என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நள்ளிரவில் நடுவழியில்..!
    X

    நள்ளிரவில் நடுவழியில்..!

    • மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்றதுக்குக் கூலி எதுக்கு சார்?’ என்றான் கணீரென்று.
    • அந்த இளைஞர்களின் கண்ணியமும், உயர்ந்த உள்ளமும் விவரிக்க முடியாதவை.

    'நன்மை செய்ய திராணி இருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே'.

    - நீதிமொழிகள் 3:27

    பண்டிகைக் காலம் என்றாலே பரபரப்புதான். மகிழ்ச்சி, புத்துணர்ச்சி என ஓர் இன்பக் கிளர்ச்சி நமக்குள் ஏற்பட்டுவிடும். வேலைகள், கடமைகள், வியாபாரம், கல்வி, இப்படிப் பலவற்றிற்காக நாள்தோறும் ஓய்வொழிச்சல் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்வை, அவ்வப்போது வருகின்ற பண்டிகைகள்தான் புதுப்பிக்கின்றன.

    பண்டிகைகளில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ; ஆனந்தம் இருக்கிறது. வாழ்த்துகளையும் அன்புப் பரிசுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் காலம் அதுதான்.

    ஒரு மார்கழி மாதம். கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம். பொதுவாக, விழாக்காலங்களில் விமானம், ரெயில், பேருந்து - எதுவாக இருந்தாலும், ஓரிரு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும். இல்லை என்றால், பயணத் திட்டமே பிரச்சினைக்கு உரியதாகிவிடும். அந்நாட்களில், போக்குவரத்து நிலையங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும்.

    காரில் பயணிப்பது, எப்போதுமே ஒரு சுகமான அனுபவமாக எனக்குத் தோன்றும். வசதியான நேரத்தில் புறப்படலாம்; இஷ்டப்பட்ட ஹோட்டலில் நிதானமாகச் சாப்பிடலாம்; இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். இப்படிச் சில சவுகரியங்கள்.

    கிறிஸ்மஸ் பண்டிகைக்கென, அதற்கு இருதினங்களுக்குமுன் சென்னையிலிருந்து நெல்லைக்குக் காரில் புறப்பட்டோம். ஆனால், அன்று எதிர்பாராத விதமாக உடனடியாக நான் முடித்துக் கொடுக்க வேண்டிய ஒரு முக்கியப் பணி வந்துவிட்டது. பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்திற்கான ஸ்கிரிப்டை அன்று நான் எழுதிக் கொடுத்தால்தான், மறுவாரம் தயாரிப்பு நிறுவனம் அதைப் படப்பிடிப்புச் செய்ய முடியும். எனவே, தவிர்க்க முடியாத நிலை.

    அந்தப் பணியை நான் முடித்துக் கொடுத்துவிட்டு, சென்னையிலிருந்து நாங்கள் கிளம்பும்போது மாலை ஆறு மணி. வெளியூர்ப் பயணம் என்றால், அதிகாலையிலேயே கிளம்புவதுதான் எங்கள் வழக்கம். அந்நேரத்தில் பயணத்தைத் தொடங்குவது, மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.

    இரவு நேரத்தில் நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணத்தை நான் விரும்புவதில்லை. எனினும், அன்று அப்படித்தான் செல்ல நேர்ந்தது. திருச்சியை நாங்கள் எட்டும்போது நள்ளிரவாகிவிட்டது. இருண்ட நெடுஞ்சாலையில் எங்கள் கார் மட்டும் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து ஒருமணி நேரம் கடந்து, திருச்சி - மதுரைக்கு இடையே கார் விரைந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சத்தம். காரின் முன்புற இடது வீல் டயர் பஞ்சர் ஆகி கார் நிலைதடுமாற, சாலையின் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டேன்.

    ஒரே இருள். சாலையில் விளக்குகள் இல்லை. இருபுறமும் பொட்டல் காடு. குடியிருப்புப் பகுதிகள் எதுவும் கிடையாது. 'திக் திக்' என்றிருந்தது. மனதை பயம் கவ்விக் கொண்டது. தனிநபராக நிற்பதென்றால் நடுக்காடாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால், மனைவியும் மகளும் உடன் இருக்கிறார்களே. என்ன செய்வது!

    நான் காரில் இருந்து இறங்கினேன். டிக்கியில் ஸ்டெப்னி இருக்கிறது; தளவாடங்களும் இருக்கின்றன. ஆனால், எனக்கு வீல் மாற்றிப்போடத் தெரியாது. அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.

