என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கட்டுப்பாடான மனமே உதவும்
    X

    கட்டுப்பாடான மனமே உதவும்

    • சூதாட்டம் தெரியாத தருமர் எதிரியின் வலையில் சிக்குகிறார்.
    • தவறு என்று தெரிந்தும் நண்பன் என்ற காரணத்திற்காக தவறு செய்யும் துரியோதனன் உடன் இருந்தவன் கர்ணன்.

    மகாபாரதம்: இதனை உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று நிரூபிக்க பல விஞ்ஞான ஆய்வுகள் வெளி வந்துள்ளன.

    பல பல காலங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த சம்பவங்களை நொடிக்கு நொடி இன்றைய கால கட்டத்தில் கூற முடியாதுதான். அன்றே தொகுக்கப்பட்ட நிகழ்வுகளை விளக்கவுரை படுத்தி கூறும்போது அந்த கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சில உப கதைகள், உரையாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

    ஆனால் வாழ்வின் நெறியினை மிக நன்றாக கற்றுத் தரும் பதிவுதான் மகாபாரதம். என்ன செய்தால் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிற கண் முன்னே நடமாடும் நீதிதான் 'மகாபாரதம்'

    இதனை கற்பனைக் காப்பியம் என்று கூறுவோரும் உண்டு. இருக்கட்டும். ஆனால் நேர்மையான வாழ்க்கைக்கு வழி காட்டும் அழுத்தமான பதிவுகள் கற்பனையா? உண்மையா? என்பதனைப் பற்றி வாதங்கள் இங்கு தேவையில்லை. அதில் உள்ள பல நல்ல கருத்துக்களைப் பார்ப்போம்.

    பீஷ்மரின் தந்தை சாந்தனு. சத்யவதியினை மணக்காமல் இருந்திருந்தால் மகாபாரதம் என்ற ஒன்று இருக்குமா? என்பதே சந்தேகம்தான். பீஷ்மர் தன் தந்தையின் விருப்பத்திற்காக தான் அரசனாக மாட்டேன் என்ற உறுதியினைத் தந்தார். பீஷ்மர் தன்னை நாட்டுக்காக மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டார்.

    நாடு என்ற ஒன்றிற்காக பாண்டவர்களை எதிர்த்தும் போரிட்டார். தன் குரு பரசுராமருடன் போரிட்டார். தன் தம்பிக்கு கல்யாணம் செய்ய வேண்டி 'அம்பா'வினைக் கடத்தினார். அம்பாவிற்கு தான் ஏன் கடத்தப்படுகின்றோம் என்று கூட முதலில் தெரியவில்லை. தன் வலிமையினைக் கொண்டு ஒரு பெண்ணை தன் நாட்டிற்காக, தன் தம்பி மணம் புரிவதற்காக கடத்தி வந்தார்.

    திரவுபதி சபையில் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்க்காமல் இருந்தார். இவர் மனம் வேதனைப்படாமல் இல்லை. ஆனால் துரியோதனனை தடுக்கவில்லை. பீஷ்மரின் அறிவு, சத்தியம், நேர்மை இவைகள் மூலம் ஒருவர் வாழ்விற்கான பாடங்களை கற்க வேண்டும். அவரைப் போன்ற மன உறுதி வேண்டும். ஆயினும் மிக உயர்ந்த குணம் கொண்டவர்களும் தன் பிடிமானக் கொள்கைகளுக்காக பாதை சற்று மாற வேண்டி உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.

    தன் அண்ணன் சொல்படி அதனை மீறாமல் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள். தர்மரின் சொல்லை மீறாமல் வாழ வேண்டும் என அவரின் சகோதரர்கள் நால்வர் இருந்தனர். துரியோதனின் சொல்லுக்கு மறு பேச்சு கூடாது என அவரது தம்பிகள் 99 பேர் இருந்தனர்.

    சூதாட்டம் தெரியாத தருமர் எதிரியின் வலையில் சிக்குகிறார். என்ற பொழுதும் மற்ற நால்வர் அவரின் சூதாட்ட தோல்வியால் எதிரிக்கு அடிமை ஆனார்கள். திரவுபதியினை பணயம் வைத்த போது கூட மவுனம் காத்தார்கள்.

