என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சூரிய தோஷம்
    X

    சூரிய தோஷம்

    • சூரிய தோஷத்தால் சிலருக்கு பித்ருக்கள் சாபம் அதிகரித்து குழந்தை பாக்கியத்தில் கூட தாமதத்தை ஏற்படுத்தலாம்.
    • வாழ்க்கையின் முக்கிய நடவடிக்கைகளை முடக்கும் சக்தியாக சூரிய தோஷம் அமைந்துள்ளது.

    நவக்கிரகங்களில் முக்கியமானது சூரியன். அதை முதன்மையாக கொண்டே மற்ற கிரகங்கள் இயங்கி வருகின்றன. எனவே சூரியன் தொடர்பாக ஒருவரது ஜாகத்தில் தோஷம் ஏற்பட்டால் அந்த தோஷம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஜாதகப்படி லக்னத்தில் இருந்து 2, 7, 8 கட்டங்களில் சூரியன் இருந்தால் அவை சூரிய தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஒருவருக்கு சூரிய தோஷம் ஏற்பட்டால் 3 முக்கிய தடைகளை உருவாக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.

    அதாவது சூரிய தோஷம் உள்ள ஜாதகக்காரருக்கு முதலில் கல்வியில் தடை ஏற்படுமாம். உயர் கல்வி கற்பதில் எதிர்பாராத இடையூறுகள் வந்து தடுக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே கல்வியில் சிறப்பு பெற்றாலும் வேலை பெறுவதில் சூரிய தோஷம் தடை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

    ஒருவேளை கல்வியும் கிடைத்தும், நல்ல வேலையும் கிடைக்கும் பட்சத்தில் திருமணம் கைகூடுவதில் சூரிய தோஷம் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் எழுதி வைத்துள்ளனர். அது மட்டுமின்றி தொடர்ந்து நோய் ெதால்லைகளையும் இந்த தோஷம் ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இப்படி வாழ்க்கையின் முக்கிய நடவடிக்கைகளை முடக்கும் சக்தியாக சூரிய தோஷம் அமைந்துள்ளது. எனவே சூரிய தோஷம் இருந்தால் அவசியம் அதை நிவர்த்தி செய்ய ஈடுபட வேண்டும்.


    சூரிய தோஷத்தை மிக மிக எளிதாக நீக்குவதற்கு சித்தர்களும், முன்னோர்களும் பல்வேறு பரிகாரங்களை வழிகாட்டுவதாக கூறி உள்ளனர். அதில் முதன்மையானது ஆஞ்சநேயர் வழிபாடு. ஒருவர் எந்த அளவுக்கு அனுமனை ஆர்த்தமாக வழிப்படுகிறாரோ அவருக்கு சூரிய தோஷம் பாதிப்பு வரவே வராது என்கிறார்கள்.

    அடுத்ததாக பசு மாட்டுக்கு கோதுமை வகை உணவுகளை கொடுப்பதன் மூலம் சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ய கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு காரணம் கூறப்படுகிறது. சூரியனின் தாணியம் கோதுமை ஆகும். எனவேதான் கோதுமை கலைந்த உணவு பொருளை பசு மாட்டுக்கு கொடுப்பதன் மூலம் சூரிய தோஷத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

    இந்த பரிகாரங்கள் தவிர பாராயணம் மூலமாகவும் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும். சூரியனின் காயத்ரி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சரிப்பது மிகவும் கை கொடுக்கும். ஆதித்ய கிருதயம் படிக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் அனுமன் சாலீசா புத்தகம் வாங்கி தினமும் அதை படித்து வந்தால் நல்லது.

    சிலர் ஆலயங்களுக்கு சென்று பூஜைகள், பரிகாரங்களை செய்வதைதான் அதிகம் விரும்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கை உடையவர்கள் சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ய கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    சூரியனார் கோவிலில் நவக்கிரகங்களும் சுற்றி அமைந்துள்ளன. அங்கு வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் மிக எளிதாக விலகும் என்பது ஐதீகம்.

    சென்னைக்கு அருகில் ஞாயிறு என்ற சூரிய தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் புஷ்ப ரதேஸ்வரர் மூலவராக உள்ளார். சென்னை செங்குன்றம் அருகே இருக்கும் இந்த ஆலயத்தில் சிவபெருமானை வழிபட்டு சூரியன் தனது பாவங்கள், தோஷங்களை நீக்கிக் கொண்டதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.


    இதன் காரணமாக இந்த ஆலயம் சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்கும் அருமையான ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சூரியன் வழிபட்டால் அங்குள்ள தீர்த்தம் சூரியபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் சூரிய பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இத்தகைய அமைப்பை பார்ப்பது மிகவும் அபூர்வமாக ஆகும். அந்த சன்னதியில் பூஜை செய்து வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும்.