    நான் தடுத்தும் கேட்காமல், என் மனைவியும் மகளும் காரிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை எங்களுக்குள் பயம்...பயம். மார்கழிக் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. அச்சத்தினால் உடலும் மனமும் நடுங்கிக் கொண்டிருந்தன. இருதிசையிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. சில நிமிடங்கள் கழித்து, வெகுதூரத்தில் ஒரு வாகனத்தின் வெளிச்சம் புள்ளிபோல் தெரிந்தது. பேருந்தோ காரோ, அதை நிறுத்தி அவர்களிடம் உதவி கேட்பதுதான் ஒரே வழி. சாலையில் சற்று ஏறி நின்றிருந்தபடி, கையை நீட்டி உதவி கேட்டு அசைத்துக் கொண்டிருந்தேன். அந்த வாகனம் சற்று தூரத்தில் நெருங்கி வந்தபோதுதான், அது மிகப்பெரிய 'டிரக்' என்று தெரிந்தது. அப்போது எனக்குள் வேறொரு பயம் எழுந்தது. அதற்குள் அந்த 'டிரக்' எங்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து வேக வேகமாக மூன்று இளைஞர்கள் இறங்கினர். என் இதயம் படபட என்று அடிக்கடி தொடங்கியது.

    ஆபத்தில் சிக்கிக் கொண்டோமோ என்று என் மனம் பதறியது. அந்நேரம், அந்த மூன்று இளைஞர்களும் எங்களிடம் வந்துவிட்டனர்.

    'என்ன சார் பிரச்சினை?' என்றான் ஒருவன்.

    'பிரண்ட் வீல் டயர் பஞ்சர்' என்றேன்.

    ஒருவன் டார்ச் லைட் அடிக்க, மற்றொருவன் டிக்கியைத் திறந்து ஸ்டெப்னியை எடுத்தான். ஜாக்கி மற்றும் ஸ்பேனர்களை எடுத்து அடுத்தவனிடம் கொடுக்க, அவன் ஜாக்கியைச் சரியாகப் பொருத்தி வைத்துவிட்டு, ஸ்டெப்னியை உருட்டிக் கொண்டு வந்தான். ஒருசில நொடிகளில் கச்சிதமாக மாற்றி முடித்தான். அந்த மூவரும் வேறு வார்த்தைகள் எதுவும் பேசவில்லை. பஞ்சர் ஆன டயர் மற்றும் ஜாக்கி, ஸ்பேனர் ஆகியவற்றை டிக்கியில் வைத்துவிட்டு நகர்ந்தனர்.

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை நிறுத்தி, இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தேன். 'ஒண்ணும் காணும் சார். மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்றதுக்குக் கூலி எதுக்கு சார்?' என்றான் கணீரென்று.

    என்ன சொல்வதென்றே எனக்குத் தோன்றவில்லை. உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடினேன்.

    'நீங்க செய்த இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம். ரொம்ப நன்றி' என்றேன்.

    கவிஞர் தியாரூ, 9940056332

    'பரவாயில்ல சார். இந்த உதவிகூட செய்யலேன்னா மனுஷன்னு சொல்றதுல அர்த்தம் இல்ல. பத்திரமா போங்க சார்' என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக்கூட காத்திராமல், அந்த மூன்று இளைஞர்களும் ஓடிச் சென்று 'டிரக்'கில் ஏறினர். நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட பின்னர்தான், அவர்களின் டிரக் கிளம்பியது.

    அந்த இளைஞர்களின் கண்ணியமும், உயர்ந்த உள்ளமும் விவரிக்க முடியாதவை. அவர்களை மனிதர்களாய் அல்ல; தேவதூதர்களாய் எங்கள் கண்கள் கண்டன. மனிதத்தின் புனிதத்தை அவர்களின் ஆத்மார்த்தமான உதவியில் எங்களால் காண முடிந்தது.

    ஆபத்தில் பெறுகின்ற உதவிக்கு எந்தப் பொருளும் பணமும் ஈடாகாது. உள்ளார்ந்த அன்போடு ஒருவருக்கொருவர் உதவி செய்வதே மனிதத்தின் மேன்மை. இந்த சத்தியத்தை மனதில் இருத்திக் கொள்வதும், அதன்படி வாழ்வதுமே மானுடச் சிறப்பு.

    மனிதநேயத்துடன் மனப்பூர்வமாக நாம் செய்யும் உதவிகளால் எத்தனையோ நன்மைகள் நமக்கு உண்டு. நம் வாழ்க்கை அர்த்தம் பெறுவது உதவும் பண்பினால்தான். நாம் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பதவி பெறுவதற்குப் பணம் வேண்டும். உதவி புரிவதற்கு நல்ல மனம் இருந்தால் போதும். பிறர்க்கு நாம் செய்கின்ற உதவி கடுகளவோ கடலளவோ - அதைப் பெறுகின்றவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கேற்ப அது முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றது.

