search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  வீட்டுக்கு வீடு வாசற்படி...
  X

  வீட்டுக்கு வீடு வாசற்படி...

  • அடப்பாவி மனசாட்சி, நீதான் படிக்காம உருப்படாம போயிருக்கே?
  • ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பிரச்சனையோ, கவலையோ ஒளிந்து கொண்டு இருக்கிறது,

  ஆரம்பிச்சிட்டியா வாசப்படி நிலப்படின்னு... இப்பவே எல்லாருக்கும் எக்ஸாம் பீவர் லேசா ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஒருபக்கம் தொடர்ச்சியா நம்ம பேவரிட் ஹீரோஸ் நடிச்ச படங்கள், படு பயங்கரமான ஆப்கள், கேம்ஸ் கவரேஜ், இன்ஸ்ட்டா, பேஸ்புக், டுவிட்டர் சொல்லவே கண்ணைக் கட்டுது. இதெல்லாம் இல்லாம எப்படிடா படிக்கிறதுன்னு அவனவன் நொந்து போய் கிடக்கிறான். அப்படியே போனைத் தொடக்கூடாது அப்பத்தான் படிப்பென்னு ஒரு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கிட்டாலும், படிப்புக்குன்னு குரூப் கிரியேட் பண்ணி பிடிஎப் அனுப்பறாங்க.

  அவன் அப்படி, இவன் இப்படின்னு கம்பேரிசன் வேற.. இதுலே நீயும் அட்வைஸ்னு படி படின்னா எங்களுக்கு எரிச்சலா வருமா? வராதா? மாணவர்கள் சாபத்தைக் கொட்டிக்காதே?

  அடப்பாவி மனசாட்சி, நீதான் படிக்காம உருப்படாம போயிருக்கே?

  ஆமா எனக்குத்தான் தலைவாரி, பவுடர் போட்டு முதுகில புக்கை மாட்டி படிக்க அனுப்பினாங்க. தேமேன்னு நீ போற இடத்துக்கு எல்லாம் கூட்டிப்போறே, நானும் வர்றேன். என்னைக் கொஞ்சம் ப்ரியா விடு நான் போய்...

  ஒண்ணும் வேண்டாம். படிப்பைப் பத்தி பேசலை, நான் சொல்ல வந்த அர்த்தமே வேற?

  என்னமோ புதுசா சொல்றே? ஒவ்வொரு வாரமும் இப்படித்தானே ஆரம்பிக்கிறோம். .

  என்ன இருந்தாலும், மனசாட்சி ஆச்சேன்னு கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா போவியே?

  வீட்டுக்கு வீடு வாசப்படி, ஏன்பா நல்லா யோசி, வீட்டுக்கு வாசப்படி சுவரா இருக்கும். எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம் பழமொழி கிடைக்குது. வாசப்படியைப் பத்தி என்ன சொல்லவர்றே? அழகுக்காக தொங்கவிடறேன் பேர்வழின்னு கலர்கலரா 100ரூபாய்க்கு மூணு கலர்லே பூச்சரம் மாதிரி தேமேன்னு கிடக்குமே அதுதானே. வாங்கினப்போ இருந்த கலர் இதுதானான்னு சந்தேகப்படறாமாதிரி தொங்குமே அதுவா... நான் முறைப்பதை கண்டதும்...கண்டுபிடிச்சிட்டேன். இப்போ கரெட்டா சொல்றேன் பாரு நீ சொல்றது செருப்பைத்தானே.

  கடவுளே உன்கிட்டே விவாதம் பண்றதுக்கு அதாலதான் அடிச்சிக்கணும். இன்னும் வாசப்படி விளக்கு, குங்குமம் பூசிய எலுமிச்சைப் பழம், கால்மிதின்னு ஆரம்பிக்கிறதுக்குள்ளே நானே சொல்லிடறேன்.

  செருப்பு ஸ்டாண்டை விட்டுட்டியே... மனதிற்குள் முணுமுணுத்தது மனசாட்சி.

  நான் சிரித்தபடியே, ஆரம்பித்தேன்..

  வீட்டுக்கு வீடு வாசற்படி விஷயங்கள் ஆசைப்படி என்று எஸ்.பி.பி பாடிய பாடல் ஒன்று. வேலை வேலை என்று ஓடும் கணவன், அவனுக்காக ஏங்கிய மனைவி அவர்களின் இருவரின் மனப்பிரிவு அதை சேர்க்க வரும் ஜோடி என்று கதை விரியும். புழக்கத்தில், பலநேரம் உறவுகளுக்குள் நிகழும் பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தும் வார்த்தை இது.

  மன்மத லீலைன்னு கமல் படம் ஒன்று, பெண்களிடம் சபலப்படும் கணவனாக கமல், மனைவி ஆலம் இதைக் கண்டித்து கோபத்துடன் அம்மா வீட்டுக்கு சென்று விடுவாள். அங்கே அம்மா அவளுக்கு அறிவுரை சொல்லி கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.


  அந்த அம்மா தன் மகளிடம் அவளின் தந்தை அந்த வீட்டு வேலைக்காரியிடம் உறவில் இருக்கிறார். இருவரின் அன்பும், உறவும் எனக்குத் தெரியும், இருந்தாலும் நான் அதை தெரிந்ததாக காட்டிக் கொண்டது இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதே, வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்லி அனுப்பி வைப்பார்.

