search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டருக்கு பதில் கம்ப்யூட்டரா?
    X

    டாக்டருக்கு பதில் கம்ப்யூட்டரா?

    • “யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!”
    • “என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?”

    "ரெண்டு நாளா தல வலிங்க!"

    "சரி வேறென்ன ..?"

    "சாப்பாடே வேண்டியதில்லீங்க!"

    "ம்..?"

    "எப்பப்பாரு கோவம் வருதுங்க!"

    "வீட்ல சாமானெல்லாம் போட்டு ஒடைக்கணும்னு தோணுதா?"

    " கரெக்டுங்க! இட்சிணி மாதிரி சொல்றீங்க!"

    "ஒண்ணும் பிராப்ளம் இல்ல. நீங்க உங்க தங்கைய ஊருக்கு அனுப்பிட்டு, உங்க புருஷன ஆஃபீஸ் லீவ கான்சல் பண்ணச்சொல்லுங்க! சரியாயிடும்!"

    ஒரு டாக்டர் இப்படி சொன்னா அவர் மேல கம்ப்ளெயிளைண்ட் பண்ணத்தோணுமா இல்லியா?

    ஆனால் இப்படிச்சொல்வது ஒரு கம்ப்யுட்டராக இருந்தால்…?

    "என்னது..? கம்ப்யூட்டரா..டாக்டருக்குப்பதிலாகவா..?"

    " பதிலாக இல்லை, டாக்டருக்குத்துணையாக!"

    ஆம், செயற்கை புத்திசாலித்தனம் (Artificial Intelligence) என்னும் இயல், படு வேகமாக முன்னேறி, இன்று மனிதர்கள் போலவே யோசித்துச்செயல்படும் திறமைகளைக்கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஐ பி எம் மின் "வாட்ஸன்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புத்திசாலிக்கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன.

    இந்த செயற்கை புத்திசாலித்தனம் முதன் முதலில் சாதாரண, யோசனை இன்றிச்செய்யும் வேலைகளுக்காக உருவாக்கப்பட்டன. இந்த சாதாரண, தினப்படி அல்லது ரொட்டீன் வேலைகளை ரோபோக்களை வைத்துச்செய்வது பற்றி அறிந்துள்ளோம். ஆனால் யோசித்து அறிவாற்றல் கலந்த வேலைகளை (Cognitive Intelligence) செய்ய மனிதர்களால் மட்டுமே முடியும் என்னும் சித்தாந்தத்தை ஓரளவு இந்த வாட்சன் உடைத்துவிட்டது. ஆம், வாட்சனால் மனிதர்களைப்போல சிந்தித்து செயல்படவும் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளவும் முடியுமாம்!

    சமீபத்தில் ஜப்பானில் ஒரு பெண்ணுக்கு ரத்தப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு கீமோதெரபி வைத்தியம் செய்தார்கள். ஆனால் அவர் எப்படி குணமாக வேண்டுமோ அப்படி குணமாகிக்கொண்டு வரவில்லை. டாக்டர்கள் குழம்பித்தான் போனார்கள். வாட்சனிடம் தஞ்சம் அடைய, நம் வாட்சன் அந்தப்பெண்ணின் லட்சக்கணக்கான ஜீன் தகவல்களை அலசி ஆராய்ந்து அந்தப்பெண்ணுக்கு மரபணு சடுதி, அதாவது Genetic mutation ஏற்படுவதைக்கண்டுபிடித்தது. கிட்டத்தட்ட ஆயிரம் மரபணுக்களில் இந்த சடுதி ஏற்படுவதை அறிந்து, அவற்றில் பல இந்த புற்று நோய்க்கு சம்மந்தமில்லை என்பதையும் பத்தே நிமிடங்களில் வாட்சன் கண்டுபிடித்து விட்டது. இதைக்கண்டு பிடிக்க டாக்டர்களுக்கு இரண்டு வாரம் ஆகியிருக்கும்! இந்தக்கண்டுபிடிப்பை வைத்து மருந்து மாற்றப்பட்டபோது அந்தப்பெண் சீக்கிரம் குணமடைந்தாள்.

    வாட்சன் போன்ற கண்டு பிடிப்பு மிகப்புரட்சிகரமானதாகும். ஏனென்றால், சாதாரண கம்ப்யூட்டரால் சீராக கட்டமைக்கப்பட்ட (Structured) தகவல்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஆனால் வாட்ஸனால் கட்டமைக்கப்படாத (Unstructured) தகவல்களையும் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். வாட்சன் ஆன்காலஜி அட்வைசர் (Watson Oncology Advisor) என்னும் கம்ப்யூட்டர் கான்சர் பற்றிய ஏராளமான கட்டமைப்பற்ற தகவல்களை ஆராய்ந்து முடிவுகள் சொல்லக்கூடிய சக்தி படைத்ததாம்.


