search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்... சினேகாவின் சிநேகிதம்... நயன்தாராவின் சந்திப்பு
    X

    மீனா மலரும் நினைவுகள்... சினேகாவின் சிநேகிதம்... நயன்தாராவின் சந்திப்பு

    • சினேகாவின் குடும்பம் அப்போது சார்ஜாவில் இருந்தது. அவரது தந்தை அங்கு உயரிய பதவியில் இருந்தார்.
    • வாழ்க்கை எவ்வளவோ பாடங்களை நமது பயணத்தில் கற்றுத்தருகிறது.

    வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்களை சந்தித்து இருப்போம். அதில் பல சம்பவங்கள் எதிர்பாராததாக இருந்திருக்கும்... இன்னும் சில சம்பவங்கள் எதிர்பாராத ஆச்சரியங்களையும் கொடுத்து இருக்கும்.

    அப்படி என்னை ஆச்சரியப்படுத்திய இரண்டு சம்பவங்கள்...

    நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஏற்பாடு செய்து இருந்த மலையாள கலை நிகழ்ச்சிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்தேன்.

    எப்படியாவது மீனாவை பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன பொண்ணு அடம் பிடித்து இருக்கிறது. அவரது பெற்றோர் அந்த பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

    என்னை பார்த்ததும் அந்த பொண்ணுக்கு முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கணுமே...! அடேயப்பா முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரிந்தது. இமை மூடாமல் என்னையே பார்த்து பரவசப்பட்டு கொண்டிருந்தார்.

    ஆனால் நானோ அந்த பெண்ணை பார்த்து பரவசப்பட்டேன். எவ்வளவு அழகான முகம்..? குழி விழும் கன்னங்களோடு உதிர்த்த புன்னகை...! அவற்றை பார்த்து 'இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்ல...' என்று என் அம்மாவிடமே கூறினேன். அதை கேட்டதும் என் அம்மாவும் 'ஆமாம்.. ரொம்ப அழகா இருக்கிறாள்' என்றார்.

    அழகை ஆராதிக்காதவர்கள் யார்? அழகான அந்த பெண் பிற்காலத்தில் சினிமாவுக்கும் வருவார். தனது வசீகர புன்னகையால் பலரை கட்டிப்போடுவார் என்று நான் நினைக்கவில்லை.

    சினிமாவுக்குள் நுழைந்து பலரை ஆச்சரியப்படுத்திய அந்த முகத்தை பார்த்ததும் அந்த நாள் ஓட்டல் சந்திப்பு கண் முன் வந்தது. அவர் தான் சினேகா...

    சினேகாவின் குடும்பம் அப்போது சார்ஜாவில் இருந்தது. அவரது தந்தை அங்கு உயரிய பதவியில் இருந்தார். படத்தில் என்னை பார்த்தவருக்கு நான் துபாயில் இருக்கிறேன் என்பதை அறிந்ததும் நேரில் பார்க்க ஆசைப்பட்டு உள்ளார். பார்த்து விட்டார்.

    அந்த முதல் நாள் சந்திப்பில் வைத்தே அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விருந்தும் கொடுத்தார்கள். அன்று முதல் சினேகாவின் சினேகிதம் தொடர்ந்தது.

    இன்னொரு முன்னணி கதாநாயகியை நான் சந்தித்ததும் மறக்க முடியாதது. மலையாளத்தில் 'நாட்டு ராஜாவு' என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு சின்ன பொண்ணு 'மேக்-அப்' போட்டு கொண்டு அமர்ந்திருந்தார்.

    அவரும் பார்ப்பதற்கு லட்சணமாக நல்ல அழகாக இருந்தார். அவரையும் ரொம்ப 'க்யூட்டாக இருக்கிறாரே...?' யார் இவர் என்று கேட்டேன்.

    அப்போது தான் அவரும் அந்த படத்தில் கதாநாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்கள்.

    அந்த காலக்கட்டத்தில் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி நான் முன்னணி நட்சத்திரமாக நேரம்.

    அந்த படத்தில் நாங்கள் இருவரும் நடித்து இருந்தாலும் நாங்கள் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் எங்களுக்குள் பழக்கம் ஏற்படவில்லை.

    நேரில் சந்திக்கும்போது மட்டும் ஹாய்... என்று சிரித்துக் கொள்வேன். அதன் பிறகு எங்களுக்குள் அவ்வளவாக தொடர்பு இருந்ததில்லை.

    அந்த படமும் வித்தியாசமானது. அந்த படத்தில் இடம் பெற்ற 'மே மாசம்..' மனசினுள்ளே மழைத்துளியாய்... என்ற பாடல் அருமையாக இருக்கும். அந்த காட்சிகள் ஒவ்வொன்றிலும் ரசித்து ரசித்து நடித்தேன். ஏனெனில் நானும் மோகன்லாலும் நடித்த அந்த காட்சிகளில் காஸ்ட்யூம் புதுமையாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்தது.

