search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  ரசித்திருப்போம்! லயித்திருப்போம்!
  X

  ரசித்திருப்போம்! லயித்திருப்போம்!

  • சிலரோ நாடும் மக்களும் பாராட்டும் படியான புகழ்மிக்க மனிதராக உயர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
  • கடனுக்கே என்று தேநீர் விற்பதும், கடனுக்கே என்று அதனை வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு நடப்பதும் எந்தப் பயனையும் விளைவிக்காது.

  வாழ்தலை ரசித்து அதில் லயித்திருக்கக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.

  வாழ்க்கையில் என்றென்றும் எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்க வேண்டும்! என்றும், வாழ்க்கை எந்நேரமும் ரசிக்கும் படியாகவே அமைந்திருக்க வேண்டும்! என்றும் எல்லாரும் விரும்புகிறோம்.

  நமக்கு வாழ்க்கை ரசனை மயமாக அமைந்து, அந்த மகிழ்வில் எந்நேரமும் திளைத்திருக்க வேண்டுமென்றால், நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். பணம் காசு என்பதைவிட நல்ல ஒருமித்த எண்ணங்கள் உடைய நண்பர்கள் சூழ வாழ வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். சிலரோ நாடும் மக்களும் பாராட்டும் படியான புகழ்மிக்க மனிதராக உயர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆனால் உண்மை என்ன தெரியுமா?

  தேவையான பணம், புடை சூழ்ந்த நண்பர்கள் பட்டாளம், அளவுக்கு அதிகமான பெயர் புகழ் ஆகிய இவற்றையெல்லாம் உடைய பெரும்பான்மை மனிதர்களே மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல ரசனையான மகிழ்வில், தம்மை இழந்து லயித்திருக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவிப்போர்களிடம் இவை எல்லாமே இருக்கத்தான் செய்கிறது.

  அப்படியானால் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மகிழ முடியாமற்போனமைக்கு யாது காரணம்?

  மகிழ்ச்சிக்கான வழிமுறைகளைத் தேடி நாள்தோறும் அலைந்து கொண்டிருக்கிறது மனித இனம். அந்த வழிபாட்டில் கிடைத்து விடாதா? அந்த தியானத்தில் மலர்ந்து விடாதா? இந்த அறிவுரையில் புரிந்து விடாதா? இந்தத் துறவி உணர்த்திவிட மாட்டாரா? அதுவா மகிழ்ச்சி? இதுவா மகிழ்ச்சி? எனத் தேடி அலையும் மனித மனங்களே முதலில் தேடுவதை நிறுத்துங்கள்; தேடுவதை நிறுத்தினால் தெய்விகம் உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்; ஓடுவதை நிறுத்திய மனமே ஓசையற்ற மௌன அமைதியில் ஆழ்ந்து லயித்திருக்கும்.

  வாழ்க்கையை ரசிக்கவும் வாழ்க்கையில் லயிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் எத்தனையோ விதிமுறைகள் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் பூறந்தள்ளி விடுங்கள்; மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், வாழும் அந்த நொடிகளில் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது வாழ்தலில் ரசிக்கவும் லயிக்கவும் நிறைய இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

  ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகச் செல்கிறோமே! நம்மில் எத்தனை பேர் அந்தத் தேநீர் தயாரிப்பவர், அதனை எத்தனை லாவகமாய்த் தயாரித்து ஆற்றிக், கோப்பைகளில் நிரப்பித் தருகிறார் என்பதை ஆழ்ந்து கவனித்திருப்போம்?.

  ஆழ்ந்து கவனித்தலே ரசனையின் ஆரம்பம். பிறகு அதில் லயிப்பது இரண்டாவது கட்டம். தேநீர்த் தயாரிப்பவர், சுடுதண்ணீரையும், தேயிலைத் தூளையும் பாலையும் சர்க்கரையையும் கலந்து தருவதல்ல தேநீர்த் தயாரிப்பு. அவர் முதலில் அதில் ஆழ்ந்து ஈடுபடுகிறார்; வேகும் தேயிலைத்தூளின் பக்குவம் நிறத்தில், வாசத்தில் வெளிப்படத் தொடங்கியவுடன், பக்குவமாய்க் காய்ச்சிய பாலோடு கலந்து, அளவான சீனியிட்டு, இரு குவளைகள் கொண்டு அவர் ஒன்றை உயர்த்தி, மற்றொன்றைத் தாழ்த்தித் தாங்கி, நுரை கிளப்பி, ஆற்றி,வார்த்துத் தரும் அழகே ஒரு தியானம் போன்றது.

  பிறகு அவர் வார்த்துத் தரும் அந்தக் கண்ணாடி கிளாசை, வலது கையில் வாங்கிப் பிடிக்கும் அழகில் தொடங்கிவிட வேண்டும் நமது தேநீர் பருகும் ரசனை. உதடுகளுக்கிடையில் கண்ணாடி கிளாசின் விளிம்பைப் பட்டும் படாமலும் வைத்து, சுட்டு விடாமல், சொட்டுச் சொட்டாய்த், துளித் துளியாய்ச், சுவைத்துச் சுவைத்துப் பருகும் லயிப்பில், தேநீர் பருகுதலின் முழுப்பயனும் நமது மனத்திலும் உடம்பிலும் பரவிப் புத்துணர்வுப் பிரகாசம் வெளிப்பட்டுவிட வேண்டும்.