    அன்று பூஜைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு வழிமுறை உள்ளது. அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு பூஜை செய்வதன் மூலம் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார்கள். அதாவது அலங்கரிக்கப்பட்ட கலசத்துக்குப் பூஜை செய்து, பக்தர்கள் கையில் மலர்களுடன் சங்கல்பம் செய்கிறார்கள். களத்திர தோஷம் நீங்கவும், வேலை வாய்ப்பு அமையும், ஆரோக்கியம் பெருகும் என வெவ்வேறு பிரார்த்தனைகளுடன் நடக்கிறது சங்கல்பம்.

    தாங்கள் வைத்துள்ள புஷ்பங்களை கலசத்தின் மேல் சமர்ப்பித்து வணங்குகிறார்கள். தொழுநோய் போன்றவை குணமாகச் சூரியனை வழிபடுவது சிறந்தது. தாமிர பாத்திரத்தில் கோதுமையை வைத்து அதில் சூரியனைப் பிரதிஷ்டை செய்து அல்லது சூரியனை வழிபட்டுத் தானமாக வழங்கினால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    6 வாரம் அல்லது 11 வாரம் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஞாயிறு திருத்தலத்துக்கு வர வேண்டும். இங்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும். அந்த நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

    கோதுமை வைத்த தாமிர பாத்திரம், சிவப்பு வஸ்திரம், தாமரை பூ ஆகியவற்றைச் சூரியன் சன்னதியில் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். தங்கள் வயதிற்கு ஏற்ப தீபம் ஏற்ற வேண்டும். 6 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி 6 வாரம் அல்லது 11 வாரம் அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    தினமும் சூரிய கவசம் படிப்பதும் நல்ல பலனை தரும். வாரத்துக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அதை சூரியனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் சூரிய தோஷத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து குளித்து விட்டு வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சூரியனின் நல்ல பலன்களை அதிகம் பெற முடியும். சூரியன் உதிக்கும் சமயத்தில் வீட்டு வாசலில் நின்ற படியே கிழக்கு திசை நோக்கி வணங்குவது சிறப்பானதா கும். அந்த சமயத்தில் சூரிய பகவானிடம் அனைத்து பிரச்சினைகளையும் சொல்லி அவற்றை தீர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

    வீட்டு வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியன் ரதம் வரைந்து வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்குவதோடு செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும். மனதில் அமைதி உண்டாகும். சிலருக்கு சூரிய தோஷத்தால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சினை ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.

    சூரிய தோஷத்தால் திருமண தடை, உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டு கோதுமை தவிட்டை பசு மாட்டுக்கு கொடுக்க வேண்டும். சூரியனின் அருள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் கழுத்து செயினில் ஆஞ்சநேயர் படம் பொறித்த டாலரை சேர்த்தக் கொள்வது நல்லது.

    சூரிய தோஷம் மிக மிக கடுமையாக இருப்பதாக ஜோதிடர் கூறினால் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு 5 அகல்விளக்கு தீபம் ஏற்றி அவசியம் வழிபட வேண்டும்.


    ஜோதிடர்கள் சாத்திரபடி சூரியன் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது தந்தை வழி உறவுகள் அனைத்தையும் நிர்ணயிப்பவராக உள்ளார். எனவே சூரியன் ஒருவரது ஜாதகத்தில் சரியாக அமையா விட்டால் தந்தை வழி உறவுகளில் கடும் பாதிப்பு ஏற்படும்.

    குறிப்பாக பூர்வீக சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சகோதரர்களுக்கு இடையே சமரசம் ஏற்படவே ஏற்படாது. பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய தோஷம் இருப்பவர்கள் அவசியம் சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டே தீரவேண்டும்.

    ஜாதகத்தில் சூரியன் 2-ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பார்கள். 7-ம் இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷமாக மாறும் என்பார்கள். 8-வது இடத்தில் இருந்தால் குடும்ப வாழ்க்கை அமைவதில் இழுபறி இருந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.

    இதையெல்லாம் தெரிந்து கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். சூரிய தோஷத்தால் சிலருக்கு பித்ருக்கள் சாபம் அதிகரித்து குழந்தை பாக்கியத்தில் கூட தாமதத்தை ஏற்படுத்தலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சூரியன் போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும்.

    அரசமரம் இருந்தால் தினமும் அதற்கு நீர் ஊற்றி வருவதும் சூரிய தோஷத்தை கட்டுப்படுத்த கை கொடுப்பதாக இருக்கும்.

    Next Story
    ×