search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: கன்னடத்தில் குறும்பு
    X

    மலரும் நினைவுகள் மீனா: கன்னடத்தில் குறும்பு

    • நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டார்கள்.
    • பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.

    குறும்புத்தனம்...

    என்னுடன் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி ஆன பிறகும் என்னிடம் குறும்புத் தனம் இருக்கத்தான் செய்தது.

    கன்னடத்தில் எனது முதல் படம் 'புட்ட நஞ்சா' ஹீரோ ரவிச்சந்திரன். கன்னடத்தில் அவர் பெரிய ஸ்டார்.

    எனவே அழைப்பு வந்ததும் ஒப்புக் கொள்ள ஆசை தான். ஆனால் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிசியாக இருந்ததால் கால்ஷுட் கொடுப்பத்தில் சிக்கல் இருந்தது.

    ஆனாலும் அவர்கள் விடவில்லை. நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டார்கள். எனவே நானும் ஒத்துக்கொண்டேன்.

    அந்த காலத்தில் சிவாஜி சாரும், ஜெயலலிதாம்மாவும் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் தழுவல்தான் அந்த படம்.

    ஹீரோவாக வரும் ரவிச்சந்திரன் கிராமத்து இளைஞன். நான் பட்டணத்தில் வளர்ந்த பெண். காதல், மோதல் என்று காட்சிகள் விறு விறுப்பாக இருந்தது.

    பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும். ஹீரோயின்களை கிளாமராக காட்டுவார். முக்கியத்துவமும் இருக்கும்.

    அதைப்போலவே இந்த படமும் ஹிட்டாச்சு. பாடல்களும் சூப்பர் ஹிட்டாச்சு. கன்னடத்தில் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் கன்னட பட உலகிலும் புகழ் பெற தொடங்கினேன்.

    முதல் நாள் பட பூஜை பெங்களூரில் நடந்தது. பூஜை முடிந்ததும் ஷுட்டிங்கையும் தொடங்கிவிட்டார்கள். பெங்களூர் எனக்கு பிடித்தமான நகரம். பகலில் வெயில் அடிக்கும். ஆனாலும் ஜில்லென்று இருக்கும். நகரை சுற்றி வந்தாலும் தூசு நம்மை சுற்றாது. அப்படி ஒரு அழகான ஊர் பெங்களூர்.

    அங்கு என்னென்ன பொருட்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் சாம்பார் வடை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

    அது எப்படி கண்டு பிடித்தீர்கள் என்கிறீர்களா?

    அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சார் சிங்கப்பூரில் எந்தெந்த கடைகளில் என்ன உணவுகள் பிரபலம் என்று சொல்லி தந்ததை ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

    அதேபோல் பெங்களூரில் எந்த கடையில் என்ன பிரபலம் என்று ரவிச்சந்திரன் தான் சொல்லி கொடுத்தார். அப்போது தான் சாம்பார் வடையை ருசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு பெங்களூர் சென்றால் சாம்பார் வடையை மிஸ் பண்ணுவதே கிடையாது.


    அதேபோல் எனது நெருங்கிய தோழி நடிகை சவுந்தர்யாவும் பெங்களூரில் தான் இருக்கிறார். அப்போது தான் அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். எல்லோரும் ஒன்றாக இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.

    அப்போது தான் உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங்மால் என்று வர்ணிக்கப்பட்ட மால் ஒன்று பெங்களூரில் திறந்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு 8 மணிக்கு அங்கு சென்றேன். ஏழெட்டு புதிய ஆடைகளையும் வாங்கினேன். சிப்பியில் செய்திருந்த அலங்கார பொருட்கள் பிரமாதமாக இருந்தது. அவைகளையும் வாங்கினேன்.

    யாருக்குமே ஷுட்டிங் நடத்த அனுமதிக்காத பங்களா வீடு ஒன்றை எங்களுக்கு தந்திருந்தார்கள். சுற்றிலும் வயல் வெளிகள்.. ஓங்கி வளர்ந்த மரங்கள். கண்ணுக்கு விருந்தளித்த இயற்கை சூழல்.