    ஆத்மார்த்தமான உதவி தெய்வீகமானது. அதனால்தான், அதைச் செய்கின்றபோது மனம் நெகிழ்கிறது; உடலில் ஓர் உற்சாகம் பிறக்கிறது; மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது.

    தேன் இருக்கும் பூக்களைத்தான் வண்ணத்துப்பூச்சிகள் விரும்புகின்றன. அவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன. அதே போன்றுதான் மனித சமூகம். நல்ல மனம் கொண்டவர்களைச் சுற்றிதான் நட்பும் உறவுகளும் இருக்கும்.

    சிலரைப் பார்த்தால், அவர்களை நெருங்குவதற்கே யாருக்கும் மனம் வராது. கடுமையான அதிகாரிபோல் விறைப்புடன் முகத்தை வைத்திருப்பார்கள். காரணம் என்ன? யாரும் உதவி கேட்டுத் தங்களிடம் வந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனால், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை ஒன்றும் சிறப்பாக இருப்பதில்லை. அதை அவர்கள் உணர்வதும் இல்லை.

    அரண்மனை போன்ற பெரிய பெரிய பங்களாக்களில் தனிமையாக வசிப்பவர்கள் இருக்கிறார்கள். கணக்கற்ற பொருட்செல்வங்களைக் கொண்டிருப்பார்கள்; எக்கச்சக்க வசதிகள் இருக்கும். எனினும், யாருக்கும் சிறு உதவிகூட செய்ய மாட்டார்கள். உறவினர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். கடிக்க முடியாத எலும்பைக்கூட தெருநாய்களுக்குத் தூக்கிப்போட, அவர்களின் மனம் சம்மதிக்காது.

    அற்ப மனம் என்பது அன்பிற்கு அப்பாற்பட்டது. சுயநலத்திலேயே முடங்கிக் கிடக்கும் மனதில் சுகமிருக்காது. அந்த வாழ்க்கை அர்த்தமற்றது.

    ஆற்று நீரில் விழுந்து தத்தளிக்கும் சிற்றெறும்பு, ஒரு குச்சிக்காக ஏங்கித் தவிக்கிறது. குச்சியோ இலையோ கிடைத்துவிட்டால், அது கரையேறிவிடுகின்றது. தக்க சமயத்தில் ஒருவருக்கு நாம் செய்யும் உதவி, அவருக்குப் புதுவாழ்வைக் கொடுத்துவிடக்கூடும். தற்கொலை எண்ணத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றிவிடவும் செய்யும். எல்லாவற்றிற்கும் ஆதாரம் நல்ல மனம்தான்.

    பெறுவதில் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுப்பதில் பெறுகின்ற இன்பம் அலாதியானது. நம்மை நாமே தட்டிக் கொடுப்பதற்கும், பெருமிதம் கொள்வதற்கும், அதைவிட காரணம் வேறொன்று தேவை இல்லை.

    ஒரு மிகப்பெரிய செல்வந்தன். அவனிடம் பொன்னும் பொருளும் கொட்டிக் கிடந்தன. நிலபுலன்கள் ஏராளமாய் இருந்தன. செல்வச் செழிப்பில் மிதந்தான். எனினும், அவனிடம் மனநிறைவு இல்லை.

    'ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் மனநிறைவு கிட்டும்' என்றார்கள். அப்படியே செய்தான். 'உண்டியலில் பணம் செலுத்தினால் புண்ணியம்' என்றார்கள். அப்படியும் செய்தான். அவன் எதிர்பார்த்த மனநிறைவு எதிலுமே கிடைக்கவில்லை.

    மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற ஓர் ஏழை விவசாயியை அவன் கண்டான். அவனிடம் கேட்டான்: 'உங்க மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?'

    'மனநிறைவுதான்'.

    'மனநிறைவை எப்படி வாங்குறீங்க?'

    'அதை வாங்க முடியாது; தானா வரணும். எல்லா உயிருக்குள்ளேயும் ஆண்டவன் இருக்கிறான். நான் நம்புறேன். அதனால எந்த உயிருக்கும் தீங்கு நெனைக்க மாட்டேன். வயக்காட்டுல உழைக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என்னாலான உதவிகளை மனசார செய்றேன். காசு பணத்த பெருசா நெனச்சா மனநிறைவு கிடைக்குமா. அன்புதான் முக்கியம்' என்று அந்த விவசாயி சொன்னபோதுதான் அவனின் மனக்கண் திறந்தது.

    நல்ல மனதோடு பிறர்க்கு உதவி செய்வதில் பெறுகின்ற மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி. அப்படிச் செய்யும்போது, நம் உள்ளம் விரிவடைகிறது; கருணையினால் கண்கள் ஒளிபெறுகின்றன. மனநிறைவான வாழ்க்கை நமக்கு வசப்படுகிறது. வாழ்வே இன்பமயமாகிறது.

    Next Story
    ×