search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உலகம் நமது பிரதிபலிப்பு
    X

    உலகம் நமது பிரதிபலிப்பு

    • ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.
    • மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    உலக வாழ்வியலில் உண்மையின் தரிசனம் காணத் துடிக்கும் வாசகர்களே!

    வணக்கம்.

    செல்லிடப்பேசியில் நவீன சமூக ஊடகங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கில் இருந்தால் ஓர் உண்மை உங்களுக்கு நிச்சயம் விளங்கி இருக்கும். முகநூல், மற்றும் யூடியூப் வரிசைகளில் நாம் எந்த மாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து பார்க்கத் தொடங்குகிறோமோ, அந்த ஊடகங்களும் அதேமாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கும்.

    வீடுகள் மனைகள் வாங்குவது குறித்த செய்திகளைத் தொடர்ந்து பார்த்தால், அடுத்து எப்போது செல்பேசி வலையொளியைத் திறந்தாலும் வீட்டுமனை விற்பனை வீடியோக்களும் செய்திகளுமே முந்தி முந்தி வந்து நிற்கும். ஒரு குறிப்பிட்ட பேச்சாளரின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு காட்டினால், அவர் தொடர்பான ஒளிக்காட்சிகளே எப்போதும் வந்து காட்சியை ஆக்கிரமிக்கும்.

    உடையவரின் ரசனைகளுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தைச் செல்பேசிகள் பெற்றிருக்கின்றன.

    இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மனித மூளையால் திட்டமிடப்பட்ட செயற்கை அறிவு இத்தகு நுட்பங்களை உருவாக்குகின்றது. ஏனெனில் இன்று நாம் காணும் இயற்கை உலகமும், வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.

    காணும் பொருள்களிலெல்லாம் பக்தன் கடவுளைக் காண்பதைப் போல, மனிதன் தன்னையும் காண்பதுதான் உண்மை வாழ்வியல்.

    ஒரு கிராமத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில், ஒரு தாத்தாவும் அவரது பத்து வயதுப் பேரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார். பெரியவர், ஞயாருங்க? ஊருக்குப் புதியவர் போல இருக்கிறீர்கள்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

    தன்னுடைய ஊரின் பெயரைச் சொன்ன புதியவர், ''ஐயா! நான் இந்த ஊருக்குப் புதியவன்தான். ஒரு வேலையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். தாங்கள் இந்த ஊர் தானா?" என்று கேட்டார்.

    பெரியவர், "நாங்கள் இந்த ஊர் தான். இவன் என்னுடைய பேரன்" என்று பேரனை அறிமுகப்படுத்தி வைத்தார்.''ஐயா, இந்த ஊரைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை!. இந்த ஊர் எப்படி? ஊர்மக்கள் எப்படி?" என்று விசாரித்தார் புதியவர்.

    பெரியவர்,''எங்கள் ஊரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்! முதலில், உங்கள் ஊர் எப்படி? அங்குள்ள மக்கள் எப்படி?" என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    "ஆஹா! அற்புதமாய்ச் சொல்கிறேன்!. எங்கள் ஊர் வளமான ஊர். மாதம் மும்மாரி மழை! முப்போக விளைச்சல்! எல்லாம் அமோகம்!.

    எங்கள் ஊரிலுள்ள மக்களோ தங்கமோ தங்கம் சொக்கத் தங்கம்! அனைவரும் அவ்வளவு நல்லவர்கள்!" ஊர்ப் பெருமையைப் புகழ்ந்து தள்ளிவிட்டார் புதியவர்.

    ''அருமையாகச் சொன்னீர்கள்!. நீங்கள் சொன்னதற்கு இம்மியளவும் குறைவில்லாதது எங்கள் ஊர். உங்கள் ஊரைப் போலவே வளம் நிறைந்த ஊர்; மக்களும் உத்தம புத்திரர்கள்!" என்று தன் ஊரைப்பற்றிச் சொன்னார் பெரியவர்.

    "மகிழ்ச்சி ஐயா! நான் ஊருக்குள் சென்று வந்த வேலையைப் பார்த்துத் திரும்புகிறேன்" என்று ஊருக்குள் சென்றார் புதியவர்.

    அவர் சென்றதும், பேரனுடன் பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா. சிறிது நேரத்தில் மற்றுமொரு புதியவர் அங்கு வந்து பெரியவருக்கு வணக்கம் வைத்தார்.

