search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தேவார தேனமுதம்- கர்ம வினைகளை தீர்க்கும் பதிகங்கள்
    X

    தேவார தேனமுதம்- கர்ம வினைகளை தீர்க்கும் பதிகங்கள்

    • தோடு அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தன் இடப்பாகத்தில் கொண்டவர் ஈசன்.
    • மூன்று வயதுக் குழந்தையின் உள்ளத்தையும் கவர்ந்த கள்வன் ஈசன் என்று நயம்படப் பாடுகிறது மழலை மாறாத குழந்தை.

    "தோடுடைய செவியன் விடை யேறியோர் தூவெண் மதி சூடி

    காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்."

    -திருஞான சம்பந்தர்

    ஏழாம் நூற்றாண்டில் சைவம், தமிழ் மொழியும் பிற சமயத்தவரால் நெருக்குண்டு, வெளிச்சம் படாமல் இருந்த நேரம் வேதநெறி தழைத்தோங்க, குமரப்பெருமானே திருஞான சம்பந்தராக வந்து பிறந்தார் என்பார்கள்.

    சைவ, சமயநெறிகள் பலராலும் மறக்கப்பட்டு, சமணமும், பவுத்தமும் ஆதிக்கம் பெற்று வந்த காலத்தில் இறைவனால் அவரின் விருப்பத்தினால் அவதரித்தவர் திருஞான சம்பந்தர். தமிழ் மொழி தழைத்தோங்க, சைவம் ஏற்றம் பெற, ஈசனே அனைத்துக்கும் ஆதிமூலம் என்று உணர்த்தவே வந்தவர் சம்பந்தர்.

    தமிழ் மொழியே இறைவனை பூஜிக்க உகந்த மொழி என்கிறார்கள். எல்லையற்ற மந்திர, ஈர்ப்பு ஆற்றலுடன் இனிமையும், தெய்வீகமும் நிறைந்த மொழி தமிழ். அதை மீண்டும் உயிர்பிக்கவே தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    சேக்கிழார் பெருமான் "வண்டமிழால் மறை மொழிந்த பிரான்" என்று தன் பெரிய புராணத்தில் சம்பந்தரைக் குறிக்கிறார். சம்பந்தரும் தன் ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும், செந்தமிழில் பாட வந்த சம்பந்தன் என்று குறிப்பிடுகிறார். மறை ஞான சம்பந்தன், தமிழ் ஞான சம்பந்தன் என்று தன் பெயருக்கு முன்னே தமிழ் என்ற வார்த்தையைப் போட்டே இறைவனைத் துதிக்கிறார்.

    சிவ தீட்சை பெற்ற சிவபாத சேகரரும், பகவதி அம்மையாரும் இறைவன் அருள் பெற்ற பிள்ளை வேண்டும் என்று ஈசனை வேண்ட, அவரின் பக்திக்காகவும், உலகில் சைவம் செழிக்கவும், இறைவன் ஞானசம்பந்தரை அவதரிக்கச் செய்தார். சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாளில் தமிழாசான் சம்பந்தர் அவதாரம் செய்கிறார்.

    அவரின் மூன்றாவது வயதில் தந்தையுடன் கோவிலுக்கு வந்த சம்பந்தரை பிரம்ம தீர்த்தத்தின் கரையில் உட்கார வைத்து விட்டுத் தந்தை குளிக்கச் சென்றார். நீரில் மூழ்கி அகமர்ஷணம் என்னும் மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் தந்தை. வெகுநேரம் ஆகியும் தந்தை வராததால் பயந்து போன குழந்தை ஆழ ஆரம்பிக்கிறது. கோவில் கோபுரத்தைப் பார்த்து, கண்ணைத் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பிக்கிறது.

    அகில உலகத்துக்கும் ஈசனே அம்மையப்பன் என்று நினைத்தாரோ! வினைப்பயன் காரணமாக அன்று அவர் அழுததால், உலகமே மகிழ அற்புதமான பதிகங்கள் பிறந்தது என்கிறார்கள் சைவ அன்பர்கள்.

    அனைத்து உயிர்கள் மகிழ்ச்சி அடையவும், வேதநெறி தழைக்கவும், குழந்தை ஞானப்பால் அருந்தும் நேரம் நெருங்கி விட்டது என்று இறைவன் உமையவளுடன் காட்சி அளிக்கிறார்.

