search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாஸ்து தோஷத்தை எளிதாக நீக்கலாம்
    X

    வாஸ்து தோஷத்தை எளிதாக நீக்கலாம்

    • ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது.
    • கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள்.

    வீடு கட்டுவது என்பது எல்லோராலும் இயலாது. வீடு கட்டும் அனைவரும் வாஸ்து பார்ப்பது இல்லை. ஆனால் வாஸ்து பார்க்க வேண்டியது அவசியம்தான். ஏனெனில் ஒரு வீட்டுக்கு உயிரோட்டமாக இருப்பது வாஸ்துவின் அம்சங்கள்தான்.

    வாஸ்து என்பது நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சரிசமமான சேர்க்கையை குறிப்பதாகும். இந்த ஐந்தும் சரியான விகிதத்தில் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்துவும் சரியாக இருக்கும். பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அதிகமாகி ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ அதுதான் வாஸ்து குறைபாடுகளாக பிரதி பலிக்கும்.

    இதில் அறிவியல் ரீதியான தொடர்பும் இருக்கிறது. அதாவது ஒரு வீடு கட்டும்போது அந்த இடத்தில் மின்காந்த அலைகளின் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ஓட்டம் சரியாக இருந்தால் நல்ல அதிர்வலைகளை வீடு கட்டும் போதே உணர முடியும். கட்டுமானப் பணிகள் நடக்கும் போதே உள்ளே செல்லும்போது மன நிலைகள் அதற்கேற்ப அமையும். இப்படி இருந்தால் வாஸ்து குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

    புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் காந்த அலைகளின் ஓட்டத்தை நாமே கூட உருவாக்க முடியும். வீடு கட்டும் இடத்தில் வடகிழக்கு மூலை தாழ்ந்தும், தென்மேற்கு மூலை மேடாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் வாஸ்துவுக்கான மின் காந்த ஓட்டம் சீராக அமையும். இதையும் மீறி வாஸ்து குறை பாடு இருப்பதாக இருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.



    இத்தகைய குறைகள் வராமல் இருக்க வேண்டுமானால் வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாளில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பொதுவாக ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய 8 மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய லாம். இந்த 8 நாட்களிலும் வாஸ்து பகவான் 1½ மணி நேரம்தான் கண்விழித்து இருப்பார். அந்த நேரத்துக்குள் பூமி பூஜை செய்து விட வேண்டும்.

    வாஸ்து பூஜை செய்வதற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும் மிக மிக சிறப்பானவை. வாஸ்து பூஜை நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னம் அமைந்தால் மேலும் சிறப்பானதாக கருதப்படும். அதுபோல ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் உண்டு. அவற்றையும் கருத்தில் கொண்டுதான் பூமி பூஜைகளை செய்ய வேண்டும்.

    மேலும் வீடு கட்டும்போது அறைகளின் அமைப்பு, அவற்றின் அளவு, உயரம் ஆகியவையும் வாஸ்துவை நிர்ணயிக்கும். வீட்டை சுற்றி இருக்கும் காலி இடங்கள் கூட வாஸ்து பலன்களில் பார்க்கப்படும். அதாவது ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது. மேற்கு பகுதியில் காலி இடம் அமைந்தால் அது ஆண்களுக்கு உகந்த தாக இருக்காது.

    இப்படி வாஸ்து குறைபாடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சமீப காலமாக இதில் பல புதிய தகவல்களை இணைத்து புதிதாக வீடு கட்டுபவர்களை ஜோதிடர்கள் கடுமையாக குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வீடு கட்டும் ஒருவர் யாராவது ஒரு ஜோதிடரிடம் வாஸ்து தொடர்பாக கருத்துக்கள் கேட்டுவிட்டால் நிம்மதி இல்லாத நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைதான் தற்போது காணப்படுகிறது.

    எனவே வீடு கட்டும்போது தொட்டதற்கு எல்லாம் வாஸ்து பார்க்கக் கூடாது. பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். பல வீடுகள் ஜோதிடர்களின் வாஸ்து கணிப்புகளால் மீண்டும் மீண்டும் இடித்து கட்டப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே வாஸ்துகளை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பது நல்லது.

    வசித்து கொண்டிருக்கும் வீட்டில் வாஸ்து பார்க்கும் நடைமுறை சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ஏதாவது குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை, வியாபார பிரச்சினை, திருமண தாமதம், கணவன்-மனைவி தகராறு என்று வந்து விட்டால் உடனே ஜோதிடர்கள் வாஸ்து குறைபாடுதான் காரணமாக இருக்கும் என்று கண்மூடிக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.

    கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள். இவ்வளவு நாள் நன்றாக நடந்த கடை இப்போது ஏன் நிலைதடுமாறுகிறது என்பதை வியாபாரிகள் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தாலே குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கும் வாஸ்துக்கும் நிச்சயம் எந்த தொடர்பும் இல்லை.