    பெரியவரும் வழக்கம்போல, ஊருக்குப் புதிதா? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை? என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வந்த புதியவரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, "இந்த ஊர் எப்படி? இந்த ஊர் மக்கள் எப்படி?" என்று முந்தைய புதியவர் கேட்டது போலவே கேட்டார். பெரியவரும் வழக்கம் போல உங்கள் ஊரும் மக்களும் எப்படி? என்கிற கேள்வியை இரண்டாம் புதியவரிடம் வைத்தார்.


    "ஊராங்க அது? ஊர்ல மழை பேஞ்சாலும் விவசாயம் கிடையாது. காரணம் ஊர்ல இருக்கிறவன்லாம் காலிப் பசங்க சார். பொய், பித்தலாட்டம், வஞ்சகம், சூது, யாருமே நல்லாருக்கக் கூடாதுங்கிற கெட்ட எண்ணம் அநியாயத்தின் மொத்த உருவமே எங்க ஊர் மக்கள்தான்!" மூச்சுவிடாமல் பேசி முடித்தவர், ''இப்பச் சொல்லுங்க உங்க ஊர் எப்படி?" என்று கேட்டார்.

    ''ரொம்பச் சரியாச் சொன்னீங்க! நீங்க சொன்னதுக்கு இம்மியளவும் குறைவில்லாதது இந்த ஊர். ஒரு வளமும் கிடையாது; ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் கடைஞ்செடுத்த அயோக்கியனுங்க! போய் ஊருக்குள்ள பாருங்க! நீங்களே தெரிஞ்சுக்குவீங்க'' என்றார் பெரியவர்.

    அவ்வளவு தான். அந்தப் புதியவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவுடன் தாத்தாவிடம் பளிச்சென்று ஒரு கேள்வியைக் கேட்டான் பேரன்; ''அது எப்படி தாத்தா ஒரே ஊர் ஒருத்தருக்கு மிக நல்ல ஊராகவும் இன்னொருத்தருக்கு மிக மோசமான ஊராகவும் இருக்கும்?.நம்ம ஊரைப் பத்தியே இப்படி ரெண்டுவிதமாச் சொல்லலாமா?"

    "அழகான கேள்விடா பேராண்டி. நல்லவங்க கண்ணுக்கு இந்த உலகம் நல்லதாவே தெரியும்! கெட்டவங்க கண்ணுக்கு உலகம் கெட்டதாவே தெரியும். உலகம் அப்படியே தான் இருக்குது. அது சிலருக்கு நல்லதாவும், சிலருக்குக் கெட்டதாவும் தெரியக் காரணம் பார்க்கிறவங்க மனோநிலையைப் பொறுத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை. முதல்ல போனவன் நல்லவன்: அவனுக்கு நம்ம ஊர் நல்ல ஊராவே தெரியும்! இரண்டாவதாப் போனவன் கெட்டவன்; அவனுக்கு நம்ம ஊர் கெட்டதாத்தான் தெரியப் போகுது!. உலகம் என்பது நமது பிதிபலிப்பே தவிர வேறு ஒன்றுமில்லை" தாத்தாவின் பேச்சை கவனமாகக் கேட்டான் பேரன்.

    ஆம்! உலகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று குறிப்பிடும் அவ்வையார், மனிதர்கள் எங்கெல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நாட்டுப் பகுதிகளும் நல்லனவாகவே அமையும் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.

    ஒரு சாலையில் ஒரு மனிதர் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். வழிநெடுக இருபுறமும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வண்ண வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டிருக்கின்றன. அந்த மனிதர் மகிழ்ச்சியான மனநிலையில் நடந்து சென்று கொண்டிருந்தால், அந்த வண்ணக் கொடிகளின் அசைவு அவருக்கு, வருக! வருக! என வரவேற்புக் கூறுவது போலத் தோன்றும். மாறாக அவர் பெருஞ்சோகத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தால், அக்கொடிகள் வராதே! வராதே! என்று மறித்து அசைவதுபோலத் தோன்றும். மனிதர் ஒருவர்தான்!

    கொடியசைவும் ஒன்றுதான்! ஆனால் ஆழ்மனச் சிந்தைக்கு ஏற்ப அர்த்தப்பாடு மாறி விடுகிறது.