  அநேகம் கட்டுப்பாடுகளும், கற்பு நிலைகளும் பெண்களுக்கு மட்டும்தான் என்று புறம் தள்ளியிருந்த நேரம் அது, ஒரு கட்டத்திற்குள் அடைத்து அதில் அடைப்புக்குறிக்குள் வாழ வேண்டும் என்ற நிர்பந்தங்களில் எதையும் சகித்துக் கொண்டு போகும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். தான் உழல்வதைப் போல தன் மகளும் அதே சாக்கடையில்தான் உழலவேண்டும். அப்போதுதான் அவளின் ஒழுக்கத்திற்கான அடையாளச் சான்று தரப்படும்ன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க. அதையே அந்த பொண்ணோட மனசிலும் விதைக்கிறாங்க.

  அந்நாளின் நிலைமை மாறி வருகிறது நண்பா. நான் இப்போ ஒரு படம் பார்த்தேன். நம்ம பொன்னியின் செல்வன் படத்திலே பூங்குழலியா ஆக்ட்டு கொடுத்துச்சே ஒரு பொண்ணு, அந்தப் பொண்ணு நடிச்ச ஒரு மலையாளப் படம். அதில் இப்படித்தான்.. தனிக்குடித்தனம் பண்ற பொண்ணைப் பார்க்கவர்ற இடத்திலே அம்மாவுக்கு முன்னாடியே கை நீட்டி அடிச்சிடுவாரு மாப்பிள்ளை. பொண்ணும் அம்மாவும் படித்துறையிலே உட்கார்ந்து பொங்கி பொங்கி அழுவாங்க. இத்தனை கஷ்டத்தையும் தாங்கிட்டு நான் இங்கே வாழணுமான்னு பொண்ணு கேட்கும்.

  பளிச்சினு, தேவையேஇல்லை. உனக்கு என்ன முடிவு எடுக்கணுமோ அதை செய். நீ பொருள் இல்லை. மனுஷி உனக்கும் உணர்வுகள் இருக்குன்னு புரியவைன்னு தைரியம் கொடுப்பாங்களே. அதுக்குக் காரணம் பெண்களின் பொருளாதாரம் முன்னேறி இருக்கிறதுதான்.

  ஒருமுறை புத்தரிடம் ஒரு பெண், என் வீட்டில் ஒரே மகன். இறந்து விட்டான். நீங்கள்தான் அவனை உயிர்ப்பித்து தரவேண்டும் என்று மன்றாடினாள். வெறும் வாய் வார்த்தைகள் அவளிடம் எடுபடாது என்று நினைத்த புத்தர், இந்த ஊரில் இறப்பில்லாத வீட்டில் இருந்து ஒரு கை கடுகு வாங்கிக் கொண்டு வா என்றார். அவளும் அலைந்து திரிந்து அய்யனே இறப்பில்லாத வீடே இங்கே இல்லை. எல்லா வீடுகளிலும் ஏதோவொரு ஆன்மா வெளியே சென்றிருக்கிறது என்று பதில் சொல்வாள். உன் கேள்வியே பதிலாகும் என்று முடித்திருப்பார் புத்தர்.

  ஐம்பது வயது கடந்த தொழிலதிபர். மனைவியோ தீவிர கடவுள் பக்தை. அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. ஒரு துறவியிடம் இதை கவலையோடு பகிர்கிறார். துறவியோ உங்களுக்கு ஆரோக்கியமும், தொழிலும் நல்ல படியாக இருக்கிறதா? என்று கேட்கிறார்.

  அதற்கென்ன கடவுள் புண்ணியத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் இல்லையே என்று மீண்டும் கேட்க, குறையுள்ளவன்தான் மனிதன். இருப்பதைக் கொண்டு மனநிறைவோடு வாழக் கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு செல்வார் துறவி.

  அண்ணனும் தம்பியும் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்கள். திடுமென்று பார்த்தால் அவர்கள் வீட்டுக்கு நடுவில் சுவர், கடைக்கு நடுவில் தடுப்பு என்று பிரிவினை தாண்டவமாடியது. சிலர் அக்கறையாய் மத்திசம் பண்ண போனார்கள். சிலரோ வீட்டுக்கு வீடு நடப்பதுதானே என்று கடந்தார்கள்.

  மேற்கண்ட மூன்று உதாரணங்களுக்கும் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழி பொருந்தும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பிரச்சனையோ, கவலையோ ஒளிந்து கொண்டு இருக்கிறது அதிலிருந்து மீண்டு வரும் ஒரு தன்னம்பிக்கை சொற்றொடராகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

  ஆனால், பழமொழியின் உண்மையான விளக்கம்.. மேன்மையான நேர்மையான எண்ணங்களும் அதை செயல்படுத்தும் வாழ்க்கை முறையைக் குறிக்கும். வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மீகம் என்பதே வாசற்படி இதுதான் சரியான பொருளாகும்.

  எவனொருவன் இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழ்ந்து, நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மனதில் இருத்தி தன்னைப் போல பிறரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறானோ, உண்மையும், நேர்மையும், ஈகைத்திறனும், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் அஞ்சி பிறவிப் பெருங்கடலை கடக்கிறானோ அவனின் வீடு சொர்க்கத்தின் வாசற்படி என்பதை குறிக்கும் பழமொழி.

  அடுத்தவாரம் மீண்டும் ஒரு பழமொழியோடு சந்திப்போம்.

  Next Story
  ×