    சில வீடுகளில் வாஸ்து குறைபாடு காரணமாக நீண்ட நாள் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்கதை போல இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய வீடுகளில் பரிகாரங்கள் செய்வது நல்லது. குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தாலே வாஸ்துகள் சரியாகி விடும். வாஸ்துவை சரி செய்வதற்காக பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

    சில ஜோதிடர்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒன்று வீட்டை இடிக்க வைப்பார்கள் அல்லது நிறைய பூஜை செய்ய சொல்வார்கள். இவை யெல்லாம் கண்டிப்பாக அவசியமே இல்லை. மிக மிக சாதாரண எளிய பூஜைகள் மூலம் வாஸ்து குறைபாடுகளை சரி செய்து விட முடியும். வாஸ்துதான் பிரச்சினையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் வீட்டு வாசலில் நிலைப்படிக்கு அருகே தீபம் ஏற்றி வந்தாலே போதும். குடும்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதை பார்க்க முடியும்.

    பொதுவாக வீடுகளில் காலை-மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வாஸ்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாஸ்து தீபம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு ஏற்றினால் கைமேல் பலன் கிடைக்கும். வாஸ்து தீபங்களை எப்போதும் வீட்டின் வாசலில் வலது பக்கத்தில் ஏற்றுவது நல்லது. முடிந்தால் காலை-மாலை இருவேளையும் ஏற்றலாம்.

    வாஸ்து தீபம் ஏற்றும்போது, "ஓம் வாஸ்து தேவதாய நமக.... ஓம் வாஸ்து புருஷாய நமக..." என்ற வாஸ்து மந்திரத்தை 3 தடவை சொல்ல வேண்டும். இது மிக மிக எளிதான உடனடியாக வாஸ்து குறைபாட்டை விரட்டும் பரிகாரம் ஆகும். அது மட்டுமின்றி வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த தீபத்துக்கு உண்டு.

    வாஸ்து தீப பூஜைகளை செய்ய இயலாதவர்கள் வீட்டு வாசலில் உட்புறத்தில் கோலம் போட்டு அதில் அகல் தீபம் ஏற்றலாம். அந்த அகல் தீபம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் அமைப்பது நல்லது.

    சிலருக்கு தோஷங்கள் காரணமாக வாஸ்து பிரச்சினை ஏற்படலாம். அத்தகைய நிலை இருப்பது தெரிய வந்தால் வீட்டின் 4 மூலைகளிலும் தலா ஒரு விளக்கு ஏற்றி பைரவர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால் பிரச்சினைகள் தீரும். இந்த தீபம் ஏற்றும்போது பைரவர் கவசம் அல்லது பைரவருக்கு உரிய போற்றிகளை சொல்லிக் கொண்டே தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.

    பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானை நினைத்து வாஸ்து நாட்களில் 5 திரி போட்டு 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் வாஸ்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இந்த 5 அகல் விளக்கு பூஜை என்பது வாஸ்து பகவானை திருப்தி செய்யும் வழிபாடு ஆகும். வீட்டில் தன்வந்திரி படம் வைத்து பூஜைகள் செய்வதும் நல்ல வாஸ்து பரிகாரம் ஆகும்.

    சிலருக்கு ேஹாமங்கள் வளர்த்து பூஜை செய்தால் வாஸ்து பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது உண்டு. அப்படிப்பட்டவர்கள் நவ கலசங்கள், நவ தானியங்கள், நவ சமித்துகள், நவ மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை விரட்டி வெற்றிகளை தேடி தரும் ஆற்றல் கொண்டது.

    அடிக்கடி ஹோமம் செய்ய இயலாது என்று நினைத்தால் ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டில் கணபதி ஹோமம் நடத்துங்கள் போதும். வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்கு துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சரியாகி விடும்.

    இத்தகைய பூஜைகள் எதையும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம். வீட்டில் குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் போது ஊதுபத்தி காட்டி மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள் போதும். வாஸ்து பிரச்சினைகளை குல தெய்வம் பார்த்துக் கொள்ளும். முடிந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்க செய்யுங்கள். நல்ல அதிர்வுகள் உண்டாகும்.


    தினமும் அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பிரணவ மந்திரம், கந்தசஷ்டி கவசம், சிவ புராணம் மற்றும் காயத்ரி மந்திரம் போன்றவற்றை ஒலிக்க செய்தால் நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் விரட்டி அடிக்க செய்து விடும்.

    சில பெண்களுக்கு காலையில் சமையல் செய்வதற்கு முன்பு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இருக்கும். அதே போன்று மாலை நேரத்தில் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கு அருகே விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அதுவும் புதுமையான பலன்களை தரும். அதாவது இந்த தீப வழிபாடு வீட்டில் யாருக்கு எந்த தோஷம் இருந்தாலும் நிவர்த்தி செய்து விடும்.

    வைணவத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர்கள் பெருமாளின் அணுகிரகம் பெற சங்கு பயன் படுத்துவார்கள். அத்தகைய சங்கை வீட்டின் நிலைவாசலுக்கு அடுத்து வெளியே புதைத்து வைத்தால் வாஸ்து தோஷங்கள் விலகும். வாஸ்துவை வாசலின் முன்பு புதைக்கும்போது சங்கின் நுனி பகுதி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்த்தவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக ளில் இருப்பவர்கள் பூஜை அறையில் சங்கு வைத்து வழிபட்டால் இறைவன் அருளை பெற முடியும். அது தோஷங்களை விலக்குவதோடு புது தோஷங்கள் நம் அருகில் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

    எனவே வீட்டில் வாஸ்து குறைபாடு வராமல் இருக்க புது வீடு கட்டும் போதே கவனமாக இருங்கள். இல்லையெனில் எளிய பரிகாரங்கள் செய்யுங்கள். போதுமானது.

    Next Story
    ×