    எப்படி முயன்றாலும், முயற்சி தோல்வியிலேயே முடிந்து விடுகிறதே! என வருத்தப்படுபவரா நீங்கள்? முதலில் உங்களின் சூழலை மாற்றுவதற்குமுன் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமும் இளக்கமும் உடைய மண்ணில் விழும் விதையே செழித்து வளரும்.

    மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உடைய மனத்தில் எழும் முயற்சிகளே வெற்றியை அடையும்.

    யாரைப் பார்த்தாலும் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும்!.எதிரில் வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரையும் புன்னகைக்க வைத்து அவரையும் நம் பக்கம் மாற்றிவிடும் நமது புன்னகை. நமது வாழ்க்கையின் நோக்கத்தில் நன்மையும் செயல் ஊக்கமும் கலந்திருந்தால் மகிழ்ச்சி தாமாகவே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.அந்த மகிழ்ச்சி, காணும் மனிதர்கள் மற்றும் செயல்களில் எல்லாம் பற்றிக் கொள்ளும்!.

    நகரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு ஒரு நாள் இரண்டாயிரம் ரூபாய் மணி ஆர்டர் வந்தது. அடுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் இரண்டாயிரம் வீதம் பணம் வரத் தொடங்கியது; ஆறு மாதங்கள் கழிந்தவுடன், காப்பக நிர்வாகி, மணி ஆர்டரில் இருந்த முகவரியை வைத்து அனுப்பியவரைத் தேடிச் சென்றார் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில், பணம் அனுப்பிய நபர் ஒரு சிறிய இட்லிக்கடை நடத்தி வந்தார்.

    காணச் சென்றது காலை நேரமாகையால் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. காப்பக நிர்வாகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அவரைத் தனியாக அழைத்துச் சென்ற இட்லிக் கடைக்காரர், " ஐயா! என் பெயர் சங்குவேல். எனக்கு 73 வயதாகிறது.அதோ அங்கே இட்லி அவித்துக் கொண்டிருக்கிறாளே அவள் என் மனைவி. அவளுக்கு வயது 62. நாங்கள் இட்லிக்கடை வைத்து சொற்ப லாபத்தில் சேவை மனப்பான்மையோடு வியாபாரம் நடத்தி வருகிறோம். காலம் இப்படியே போகாது.எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மனைவி தனியே கஷ்டப்பட நேரிடும்.

    உங்கள் முதியோர் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டேன். மாதம் இரண்டாயிரம் என் மனைவிக்குத் தெரியாமல் அனுப்புகிறேன்.ஆயிரத்தை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்; மீதம் ஆயிரத்தை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதாவதொரு மாதத்தில் பணம் வரவில்லையென்றால் நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். அப்போது இங்கே வந்து என் மனைவியை உங்கள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்" என்று கண்கலங்கச் சொன்னார்.

    காலம் நகர்ந்தது.இரண்டாண்டுகள் கழித்து ஒரு மாதத்தில் மணிஆர்டர் வரவில்லை. காப்பக நிர்வாகி ஒருநாள் காலை நேரத்தில் அந்த கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அந்த இட்லிக்கடை அதே பரபரப்போடு நடந்து கொண்டிருந்தது. முதியவரைத் தேடினார் காப்பக நிர்வாகி. காணவில்லை; கடைக்காரரின் மனைவி இவரைப் பார்த்துவிட்டார்.

    "ஐயா என்கணவர் இருபது நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். உங்களைப் பற்றியும் காப்பகம் பற்றியும் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார். நானும் அங்கு வந்து விடலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் ஊர்க்காரர்கள் பாசம் என்னைத் தடுத்துவிட்டது.

    'ஆத்தா இங்கேயே இருந்து இட்லிக்கடை நடத்து ஆத்தா! உன்னைய நாங்க பார்த்துகிறோம்'னு சொல்லி மறிச்சுட்டாங்க. என் காலம் வரைக்கும் இங்கேயே இருந்து இவங்களுக்கு சேவை செய்யுறதுன்னு முடிவெடுத்துட்டேன். என் வீட்டுக்காரர் அனுப்பின மாதிரியே அடுத்த மாசத்திலர்ந்து உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்" என்றார். நாம் நல்ல மனத்தோடு சமூகத்திற்குச் சேவை செய்தால், அதன் பிரதிபலிப்பாய் சமூகமும் நமக்குச் சேவைசெய்யக் காத்திருக்கிறது'

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×