    மலையாளத்தில் அந்த பாடலும் ரொம்ப 'ஹிட்' ஆச்சு.

    ரொம்ப நாளைக்கு பிறகு வளரும் தலைமுறையாக திரை உலகில் ஒரு நட்சத்திரம் ஜொலித்து ரசிகர்களை பரவசப்படுத்தியது. யார் அவர் என்று நினைத்தபோது தான் நாட்டு ராஜாவு படத்தில் சந்தித்த அந்த முகம் மனக்கண்ணில் வந்தது. அவர் தான் நயன்தாரா!

    இவர்கள் மட்டுமல்ல நடிகர் சிம்புவை நினைத்தால் இப்போதும் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்காக மொத்த கலைஞர்களும் சென்றிருந்தோம்.

    அந்த குழுவில் சிம்புவும் வந்திருந்தான். சிம்பு அப்போது ரொம்ப குட்டி பையனாக இருப்பார். அவர் தான் அப்போது எங்கள் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை.

    நாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வருவார். துறுதுறு என்று ஓடிக்கொண்டே இருப்பார். இப்போது அவரும் வளர்ந்து மிகப்பெரிய நடிகராக மாறியிருப்பது ஆச்சரியமும், சந்தோசமாகவும், இருக்கிறது. எத்தனை மாற்றங்கள்...? எத்தனை முன்னேற்றங்கள்...?

    ஒவ்வொன்றையும் நினைக்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்க்கை எவ்வளவோ பாடங்களை நமது பயணத்தில் கற்றுத்தருகிறது. அது வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவத்தை பதிவு செய்து விடுகிறது.

    மற்றுமொரு மறக்க முடியாத அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொட ரும்...)

    கலைஞர் தந்த பேனா பரிசு

    அரசியலில் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும் திரை உலகில் அவரும் ஒரு கலைஞர் என்பது தமிழ் திரையுலகுக்கு கிடைத்த பெருமை.

    கலைஞரின் கை வண்ணத்தில் தீட்டப்பட்ட அந்த கால வசனங்கள் எந்த காலத்திலும் பேசப்படுகிறது. அவரது வசனத்திலும் எனக்கும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தான் 'கண்ணம்மா' படம். கலைஞர் எழுதிய அந்த வசனம் முழுக்க தூய தமிழில் இருந்தது. அந்த பட டயலாக்குகளை பேசியபோது ஒரு சில சிறுசிறு வார்த்தைகளை காலத்துக்கு ஏற்ற வகையில் கொஞ்சம் மார்டனாக மாற்றினால் நல்லாயிருக்குமே! அப்போது தான் இளைஞர்கள் மத்தியில் எடுபடும் என்று எனக்கு தோன்றியது.

    ஆனால் கலைஞரின் வசனமாச்சே...

    அதை திருத்தும் தைரியம் எப்படி வரும்? திருத்தத்தை சொன்னால் கூட தவறாக நினைப்பார்களோ..? என்ற பயம். யோசித்து கொண்டிருந்தேன். அப்போது தான் வசனங்களை சொல்லிப்பார்த்தபோது சில இடங்களில் இப்படி மாற்றினால் நல்லா இருக்குமல்லவா என்று டைரக்டர் கேட்டார்.

    அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. நம்மைப்போல் தான் அவரும் நினைக்கிறார் என்று நினைத்து கொண்டேன். பின்னர் ஒரு சில மாற்றங்களை அவரே செய்தார். அப்போதும் பயந்து 'சார், இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று கூறினேன்.

    படப்பிடிப்பு போளூரில் நடந்தது. அங்கு தான் தங்கி இருந்தோம். போளூர் எனக்கு பிடித்த ஊர். அந்த ஊருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த ஊர் தான் என் அப்பா பிறந்த ஊர். அது எனக்கு கூடுதல் சந்தோசத்தை கொடுத்தது. ஓய்வு நேரத்தில் தாத்தா-பாட்டியை பார்க்க செல்வேன். பிசியாக ஓடிக் கொண்டிருந்த என்னை பார்த்ததும் தாத்தா-பாட்டிக்கும் உறவினர்களுக்கும் ரொம்ப சந்தோசம். அவர்களுடன் அமர்ந்து பேசியதில் எனக்கும் மகிழ்ச்சி. இப்படியாக கண்ணம்மாவும் மறக்க முடியாதவளாகி விட்டார். இந்த படத்தில் நடித்தபோது கலைஞர் எனக்கு ஒரு பேனா பரிசளித்தார். அந்த பேனாவை இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன்.

    Next Story
    ×