என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பயம் போக்கும் திருபுவனம் கம்பகரேஸ்வரர்
- கம்பகரேஸ்வரர் எப்படியெல்லாம் பயம் போக்கி இருக்கிறார் என்பதற்கு புராண குறிப்புகள் பல உள்ளன.
- கம்பகரேஸ்வரரை மனமுருக வழிபட்டால் தேவையற்ற பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அந்த வழித்தடத்தில் இறங்கியதும் சில மீட்டர் தொலைவுக்குள் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம்.
அங்கு மூலவராக கம்பகரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர் தர்மசம்பர்த்தினி. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலத்தில் உள்ள சரபதீர்த்தம் மிக சிறந்த புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.
கும்பகோணம் பகுதியில் உள்ள ஆலயங்களில் பயத்தை நீக்கி மனதில் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
கம்பகரேஸ்வரர் எப்படியெல்லாம் பயம் போக்கி இருக்கிறார் என்பதற்கு புராண குறிப்புகள் பல உள்ளன. அதில் முக்கியமான ஒன்று....
பாண்டிய மன்னர்களில் புகழ் பெற்றவன் வரகுண பாண்டியன். ஆட்சியிலும், ஆன்மீகத்திலும் புகழ் பெற்ற இவன் தமிழகம் முழுக்க ஏராளமான ஆலயங்களில் திருப்பணிகள் செய்து தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்து இருக்கிறான். ஒரு தடவை இவன் தென் தமிழ்நாட்டில் இருந்து வட தமிழ் நாட்டுக்கு படையெடுத்து வந்தான்.
அவனது குதிரை படைகள் பாய்ந்து சென்றன. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு இடத்தில் குதிரை படைக்கு மத்தியில் பிராமணர் ஒருவர் சிக்கிக் கொண்டார். குதிரைகளின் காலடியில் சிக்கி அவர் உயிரிழந்தார். இத னால் அவரை கொன்ற பாவம் பிரம்மகத்தி தோஷமாக வரகுண பாண்டியனை பிடித்தது.
இந்த தோஷத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று வரகுண பாண்டியன் ஆலோசித்தார். அப்போது கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தலத்துக்கு சென்று வழிபட்டால் பிரம்மகத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வரகுண பாண்டியன் திருவிடை மருதூர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு தோஷ நிவார்த்தி பெற்றார்.
என்றாலும் வரகுண பாண்டியனுக்கு மனதுக்குள் பிரம்மகத்தி தோஷம் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பயத்தை எப்படி போக்குவது என்று ஆலோசித்தார். அப்போது திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வ ரர் ஆலயம் பற்றி வரகுண பாண்டியனுக்கு தெரிய வந்தது. கம்பகரேஸ்வரரை மனமுருக வழிபட்டால் தேவையற்ற பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் வரகுண பாண்டியனிடம் கூறப்பட்டது.
அச்சுக்கிரீவன், விடபக்கிரீவன், வியாள கிரீவன் என்ற 3 அரசர்களை சிவபெருமான் தனது சிரிப்பால் அழித்து தேவர்களின் வாழ்வில் பயம் போக்கினார். அதுபோல அசுர மன்னன் இரண்யகசிபுவை அழித்த நரசிம்மர் உக்கிரம் மாறாமல் இருந்ததால் அவரை சாந்தப்படுத்த சிவபெருமான் சரபேஸ்வரராக மாறி நரசிம்மரை சாந்தப்படுத்தி தேவர்களின் பயத்தை போக்கினார். இப்படி பயம் போக்கிய சிவபெருமான் திருபுவனம் தலத்தில் கம்பகரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.
தூய தமிழில் அவரை நடுக்கம் தீர்த்த நாதர் என்றும் அழைக்கிறார்கள். இதை அறிந்த வரகுண பாண்டிய மன்னன் அந்த தலத்துக்கு சென்று வழிபட்டு தனது பயத்தை போக்கிக் கொண்டான். இதனால்தான் இன்றளவும் மக்களின் பயம் போக்கும் வகையில் இந்த ஆலயத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு அஷ்டமி மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகிறது. தினமும் சரப ஹோமமும் நடத்துகிறார்கள்.
தீபாவளி, பொங்கல் நாட்களின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். பங்குனி மாதம் 18 நாட்கள் பிரமோற்சவம் நடத்தப்படுகிறது. பிரமோற்சவத்தின் 7-ம் நாள் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. 9-ம் நாள் தேர் வீதிஉலா நடைறும். 10-வது நாள் காவிரி நதியில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவார்கள்.
இந்த ஆலயம் மன அமைதி தரும் மிக சிறப்பான ஆலயம் ஆகும். 3-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை சுற்றி வந்தால் சிற்ப கலைகள் நிறைந்த பகுதிகளை பார்க்க முடியும்.