    அங்கு வைத்து தான் ஷுட்டிங் நடந்தது. நாங்கள் அங்கு தான் தங்கி இருந்தோம். எனக்கு பிறந்தநாள் நடப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக நிறைய பலூன்கள் வாங்கி கட்டியிருந்தார்கள். எனக்கு பலூன்களை பார்த்ததும் ஷுட்டிங் முடிந்து விளையாட ஆசை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆசையை அடக்கி கொண்டிருந்தேன்.

    ஆனால் ரவிச்சந்திரன் என்னைவிட பெரிய விளையாட்டு பிள்ளை என்பதை தெரிந்து கொண்டேன்.

    ஷுட்டிங் முடிந்த பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்ன செய்தார் தெரியுமா?

    சில பலூன்களை அவிழ்த்து எடுத்து வருவார். அதற்குள் தண்ணீரை நிரப்பி வைத்து கொள்வார். சுற்றும் முற்றும் பார்ப்பார். யாராவது தூங்கி வழிந்தால் அவரை அழைத்து வர சொல்லி அவர் அருகே வந்ததும் அவர் முகத்துக்கு அருகில் பலூன் மீது குண்டூசியால் குத்தி விடுவார். அது வெடித்து முகத்தில் தண்ணீரை விசுறும்.

    உடனே என்ன... தூக்கம் போச்சா...? என்று கேட்டபடி சிரிப்பார். உடனே நானும் கை கொட்டி சிறுபிள்ளை போல் சிரிப்பேன்.

    அப்புறமென்ன? அவரைப் போலவே நானும் சேட்டை பண்ணுவேன். ஒரே ஜாலியாக இருக்கும். ஷுட்டிங்கில் இருப்பது போலவே இருக்காது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் இருக்கும்.

    அந்த படத்தில் தான் முகமெல்லாம் ஹோலி வண்ணம் பூசினார்கள். அதுவரை அந்த அனுபவம் கிடையாது. உடல் முழுவதும் வண்ண பொடியுடன் தான் ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்வேன்.

    குளித்து அந்த சாயத்தை அகற்றுவதே பெரும் பாடாக இருக்கும். தற்காலிக நீச்சல் குளம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. பெங்களூர் குளிரில் காலை 6 மணிக்கு அந்த தண்ணீரில் இறங்கி நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?

    ஐஸ் கட்டிக்குள் நிற்பது போல் இருக்கும். குளிரில் உடலெல்லாம் நடுங்கும். அதையெல்லாம் தாங்கி கொண்டு நடிப்போம். லைட்மேன், கேமரா மேன் என எல்லோரும் கரையில் நின்றபடி படமாக்கி கொண்டிருப்பார்கள்.

    இன்னும் கொஞ்சம் அப்படி நில்லுங்கள்... இப்படி நில்லுங்கள்.. என்று சொல்லி சொல்லியே படமாக்குவதற்கு நேரமாகும்.

    எங்களுக்கோ... டேய் நீங்களும் உள்ளே இறங்கி பார்த்தால் தெரியும். சீக்கிரம் ஷுட்டிங்கை முடிங்கப்பா.. என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும்.

    ஷுட்டிங் முடிந்து குளத்தில் இருந்து கரையேறியதும் ரவிச்சந்திரன் வெளியே நிற்கும் படக்குழுவினர் யாரையாவது பிடித்து குளத்தில் தள்ளி விடுவார். அவர்கள் குளிரில் நடுங்குவதை பார்த்து சிரிப்பார்.

    நானும் சிலரை பிடித்து தள்ளி விடுவேன்... அவர்கள்.. மேடம்.. மேடம்... என்றபடி உள்ளே விழுவார்கள். அதை பார்த்ததும் நாங்கள் கைகொட்டி சிரிப்போம்.

    எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறேன். பாருங்கள். அடுத்த வாரம் மேலும் சில தகவல்களுடன் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×