search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: மனதை கவர்ந்த மஞ்சள் நிறம்
    X

    மீனா மலரும் நினைவுகள்: மனதை கவர்ந்த மஞ்சள் நிறம்

    • ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார்.
    • பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான்.

    அய்யய்ய....

    வெக்கத்த பாரு மாமாவுக்கு...

    கட்டிக்க போறவ எப்படி இருக்கணும்னு கேட்டா...

    இப்படி வெட்கப்படுறீய...

    அட சொல்லுமாமா...

    என்னன்னு சொல்ல....

    அட யோசிக்கிறீயளா

    எப்படி சொல்ல...

    -என்ற ரொமான்டிக் டயலாக்கை நானும் பிரபுசாரும் பேச...

    "என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை..." என்று பிரபுசார் பாடும் அந்த பாடல் காட்சி இடம் பெற்ற 'ராஜகுமாரனை' நினைவிருக்கிறதா?

    1994-ல் வெளிவந்த படம். பிரபுசாரின் 100-வது படம். சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு. நானும் நதியாவும் ஹீரேயின்கள் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார்.

    எனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம். குறும்புத்தனம், துடுக்காக இருப்பது. படம் முழுக்க ஜாலியாகவே போகும்.

    ஹீரோ பிரபுசாரை நானும், நதியாவும் விரும்புவோம். ஆனால் பிரபு சார் விரும்புவது நதியாவைத்தான்.

    ஆனால் நான் விடாமல் துரத்தி துரத்தி காதலிப்பேன். அவரிடம் குறும்புத்தனம் செய்வேன். அப்போது அவரிடம் பேசுவதுதான் மேற்கண்ட டயலாக்குகளும், அதற்கு பதிலாக அவர் பாட்டாலேயே பதில் சொல்வார்.

    அவர் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்று நான் நினைப்பேன். ஆனால் அவரோ நதியா வைத்தான் வர்ணித்து பாடுவார். மஞ்சள் நிற சேலைகட்டி வரும் நதியாவை நினைத்து

    "என்னவென்று சொல்வதம்மா

    வஞ்சியவள் பேரழகை.

    அந்த மஞ்சள் நிறத்தவளை

    என் நெஞ்சில் நிலைத்தவளை......

    தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி

    மீன்களோ

    பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி

    கருங் கூந்தலோ.. என்று பாடுவார்.

    அந்த காட்சியில் உண்மையிலேயே நான் ஊஞ்சல்தான் ஆடிக் கொண்டிருப்பேன். அதனால் ஊஞ்சலில் இருக்கும் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்பது என் நினைப்பு.

    இந்த பாடலின் பின்னணியில் இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு. ஷூட்டிங் நடந்த போது எனக்குரிய காஸ்ட்யூமை தந்தார்கள். அது எனக்கு சரியாக இல்லை. அதனால்நான் எனது சொந்த டிரெஸ்சை போட்டு சென்றேன். அது மஞ்சள் நிற காக்ரா சோளி.

    எனது காஸ்ட்யூமை பார்த்ததும் இந்த காஸ்டியூம் கிடையாதே! வேறு டிரெஸ் கொடுத்து இருந்தோமே என்றார்கள். நான், அது சரியில்லை என்று சொன்னதும் டைரக்டரும் ஒத்துக் கொண்டார்.

    ரெடி... ஷாட்... என்றதும் அந்தி மஞ்சள் நிறத்தவளே... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்தேன். அந்த பாடல் வரிகளை கேட்டதும் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம். பாட்டுக்கு தகுந்த நிறத்தில் டிரெஸ். என்னை நினைத்தே எழுதிய பாடல் எழுதியதாக நினைத்து மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம்.