    கல்வித்துறையில் வாட்சன் சாதிக்கப்போகும் புரட்சி இன்னும் பிரமிக்க வைக்கிறது.

    "டீச்சர்! என்னோட மார்க் தப்பு!"

    "எப்படிடா சொல்றே?"

    "நான் அப்படியே ரமேஷ் பாத்து வரிக்கு வரி கப்பி அடிச்சேன்! அவனுக்கு எண்பது! எனக்கு பெயில் மார்க்கு! எப்படி டீச்சர்!"

    "அது அப்படித்தான்! நீ உன் லெவலுக்கு எழுதணும்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி லெவல்ல பரிட்சை, தெரியுமா!"

    ஆம், இனி பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் அவரவரின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுத்து சொல்லித்தர முடியும்! ஆக ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் திறமை விகிதங்களுக்கு ஏற்றபடி பாடங்களின் ஆழமும் விஸ்தாரமும் வடிவமைக்கப்பட்டு சொல்லித்தரலாம். இதனால் மாணவர்களில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, பேசுதல், திட்டுதல் போன்ற வகுப்பறைக்கலவரங்களை ஒருமிக்க தடுக்க முடியும். வாட்சன் என்லைட் (Watson Enlight) இப்போது இங்கிலாந்தில் பல கல்வி நிலையங்களில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

    "டீச்சர்! என் கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது!"

    "என்னைக்கேக்காதப்பா! ஹெட்மாஸ்டர் ரூமுல வாட்சன் இருக்கு பாரு, அதக்கேளு!!"

    அமெரிக்காவில் வேலைக்கு ஆள் எடுப்பதைக்கூட வாட்சன் செய்து விடுகிறதாம்!

    "என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?"

    "அவனோட ஐக்யூ உன்னோடத விட ஜாஸ்தி! அவனுக்கு இருக்கும் அனுபவங்களப்பார்த்தா நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா இருக்கணும்! அடுத்த வருஷம் அதையும் ரெகமண்ட் பண்ணிடறேன்!"

    "அய்யய்யோ வாட்சன்! அப்படி எல்லாம் பண்ணிடாதப்பா! உனக்குன்னு நான் இனிமே தனியா ஸ்பெஷல் கரண்ட் வரவெச்சு தரேன்! நா புள்ள குட்டிக்காரன், என்னை போட்டுக்குடுத்துடாத! என் கண்ணில்லியா!"

    ஆனால் இந்த வேலை செலக்ஷன் விஷயத்தில் வாட்சன் இப்பொதைக்கு ஓரளவுக்குதான் செய்கிறது. முழு ரெக்ரூட்மெண்டுமே வாட்சனிடம் விட முடியாது.

    ஐ.பி.எம்.மில் இந்தியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஸ்ரீராம் ராகவன் வாட்சனுக்கு இருக்கும் பிரகாசமான எதிர்காலம் பற்றிச்சொல்லுகிறார். "கூடவே அதில் இருக்கும் கஷ்டங்களும் மிகச்சிக்கலானவை. சூழலுக்கேற்றார்போல் புரிந்துகொள்ளும் அறிவை கம்ப்யூட்டருக்குப்புகட்டுவது மிகப்பெரிய சவால்" என்கிறார் ஸ்ரீராம் ராகவன்

    "கத்ரினாவினால் அமெரிக்காவில் அதிக சேதம்!"

    "என்னப்பா இப்படி சொல்றே! கத்ரினாவா? ஷீலா கி ஜவானி……அவங்க அமெரிக்காவுல போய் என்ன பண்ணினாங்க?"

    உடனே கேள்வி கேட்ட ஆசாமியை வாட்சன் இப்படி சவட்டக்கூடும்.

    "யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!"

    இனிமேல் வர்தா என்றால் "டாய்லெட் அந்தப்பக்கம்" என்றோ, மிக்ஜாம் என்றால் "அது கிசானா இல்லை வேறு ஏதாவது ஜாமா என்று கேட்டு அசடு வழியாதீர்கள்.

    வாட்சனின் பதில் மரங்களைப்போல உங்களையும் சென்னையின் புயல் சாய்த்துவிடக்கூடும்!

    Next Story
    ×