என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உலகம் வியக்கும் யோகா
- உடல் வலுப்பெற உடல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
- யோகா பயிற்சியை மேற்கொள்ள எந்த உபகரணமும் தேவையில்லை என்பது அதன் தனிச்சிறப்பு.
நலம்தானா நலம்தானா…
உடலும் உள்ளமும் நலம்தானா… இந்த இரண்டையும் நலமாக வைத்திருப்பது எத்தனை பேர்?.
திணறும் உலக சமுதாயம்
உலக மனித சமுதாயம் இன்று மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கிறது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. சிறு சிறு பிரச்சினைகளுக்கும் பெருங்கோபம் பொங்குகிறது. பேராசை விடாமல் துரத்துகிறது. உணர்ச்சிகள் பல விலங்கிடுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஸ்மார்ட் போன் அடிமைப்படுத்தி விட்டது. இவற்றில் இருந்து விடுபட வழி தெரியாமல் மனித சமூகம் விழிபிதுங்கி நிற்கிறது.
இதற்கு மத்தியில் பூங்கா போன்ற பொது இடங்களுக்கு பலர் தரைவிரிப்புகளுடன் (மேட்) வருகிறார்கள். ஆரவாரமின்றி அமைதியாக அமர்ந்த இடத்தில் இருந்து உடலை வளைக்கிறார்கள். ஆசனங்களை செய்து வித்தை காட்டுகிறார்கள். மூச்சு பயிற்சி, தியானம் என அவர்களின் பயிற்சி நீள்கிறது. இந்த பயிற்சியை செய்ய தொடங்கியவர்கள் அதை விடாமல் உடும்பு பிடியாக பிடித்து பலனை அறுவடை செய்கிறார்கள்.
உடல், மனப்பயிற்சி
உடற்பயிற்சிக்கு எத்தனையோ கலைகள் உள்ளன. ஜிம்முக்கு சென்றால் உடலை முறுக்கி கொள்ளலாம். நடைபயிற்சி செய்தால் நன்மைகள் பல கிடைக்கிறது. ஆரோக்கியம் காக்க விதவிதமான பயிற்சிகள், விளையாட்டுகள் உள்ளன. பின்னர் ஏன் யோகா பயிற்சி செய்ய வேண்டும்?. அப்படி என்னதான் அதற்குள் புதைந்து இருக்கிறது?.
உடல் வலுப்பெற உடல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் யோகா என்பது உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றிற்கும் ஆன கலையாகும். எனவே தான் யோகாவை உடல் மற்றும் மனப்பயிற்சி கலை என்று அழைக்கிறோம். யோகா ஆசனங்களை செய்ய தொடங்கியவர்கள், சில வாரங்களிலேயே உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை உணர தொடங்குகிறார்கள்.
உடல் பயிற்சி மூலம் உள்ளுறுப்புகள் 20 சதவீதம் தூண்டப்படுகிறது என்றால், அது யோகா பயிற்சியில் 80 சதவீதமாக இருக்கிறது என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் நோயற்ற வாழ்வை யோகா உறுதி செய்கிறது.
வயிறு சுருங்கி மார்பு விரிவதுதான் மனித தோற்றத்துக்கு அழகு. சூரிய நமஸ்காரம் மற்றும் சில ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தாலே இது சாத்தியம். யோகா பயிற்சியை மேற்கொள்ள எந்த உபகரணமும் தேவையில்லை என்பது அதன் தனிச்சிறப்பு. உடலும், மனதும் தான் அதன் உபகரணங்கள்.
பதஞ்சலி முனிவர்
பண்டைய காலத்தில் யோகாவை பெரும்பாலான இந்திய மக்கள் செய்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றோருடன் அடக்கம் ஆகி விட்டது. எதிர்பாராத விதமாக இந்த கலை இந்தியாவை விட வெளிநாடுகளில் பிரபலமாக தொடங்கியது. அதன் பிறகுதான் பாரதம் விழித்துக்கொண்டது. கடந்த 100 ஆண்டுகளாக நாம் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறோம்.
இன்று உலகம் போற்றும் கலையாக திகழும் யோகா, இந்தியாவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கருதப்படுகிறது. யோகா கலையின் கடவுளாக சிவபெருமான் அறியப்படுகிறார். சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தான் யோகாவை எளிமைப்படுத்தி முறையாக வகுத்து கொடுத்தார். எனவே அவர் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார்.
சர்வதேச தினம்
யோகாவை உலகெங்கும் பரப்ப எடுத்த பெரும் முயற்சி பிரதமர் நரேந்திர மோடியை சாரும். 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் பெருமைகளை எடுத்துக்கூறி, அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தார். அதற்கு 177 உறுப்பு நாடுகள் பேராதரவு அளித்ததன் பலனாக 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது. முதல் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திலேயே ஏராளமான நாடுகள் பங்கு பெற்றன.
தற்போது யோகாவில் தலைசிறந்த 20 நாடுகளாக இந்தியா, கனடா, பிரேசில், வியட்நாம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, சுவீடன், நியூசிலாந்து, அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை விளங்குகின்றன. சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
உலகை ஆளும் கலை
இந்தியாவில் 15 கோடி மக்களும், அமெரிக்காவில் 3½ கோடி பேர், கனடாவில் 7.6 லட்சம் பேர், ஆஸ்திரேலியாவில் 15 லட்சம் பேர் யோகா பயிற்சியை செய்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மக்கள் இந்த பயிற்சியை தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொண்டதாகவும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மதத்தை கடந்து உலக மக்களின் மனதை வென்று விட்டதை இது உணர்த்துகிறது.
11-வது சர்வதேச யோகா தினத்தை இன்று கொண்டாப்படுகிறது. பாரதம் கடந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய யோகா தற்போது உலக மக்களின் வாழ்க்கை கலையாகவும், உலகை ஆளும் கலையாகவும் மாறி இருக்கிறது. ராணுவ பயிற்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட, யோகா பயிற்சியில் இன்னும் தீவிர ஆர்வம் காட்டினால் உலகெங்கும் அமைதி ஓங்கும்.