    ஆனால் மறுநாள் எனக்கு வேறு கலரில் காஸ்ட்யூம். எனக்கு பிடித்த மஞ்சள் நிற காஸ்ட்யூ மில் நதியா இருந்தார். அதை பார்த்ததும் என் மனதில் வருத்தம். நமக்கு பிடித்தமான கலர் அவருக்கு போய் விட்டதே என்று. அந்த வயதில் அப்படியெல்லாம் நினைத்து இருக்கிறேன். ஏன் அப்படி நினைதேன் என்றே எனக்கு புரியவில்லை.

    ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார். அந்த பாடலில் மஞ்சள் நிறத்தவளே என்று பாடுவார். அப்படியானால் நதியா மஞ்சள் புடவை கட்டி வருவதுதானே பொருத்தமானது என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

    இந்த படத்தில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் உண்டு. உயிரே உனக்காக என்ற படத்தில் நதியா ஹீரோயின். நான் குழந்தை நட்சத்திரமாக குட்டி நதியாவாக நடித்திருந்தேன்.

    இப்போது நதியாவுடன் அவருக்கு சரி சமமாக நானும் ஹீரோயினாக நடிக்கிறேன். நினைத்தாலே ஆச்சரியம்தானே.

    நான் ஹீரோயின் அந்தஸ்துக்கு வளர்ந்து இருந்தாலும் விளையாட்டுத்தனமாகவே இருப்பேன்.

    ஷூட்டிங் நடக்கும் போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவேன். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா உலகில் எல்லோருக்கும் என்னை தெரியும். அவர்கள் பார்வையில் எப்போதும் நான் குழந்தைதான். எனக்கும் கதாநாயகி ஆன பிறகும் குழந்தை நினைப்பு மாறவில்லை.

    எனது குரலும் குழந்தை குரல் போல்தான் இருக்கும். அதனாலேயே டப்பிங் பேச நினைத்தாலும் பேச முடியாமல் போனது.

    ராஜகுமாரன் படத்தில்தான் முதல் முதலில் டப்பிங் பேச ஆரம்பித்தேன். முக்கியமாக அந்த படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருந்ததால் நடிப்பதற்காக 'ரிஸ்க்' எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. சாதாரணமாக அங்கும், இங்கும் நடந்தது போலவும் விளையாடியது போலவும் இருந்து. ஆனால் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன.

    பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான். அவருடன் நடித்த எல்லோருமே இதை சொல்வார்கள். அவர் வீட்டு சாப்பாட்டை யாராலும் அடிச்சிக்க முடியாது. வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பெரிய பன் கேரியரில் சாப்பாடு வரும். அதுவும் விதவிதமாக இருக்கும்.

    நமக்கெல்லாம் மட்டன் என்றால் சுக்கா, குழம்பு பொரிப்பு அதே போல் சிக்கன் என்றாலும் ஒருசில வகைகள்தான் தெரியும்.

    ஆனால் பிரபு சார் வீட்டில் இருந்து வரும் கறிக்குழம்பை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். விதவிதமாக சமைத்து வைத்திருப்பார்கள்.

    நான் உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ருசி பார்ப்பேன். அவ்வளவுதான்.

    உடனே பிரபு சார் 'அட... என்பார். நல்வாசாப்பிடும்மா..!

    நானோ 'டயட்' சார் என்பேன்.

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்லா சாப்பிடு என்று சாப்பிட வைத்து விடுவார். உணவு கட்டுப்பாடெல்லாம் தகர்ந்து விடும். இப்படி விதவிதமாக சாப்பாடு கண்முன்னே இருந்தால் எவ்வளவு நேரத்துக்குத்தான் வாயை கட்டிக் கொண்டிருக்க முடியும்?

    அப்படித்தான் ஒருநாள் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கார் வந்தது. அதை பார்த்ததும் அப்பா வர்றார்.. என்று எல்லோரும் அருகில் ஓடினார்கள். சிவாஜி சாரை மரியாதையாக அப்பா என்று தான் அழைப்போம்.

    சிரித்து கொண்டே காரில் இருந்து இறங்கி வந்தார். சிவாஜி புரொடஷன் தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்திருந்தார்.

    அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    Next Story
    ×