  இதைவிடுத்துக் கடனுக்கே என்று தேநீர் விற்பதும், கடனுக்கே என்று அதனை வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு நடப்பதும் எந்தப் பயனையும் விளைவிக்காது.


  பருகுவது, உண்பது, தின்பது, உறங்குவது, விழிப்பது, கழிப்பது,குளிப்பது, நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது, ஆடுவது, பயணிப்பது, வாகனம் ஓட்டுவது, உழைப்பது, எழுதுவது, வாசிப்பது, இசைப்பது, காண்பது, கேட்பது என எதைச் செய்தாலும், அந்த நொடிகளில் அந்தச் செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதே உண்மையான மகிழ்ச்சியையும் ரசனையையும் லயிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும்.

  சிலர் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கும்போது பார்த்திருக்கிறேன்; அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறி சன்னலோர இருக்கையைப் பிடிப்பர்; அமர்ந்த மறுநிமிடமே அயர்ந்து தூங்கி விடுவர். சிலருக்கு நின்று கொள்ள இடம் கிடைத்தாலே போதும்; மேலே கம்பியைப் பிடித்து உறங்கத் தொடங்கி விடுவார்கள். இவர்களுக்குப் பயணத்தின்போது கிடைக்கிற சுகானுபவங்கள் கிடைக்காமலே போய்விடும் அல்லவா?.

  கிராமங்களின் பசுமைச் சூழலும் அமைதியும், நகரங்களின் நெருங்கிய கட்டடங்களும் அவசர வாகன நெருக்கடிகளும் காண மகிழ்ச்சியையும் ரசனையையும் தரும்; அவற்றை உறங்கி வீணாக்கினால் மகிழ்ச்சி எங்கே தங்கும்?; ரசனை எங்கே பொங்கும்?. உறங்கும் நேரத்தில் உறக்கத்திலும், பயணம் செய்யும்போது பயணத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டாலே போதும்; ரசனைக்கென்று தனிநேரம் தேடி ஓடத் தேவையில்லை.

  நல்ல இசையைக் கேட்க வேண்டுமென்றால், சரியான காதொலிக் கருவி வாயிலாகக் கேட்க வேண்டும். சிலர் வானொலி கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்ய முடியும் என்பார்கள்; அவர்கள் கூற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. சில மாணவர்கள் காதொலிக் கருவியில் பாடலைக் கேட்டுக்கொண்டும், தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டும், வீட்டுப் பாடக் கணக்குகளை மேசையில் வைத்துப் போடுவதைப் பார்க்கலாம். அவர்களால் எதிலுமே உருப்படியாகக் கவனம் செலுத்த முடியாது; பாடலும் அரைகுறை; தொலைக்காட்சி ரசனையும் அரைகுறை; கல்விப்பாடமும் அரைகுறை என்று ஆகிப்போனால் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி எங்கே முழுமையாய் வந்து குடியேறும்?

  விருப்பமான பாடலைக் கேட்டால், பாடல் தீரும் வரை ஆழ்ந்து கேட்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பாடலின் நல்லிசையும் மென்குரலும் இதயம் வரை சென்று மனத்தை ஆசுவாசப் படுத்தும். பாடல் வரிகள், இலக்கிய இன்பமூட்டி மூளை வரை சென்று அறிவைப் புதுமை செய்யும். ஆழ்ந்து கேட்கப்படாத எதுவும் வெற்றோசையாகவே பொருளற்றுப்போய் ஒலிக்குப்பை ஆகிப்போகும்.

  கலந்துரையில் பேச்சைக் கேட்பதாயினும், எதிரே உள்ளவர் பேசிமுடிக்கும் வரை எவ்வித எதிருமின்றி, முழுமையாகக் காதைக் கழற்றிக் கொடுத்துக் கேட்கவேண்டும். அப்போதுதான் பேசுபவர்க்கும் மகிழ்ச்சி; பேச்சைக் கேட்பவர்க்கும் பெரும் பயன் விளையும். எதிரே உள்ளவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கேட்பவர் சரியாகக் கேட்காமல், தன்னுடைய மனத்திற்குள் எதிர்வாதம் நிகழ்த்திக் கொண்டிருந்தால், புரியாமையே மிஞ்சும்; ரசனையும் லயிப்பும் இல்லாமற் போகும்.

  வாழ்தலில் நமக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு தருணங்களும் நமக்காகவே வழங்கப்பட்டுள்ளன என்று சொந்தம் கொண்டாடி வாழத் தொடங்கினால் அவை முழுமையும் நம் ரசனைக்கானவையாகவே மாறிப்போகும். காலை எழுவது தொடங்கி இரவு உறங்கப் போகும்வரை நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் நமக்கே நமக்கானவை என எண்ணிச் செயல்பட்டால் எல்லாச் செயலும் இனிமைச் செயல்தான்.

  அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போல்வனவற்றில் நாம் பணியாற்றும்போது, இந்தப்பணியை நாம் நம் முதலாளிக்காகவும் மேலாளருக்காகவும் செய்கிறோம் என்று உழைத்தால் அது ரசனைக்குரிய மகிழ்ச்சிதரும் உழைப்பு கிடையாது. இந்த உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தால், லாபத்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும், ஏன் ஒருவகையில் நாம் வாழும் இந்தச் சமூகமும் பயன்பெறுவர் என்று கருதி உழைத்தால் அதைவிட மகிழ்ச்சியான உழைப்பு வேறு கிடையாது.

  எல்லாச் செயல்களுக்கும் ஒரு பலன் இருப்பதாகக் கருதிக்கொண்டு ஈடுபடவேண்டும். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போதே, எங்கெங்கே பயணம்? என்னென்ன பணிகள்? என்னென்ன பயன்கள்? என்கிற தீர்மானத்தோடு மேற்கொண்டால் நிச்சயம் அப்பணிகளில் வெற்றிமட்டுமே விளைச்சலாக இருக்கும். ஏனெனில் மனதார ஈடுபட்டுச் செயல்படுகிற ஒவ்வொரு நொடியும் இன்ப நொடிகள்தாம்.

  ஒரு நகரத்தில் ஒரு விளையாட்டு மைதானம். அங்கு சமவயதுள்ள மூன்று இளைஞர்கள் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ஒரு துறவி வந்து கொண்டிருந்தார். பல்லாண்டு காலம் துறவுவாழ்க்கை வாழ்ந்தவர் என்பதற்கு அடையாளமாக, நீண்டுவளர்ந்திருந்த தலைமுடிகள் சடைப் போட்டு ஜடாமகுடம்போலக் காட்சியளித்தது. மைதானத்தைக் கடக்கும்போது, அந்த மூன்று இளைஞர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு, சற்று ஓரமாக நின்று, அவர்கள் விளையாடுவதைக் கண்டு ரசித்தார். அந்த மூன்று இளைஞர்களையும் அருகே அழைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்றும் விரும்பினார்; அந்த மூன்று இளைஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்தார். துறவியைக்கண்ட இளைஞர்களுக்கு அவரது தோற்றம் வித்தியாசமாகப் பட்டது. "நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் விளையாடு வதைப் பார்க்க எனக்குப் பிடித்திருக்கிறது; உங்கள் பெயர்களைச் சொல்லுங்கள்!" என்று இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார். இளைஞர் களும் பணிவோடு தங்கள் பெயர்களைச் சொன்னார்கள்.

  முதலாவது இளைஞனைப் பார்த்து, "எதற்காக நீ விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டார். " விளையாட்டில் ஈடுபட்டு, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டால், உடல் பலம் பொருந்தியதாக மாறும். பிற்காலத்தில் யாருக்கும் அஞ்சாமல் பலசாலி ஆவதற்காக விளையாடுகிறேன்" என்றான் இளைஞன். "நல்லது. வருங்காலத்தில் நீ பெரிய பயில்வானாக ஆக எனது நல்லாசிகள்" என்று ஆசி வழங்கினார்.

  இரண்டாவது இளைஞனைப் பார்த்து, "நீ எதற்காக விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டார். "நாள் தோறும் இடைவிடாது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால், மனமும் உடலும் புத்துணர்வு அடையும். விளையாட்டு மைதானத்தில் பெற்ற புத்துணர்வோடு வீட்டுக்குச் சென்று படித்தால் கல்வி நன்றாக வரும்; அறிவு வளரும்; அதற்காக விளையாடுகிறேன்" என்றான் இரண்டாவது இளைஞன்." நீ எண்ணியவாறே வருங்காலத்தில் நீ பேரறிவாளனாக ஆக எனது ஆசீர்வாதங்கள்!" என்று வாழ்த்தினார் துறவி.

  மூன்றாவது இளைஞனிடம், "நீ எதற்காக விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டதும் அவன் வித்தியாசமான ஒரு பதிலை வழங்கினான்." நான் விளையாட வேண்டும் என்பதற்காக விளையாடுகிறேன்!". அந்த இளைஞனின் பதிலைக் கேட்டதும் படக்கென்று அவனது காலில் விழுந்து," இனிமேல் நீ தான் எனது குருநாதன்!" என்று சொல்லிவிட்டார் துறவி.

  வாழ்க்கையை அதற்காக வாழ்கிறேன் இதற்காக வாழ்கிறேன் என்று காரணம் தேடி வாழ வேண்டாம்!.

  வாழ்வதற்காக வாழுங்கள்!

  முழுமையாக ரசித்து லயித்து வாழுங்கள்!

  தொடர்புக்கு - 9443190098

  Next Story
  ×