    உமாதேவி தன் திருமுலைப்பாலில் சிவஞானத்தைக் கலந்து பொற்கிண்ணத்தில் பாலை எடுத்துக் கொண்டு குழந்தையை நெருங்கி அதை ஊட்டுகிறார். தேவர்க்கும், மூவர்க்கும் கிடைக்காத பேறு பெற்ற பிள்ளை என்பதால் சம்பந்தர் பின்னாளில் ஆளுடைப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

    "புனிதவாய் மலர்ந்தழுத, சீதவள வயற்புகலித் திருஞான

    சம்பந்தர்" என்கிறது பெரிய புராணம்.

    தன் நியமங்களை முடித்துக்கொண்டு கரை ஏறிய தந்தை வாயில் பால் ஒழுக நின்ற குழந்தையைப் பார்த்து திகைக்கிறார். "யார் கொடுத்த எச்சில் பால்?" என்று ஒரு குச்சியை எடுத்து மிரட்ட, பிறக்கிறது முதல் தமிழ் வேதம்.

    தமிழின் முதல் எழுத்து "த்". பிரபஞ்சத்தின் ஒலி "ஓம்" இரண்டையும் சேர்த்து தன் பதிகத்தின் "தோ" என்பதை முதல் எழுத்தாக வைத்து "தோடுடைய" என்று ஆரம்பிக்கிறார்.

    ஜி.ஏ.பிரபா

    அந்த மூன்று வயதில் அமுதப்பால் அருந்திய வாயோடு பாடிய குழந்தையின் பாடல் ஒவ்வொன்றும் தேனாக இனிக்கிறது.

    இறைவனின் தோற்றம், உமையொரு பாகம் என்று விடைமேல் தான் கண்டு களித்த ஈசனைப் புகழ்ந்து தமிழின் இனிமையை இன்னும் அதிகரிக்கிறார்.

    "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி

    காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன்."

    தோடு அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தன் இடப்பாகத்தில் கொண்டவர் ஈசன். தூய வெண்ணிற மதியை தன் சடைமுடி மேல் தரித்து, சுடுகாட்டுச் சாம்பலைத் தன் உடல் முழுவதும் பூசிக் கொண்ட ஈசன் அவரின் உள்ளம் கவர்ந்த கள்வன் ஆகி விட்டார்.

    கள்வன் பிறர் பொருளைத் தானாக வந்து எடுத்துக் கொண்டு போய் விடுவான். அதுபோல் மூன்று வயதுக் குழந்தையின் உள்ளத்தையும் கவர்ந்த கள்வன் ஈசன் என்று நயம்படப் பாடுகிறது மழலை மாறாத குழந்தை.

    முன்பு பிரளய காலத்தில் உலகங்கள் அழிய, மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பிக்க நான்முகன் தவமிருந்து ஈசனின் வரம் பெற்ற தலம் பிரமபுரம் என்னும் சீர்காழி. இதையே

    "ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள் செய்த

    பீடுடைய பிரம்மாபுர மேவிய பெம்மானிவன் அன்றே" என்று குறிப்பிடுகிறார் ஞானப்பால் உண்ட ஞானக் குழந்தை.

    ஈசன் ஒருமுறை பிரம்மாவின் ஆணவத்தை அழிக்க அவருடைய ஒரு தலையைக் கொய்து விட்டார். கபாலம் ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டு விட்டது. அது நீங்க அவர் ஒவ்வொரு இடத்திலும் உணவு கேட்டு அலைய, காசி அன்னபூரணி கையால் உணவிட கபாலம் விடுபட்டது. இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கிறார் சம்பந்தர்.

    "முற்றாலாமையிள நாகமோடேன முளைக் கொம்பவை பூண்டு

    வற்றலோடு கலனாப்பலி தேர்ந்தென துள்ளம் கவர் கள்வன்."

    என்று புராண நிகழ்ச்சியைக் குறிக்கிறார்.

    வானவெளியில் பறந்து, திரிந்த மும்மதில்களையும் தன் ஒரே கணையால் எய்து அழித்தவர் ஈசன். அதனால் திரிபுராந்தகர் என்று அழைக்கப்படுகிறார்.

    பிரம்ம கபாலத்தில் மனமகிழ்வோடு பலி ஏற்க வந்த இறைவனே என் உள்ளம் கவர் கள்வன் என்கிறார்.

    சம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகம் முடிவில் தமிழ் ஞான முனிவன் பாடிய இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்களின் முன் வினைகள் அனைத்தும் அழியும் என்று ஆணையிட்டுக் கூறுகிறார். இதுதான் இவரின் சிறப்பு.