கருவறை பகுதி சற்று உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மற்ற பகுதிகளும் மாறுபட்ட அமைப்பில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்று பல்வேறு சிறப்புகளுடன் இந்த ஆலயம் பிரமாண்டமாக உள்ளது.
கருவறையில் ஈசன் கிழக்கு நோக்கி இருக்கிறார். இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. அம்பாளுக்கு அறம்வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கைகளில் அச்சர மாலை, தாமரைப்பூ வைத்து காட்சி யளிக்கிறாள். சக்தி தலங்க ளில் இந்த அம்பாள் பீடம் ஒட்டி யாண பீடம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் லிங்கோத்பவர், பிச்சாடனர் ஆகிய இரு சிலைகளும் கண்டுகளிக்கும் வகையில் உள்ளது. மேலும் ராமாயணம் மற்றும் மகாபாரத வரலாற்று காட்சிகளை பிரதிபலிக்கும் சிற்பங்களும் ஆலயம் முழுக்க ஆங்காங்கே காணப்படுகிறது. சோழர்கால கட்டிட கலை யையும், சிற்ப கலையையும் இந்த ஆலயத்தில் அதிகமாக பார்க்க முடியும்.
இந்த தலத்தில் தனி சன்னதியில் சரபேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 7 அடி உயரத்தில் சர பேஸ்வரர் பிரமாண்ட மாக வடிவமைக் கப்பட்டுள்ளார். அவ ரது கருவறை முகத்தில் 2 அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைக்கப்பட்டுள்ளனர். அந்த துவாரகிகள் சிலைகள் அற்புதமானவை. மிகவும் கலை நயம் கொண்டவை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. சிவன், விஷ்ணு, துர்க்கை மற்றும் சூலினி சக்திகளின் வடிவமாக இந்த துவாரகிகள் சர பேஸ்வரருக்கு காவ லர்களாக இருக்கி றார்கள்.
இவரை வழிபட்டால் நோய்கள், எதிரிகள் தொல்லை, பில்லி சூனியம், தோஷங்கள், வழக்கு விவகாரங்கள் போன்றவை எளிதாக நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் ஆயுள் விருத்தி, சிறப்பான வாழ்க்கை, பதவி உயர்வு, குழந்தை பேறு ஆகியவை கிடைக்கும். தொடர்ந்து 11 வாரங்கள் இவரை அர்ச்சனை செய்து வழி பட்டால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். சந்தன காப்பு அலங்காரம் செய்தும் பக்தர்கள் வழிபடலாம். இவருக்கு உகந்த செவ்வரளிப்பூ, வில்வம், மரிக்கொழுந்து ஆகியவற்றை சமர்ப்பித்து நைவேத்தியம் படைத்து வழிபடுவது நல்லது.
பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வினியோகிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகால நேரத்தில் சரபேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பது மேலும் சிறப்பானது. கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் இதற்கேற்ப பயண திட்டத்தை வகுத்து கொண்டால் சரபேஸ்வரரை கண்குளிர தரிசித்து வழிபட்டு பயன்பெற முடியும்.
இங்குள்ள சரபேஸ்வரர் 6 கால்கள், 4 கைகளுடன் அமைந்துள்ளார். அவரது கால்கள் பீடத்தை பற்றிக்கொண்டுள்ளது. 2 கைகளும் நரசிம்மரை பிடித்து இருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சரபேஸ்வரர் தலங்களில் இந்த தலத்து சரபேஸ்வரர்தான் வித்தியாசமான புகழ் பெற்ற சரபேஸ்வரராக திகழ்கிறார்.
இந்த ஆலயத்தில் 6 கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் திருப்பணிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. மிக பொறுமையாக இந்த ஆலயத்தை சுற்றி வந்தால் இவற்றையெல்லாம் பார்க்க முடியும். இன்னும் பல சிறப்புகள் உள்ளன. ஆலய நிர்வாகிகளிடம் கேட்டால் தெரிவிப்பார்கள்.
கும்பகோணத்தில் இருந்து மிக மிக எளிதாக இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி இருக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் ஆலயத்தின் அருகேயே நிறுத்துவதற்கு வசதி இருக்கிறது. ஆலயத்துக்கு அருகில் விராலிமலை சித்தர் ஆலயமும் இருக்கிறது. கம்பகரேஸ்வரரை வழிபட்ட பிறகு அப்படியே சித்தரையும் வழிபட்டு வரலாம்.
பயத்தில் எம பயம் மிகவும் கொடுமையானது. இந்த எம பயத்தை போக்கும் தலமாக ஸ்ரீ வாஞ்சி யம் திகழ்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.