    கவுரவர்களோ தன் அண்ணணுக்கு மேல் கோபமும், வேகமும் உடையவர்களாக இருந்தார்கள்.

    நண்பர்கள் இருக்க வேண்டியது தான். நன்றி கடன் அவசியம்தான். அதே போல் நட்பு இருக்க வேண்டிய அளவுக்கு நண்பர் தவறு செய்தால் திருத்த போராட வேண்டும். இல்லையென்றால் நகர்ந்து விட வேண்டும்.

    தவறு என்று தெரிந்தும் நண்பன் என்ற காரணத்திற்காக தவறு செய்யும் துரியோதனன் உடன் இருந்தவன் கர்ணன். காரணம் உள்ளுக்குள் தான், பிறந்த தாயால் கை விடப்பட்டவன் என்ற வேதனை அவனுக்குள் அரித்துக்கொண்டே இருந்தது. அதனால் தவறு செய்தாலும் நண்பன் உயர்வாகத் தெரிந்தான்.

    அஸ்வத்தாமன் தனது நண்பன் துரியோதனனுக்கு உதவி என்ற பெயரில் உலகம் சகித்துக்கொள்ள முடியாத செயல் எல்லாம் செய்தான். பஞ்ச பாண்டவர்களின் அனைத்து பிள்ளைகளையும் கொன்றான். அர்ஜூனனின் மருமகள் அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் உள்ள கருவை அஸ்திரம் ஏவி கொல்ல முயன்றான்.

    அந்த கருவினை கிருஷ்ணர் உயிர் பித்தார் என்பது புராண கூற்று. மனிதன் நினைத்து பார்க்க கூட அஞ்சும் தவறினை அஸ்வத்தாமன் செய்ததால் இன்றும் உலகில் மிகுந்த பாதித்த உடலோடு அழைந்து கொண்டிருக்கிறார். இது கிருஷ்ணர் கொடுத்த சாபம்.

    சிவபிரான் அன்றாடம் இரவில் கோவில் பூஜை செய்வதாக வட இந்தியர்கள் கூறுகின்றனர். துரோணாசாரியரின் மகனாக பிறந்தாலும் பல திறமைகளை பெற்றிருந்தாலும் தவறானவருடன் தொடர்ந்த நட்பு கொடுமையின் உச்சிக்கே கொண்டு சென்றது.

    இது மக்களுக்கான கருத்தான பாடம். உயிர் போகும் நிலையில் கூட தீயவர்களிடம் இருந்து உதவி பெற்று விடக்கூடாது. நன்றி கடன் என்ற பெயரில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

    சகுனி தன் தங்கை தன் குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்காக துரியோதனன் கூடவே இருந்து அவர்களை அழித்தார்.

    திருதிராஷ்டிரன் அரச நீதிப்படி நடக்கவும் இல்லை. துரியோதனனின் அளவு கடந்த தவறுகளை கண்டிக்கவும் இல்லை. காந்தாரிக்கோ தன் பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தின் காரணமாக நியாய தர்மங்கள் எடுபடவில்லை.

    திரவுபதியின் பக்கத்திலும் குறைகளை சொல்லலாம். ஆனால் சாலையில் திரவுபதிக்கு நேர்ந்த கொடுமையினை பெண் உலகம் தாங்காது.

    ஆங்காங்கே ஏற்படும், செய்யும் சிறு தவறுகளோ பெரிய தவறுகளோ அடுக்கடுக்காய் வளர்ந்து நரக வாழ்க்கையினை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மகாபாரதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடியும்.

    நீதிமான் என்ற பொருளுக்கு முழு அர்த்தம் கொடுத்தவர் விதுரர்.

    கமலி ஸ்ரீபால்

    அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கலாம். அவரை நாம் அவதார புருஷராக போற்றுகின்றோம். அவரது 'கீதோபதேசம்' ஒன்று மட்டும் போதுமே. அன்றாடம் ஒரு முறை படித்தால் கூட மனம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    எந்த மதத்திலும் நீதி, தர்மம் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. கடவுள், மதம் சாராதவர்களும் இதனையே கூறுகின்றனர்.