    நாம் ஒவ்வொருவரும் பல மந்திரங்கள், சுலோகங்கள் கூறுகிறோம். ஆனால் அவை பலிக்குமா என்ற ஒரு சந்தேகம் நம் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சம்பந்தர் தான் உரைத்த திருநெறியாகிய அருமறை, தமிழாகிய பதிகத்தைப்பாட பழவினைகள், ஊழ்வினைகள் தீர்வது எளிது. ஆணையிட்டு உரைக்கிறேன் என்கிறார்.

    "அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கையலர் மேய

    பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான் இவன்றன்னை

    ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த

    திருநெரியர் தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே" என்கிறார்.

    ஈசன் தமிழ் மொழியின் வடிவம். தமிழே அவரை போற்றுவதற்கு உரிய மந்திர ஆற்றல் பெற்ற மொழி என்கிறது சைவ சமயம். எனவே இந்தத் தேவாரப் பதிகங்களைப் பாடுவோர்கள் வானுறையும் தேவர்களுடன் வைத்து மதிக்கப்படுவார்கள் என்கிறார்.

    எந்த இடத்தில் தமிழில் பாடல்கள் பாடி அதன் பெருமை பேசப்படுகிறதோ அங்கு இறைவன் விளங்கி அருள் பொழிவார் என்கிறார் ஞானக் குழந்தை.

    "தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணி நல்ல

    முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிடம் ஓவார்" என்கிறார்.

    வேதங்களால் காண முடியாத ஈசன் தொலைவில் உள்ளதாகக் குறிக்கிறது மற்ற நூல்கள். ஆனால் சம்பந்தர் மட்டுமே இறைவன் நம் அருகிலேயே, நம் உள்ளத்துக்குள்ளேயே இருக்கிறார் என்றுதான் உள்ளம் கவர் கள்வன் என்கிறார்.

    சைவ சமயத்தின் ஒப்பற்ற ஆசானாக சம்பந்தர் கருதப்படுகிறார். சம்பந்தரின் பாடல்கள் இந்த உலக வாழ்வின் சவுபாக்கியங்களைத் தந்து முக்தி அளிப்பவை. குருவாக இருந்து நாம் மேன்மையடைய வழிகாட்டுகிறார் சம்பந்தர்.

    பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சம்பந்தர் குறுகிய காலத்தில் செய்த அற்புதங்கள் ஏராளம். அம்பிகையே, குழந்தை கைகளால் தாளம் தட்டிப் பாடுவதால் நோகும் என்று பொற்றாளம் தந்த பெருமைக்குரியவர். முத்துப் பந்தல், படிக்காசு பெற்றார்.

    பாம்பு கடித்து இறந்த பூம்பாவையை எழுப்பினார்.

    ஆண்பனையைப் பதிகம் பாடி பெண் பனையாக மாற்றினார்.

    அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார் முருகப் பெருமானே சம்பந்தராக வந்து பிறந்ததாகக் கருதுகிறார்கள். அப்பர் பெருமானே இவரின் பெருமைகளை அறிந்து சம்பந்தர் பயணம் செய்த முத்துச் சிவிகையைச் சுமந்து திருப்பூந்துருத்தி வந்தார்.

    தன் பதிகத்தின் மேலும், தமிழ் மொழி, இறைவன் மேலும் அளவற்ற நம்பிக்கை கொண்ட ஞானக் குழந்தை, தீர்மானமாகக் கூறுகிறது.

    'நார்மலிந்து ஓங்கு நான்மறை ஞான சம்பந்தன்

    செந்தமிழ் வல்லார் சீர் மலிந்து அழகார் செல்வமது

    ஓங்கிச் சிவனடியை நண்ணுவர் தாமே"

    - என்று பாடுகிறார்.

    தமிழ் வேதமாகிய செந்தமிழ்ப் பதிகங்களைப் பாராயணம் செய்பவர்கள் பொருட் செல்வமும் அருட் செல்வமும் நிறைந்து வாழ்வார்கள் என்கிறார்.

    "கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

    மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே."- என்ற சம்பந்தரின் கூற்றுப்படி "தோடுடைய செவியன்" என்னும் இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்களின் கர்ம வினைகள் யாவும் தீர்ந்து மறு பிறவி என்பது இல்லை என்பது உறுதி.

    தொடர்புக்கு,

    gaprabha1963@gmail.com

    Next Story
    ×