திக்கும்.
வாழ்வின் அன்றாடச் சலிப்பிலிருந்து நம்மை மீட்டெடுக்கவே பண்டிகைகளும்... கொண்டாட்டங்களும். ஆனால் பொங்கல் பண்டிகை நம்மை சலிப்பில் இருந்து மீட்பது மட்டுமல்ல...
நம் மரபை நம் அடையாளத்தை நமக்கு மீட்டெடுக்கிறது.!
அதென்ன நம் மரபு...?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
உழவே தலை...
நன்றி மறப்பது நன்றன்று...
இவை நம் மரபின் சில கூறுகள்.
உழவுக்கு துணைநிற்கும் இயற்கைக்கு எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி நன்றி கூறி கொண்டாடுவதே பொங்கல்.
எளிமையாகச் சொன்னால்...
அந்தப் பகுதி மண்ணில்...
அந்தப் பகுதி தண்ணீரைக் கலந்து... மண்பானை செய்து...
அந்தப் பகுதி வெயிலில் காயவைத்து...
அங்கு விளையும் காய்கறிகளை...
கிழங்குகளைப் படைத்து...
இயற்கையை வணங்கி...
அங்கிருக்கும் மாடுகளை அழகுசெய்து.
கொண்டாடி மகிழ்வதே பொங்கல்.
இன்றைக்கு வேறு வேறு வடிவங்களில் பொங்கல் மாற்றமடைந்திருக்கிறது.
அதில் முக்கியமான மாற்றம்... மண்பானை பொங்கல் பண்டிகையிலிருந்து தள்ளி நிற்பது.
அது நடக்கத் துவங்கிய காலம்தான்... இக்கட்டுரையின் துவக்கமான பாவேந்தர் பாடல்.
ஒரு காலகட்டம் வரை சமையல் முழுமைக்கும் மண்பானைதான்.
அதிலும் மீன் குழம்பிற்கும் மண்பானைக்கும் அப்படியொரு பொருத்தம்.
சோத்துப்பானை, குழம்புப்பானை...
அதுக்கு தனி... இதுக்கு தனி...
என மண்பானைகள் உண்டு.
பொங்கலுக்கு முதல்நாளே புதிதாக மண்பானை வாங்கி நன்கு கழுவி... வெயிலில் காயவைத்து விடுவார்கள்.
பானையின் கழுத்துக்கு
பூ அணிசெய்து...
பொட்டிட்டு...
வீட்டின் முன்பு கோலத்தின் மையத்தில்... வைத்து
விறகடுப்பில் மண் பானையை ஏற்றும்போது குலவையிடுவர்.
அடுப்பேற்றி பொங்கல் பொங்கி வருகையில் மண்பானையின் வாயிலிருந்து பொங்கி வருவது பேரழகு.
அதுவும் பொங்கல் வைக்கும் பெண்ணின் வலது புறமாக பொங்கி வருவது பெருமகிழ்ச்சிக்கு உரியது.
அப்படி மண்பானையில் பொங்கும் பொங்கலுக்கு தனி ருசி உண்டு.
இன்றைக்கு நம் மரபின் பல கூறுகள் பொங்கலில் உள்ளன.
மாடுபிடி... சல்லிக்கட்டு...
கரும்பு... காய்கறி... கிழங்கு படைத்து இயற்கையை போற்றுதல்.
பாரம்பரிய உடை அணிதல் என பலவற்றை நாம் மறக்கவில்லை.
நாம் கைவிட்ட முக்கிய மரபு மண்பானை.
இன்றைக்கு பெரும்பாலான இடங்களில்... உணவகங்களில மண்பானை சமையல் என அறிவிப்பு காணப்படுகிறது.
அதற்கு காரணம் அதன் ருசி.
கண்மணி ராசா, 8903543802
சமைக்கப்படும் உணவின் தன்மைக்கேற்ப... மண்பானை அதை ருசியூட்டுகிறது.
நிறைய இடங்களில் மண்பானைத் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால்... உழவிற்கு உறுதுணையான நிலத்திற்கு... நீரிற்கு...
நெருப்பிற்கு... காற்றிற்கு நன்றி கூறும் பொங்கலில் மண்பானை இல்லாமலிருப்பது சற்றுக் குறையே.
இந்தப் பொங்கல் திருநாளை மண்பானையில் வைப்போம்.
அதன் தனித்த ருசி எல்லாச் சமையலுக்கும் மண்பானையை பயன்படுத்த நம்மை நகர்த்தும்.
மண்பானையைக் கொண்டாடுவோம்.
அதன் வழியே...
மண்ணைக் கொண்டாடுவோம்
அதன் வழியே...
மக்களைக் கொண்டாடுவோம்.
வாழிய பொங்கல்...
வாழிய நற்றமிழ் நாடு.!