    ஆக கட்டுப்பாடான மனம் ஒன்றே ஆன்மீக பயணத்தினை தொடர உதவும் என்பதனை அறிவோமாக.

    கருடனை பார்த்தால் யோக பலன் என கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்த கருடனை பார்ப்பதனை கருட தரிசனம் என்று கூறுகின்றோம். கோவிலுக்கு சென்று வந்தால் சாமியை தரிசனம் செய்து விட்டு வந்தேன் என்று தான் பொதுவில் கூறுவார்கள்.

    உயர்ந்த நிலையில் நாம் பார்க்கும் அனைத்தினையும் தரிசனம் என்று தான் கூறுவோம். அந்த தரிசனம் மங்கலகரமானது. ஆக 'சுதர்சனம்' என்றும் குறிப்பிடப்படுகின்றது. சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்பதாகும்.

    பெருமாள் கோவில்களில் 'சுதர்சன சந்நிதி' என்றே உண்டு. அச்சந்நிதிகளுக்கு கண்டிப்பாய் செல்ல வேண்டும். பொதுவில் பெருமாள் கோவிலில் கருடன் சந்நிதி, பலி பீடம், கொடி மரம் பின்பு பெருமாள் சந்நிதி என்று இருக்கும்.

    பறவைகளின் தலைவன் கருடன் தான் எனப்படுகின்றது. இவருக்கு கருடாழ்வார் என்ற பெயரும் உண்டு. வேதசொரூபன் என இவரை குறிப்பிடுவார்கள். வியாழக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால் சிறப்பு என்பர்.

    கெட்ட சகுனங்கள், துர் நிகழ்வுகள் போன்றவை கருட தரிசனத்தினால் நீங்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பதியில் பெருமாள் 'கருட வாகனத்தில்' வருவதனை தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதும். இதனை 'கருட சேவை' என்பர்.

    கருடாழ்வாருக்கு சிகப்பு பட்டு அணிவித்து மல்லிகைப்பூ, கதிர் பச்சை, மரிக்கொழுந்து, செண்பகம் பூக்களால் அர்ச்சனை செய்தால் மபையம், தோஷம் நீங்கும் என பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கருடனை வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பர்.நோய்கள் நீங்கும்.

    * ஞாயிறு கருட தரிசனம்-நோய்கள் நீங்கும்.

    * திங்கள் அன்று ஏற்படும் கருட தரிசனம் குடும்பத்தில் சுபிட்ஷங்கள் ஏற்படும்.

    * செவ்வாய் கருட தரிசனம் - மன தைரியம் கூடும்.

    * புதன் கிழமை கருட தரிசனம் - சத்ருக்களே இருக்க மாட்டார்கள்.

    * வியாழக்கிழமை கருட தரிசனம்- தனம் சேரும்.

    * வெள்ளிக்கிழமை கருட தரிசனம்-தடையில்லா பண வரவைத் தரும்.

    * சனி கருட தரிசனம்-கருமங்கள் தீரும்.

    'ஓம் தத் புருஷாய பிரசோதயாத்' சீவாண பட்சாய தீமஹி

    தன்னோ கருடஷ் பிரசோதயாத்' என்ற கருட காயத்திரியினை ஜபிக்கலாமே.

    சமீபத்தில் கருடனை பற்றி பேசப்பட்ட பொழுது ஒரு வைணவப் பெரியவர் கூறியதனை பகிர்ந்து கொள்கிறேன். உனக்குள் ஒளியினைப் பார்ப்பதற்கு முதலில் மனபயம், பிரச்சனைகளை நீக்க வேண்டும். அதில் பக்தி மார்க்கமும் ஒரு வழி என்றார் அந்த பெரியவர். அந்த பெரியவர் தான் படித்ததாக ஆன்மிக விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நாமும் அறிவோமே!

    Next Story
    ×