என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்: மார்பகம் சார்ந்த நோய்களும், இயற்கைத் தீர்வுகளும்
    X

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்: மார்பகம் சார்ந்த நோய்களும், இயற்கைத் தீர்வுகளும்

    • மார்பக வலிக்கு வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சலித்துப்போன பெண்கள் சித்த மருத்துவத்தை நாடுவது நல்லது.
    • தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும்.

    மார்பகம் சார்ந்த வலியையும் வேதனையும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அனுபவிக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஏனெனில் மார்பகம் என்பது பெண்களின் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களுக்கு ஆட்படும் உறுப்பாக உள்ளது. மார்பகப் புற்றுநோய் பற்றி மட்டுமே பலருக்கும் தெரியக்கூடும். ஆனால் அது மட்டுமின்றி மார்பகப்புண், மார்பக அழற்சி, மார்பக வலி ஆகிய நோய்குறிகுணங்கள் பெண்களுக்கு இன்னல்களை தந்து வருத்தத்தை உண்டாக்குவதாக உள்ளது. சமீப காலங்களில் நவீன வாழ்வியல் அதிகரிப்பால் 'பைப்ரோஅடினோமா' எனும் தசைக்கட்டிகள் பெண்களின் மார்பகங்களில் உண்டாவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெண்கள்படும் சிரமம் அளவில்லாதது.

    மார்பகம் என்பது பெண்கள் பூப்பு அடைந்தபின் வளர்ச்சி அடையும் உறுப்பாக பலர் கருதுகின்றனர். உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, ஆறாவது வாரம் முதல் எட்டாவது வாரத்தில் மார்பகத்தின் வளர்ச்சி உண்டாவதற்கான ஆயத்தம் உடலில் உண்டாகி விடுகிறது. அதன் பின் மார்பகம் சார்ந்த பல்வேறு பகுதிகள் ஒவ்வொன்றாக உண்டாக துவங்கி விடுகின்றன.

    இத்தகைய வளர்ச்சியில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெண் ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் மட்டுமல்லாது மூளையில் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோலாக்டின் ஹார்மோன் தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் முதன்மையானது.

    மார்பக வளர்ச்சி முதன்மையாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் தூண்டப்படுகிறது. மார்பகத்தில் உள்ள நாளம் மற்றும் கொழுப்பு சுரப்பிகள் புரோஜெஸ்டிரான் ஹார்மோனால் தூண்டப்படுகின்றன. பெண்களின் மார்பக கூறுகளின் முதிர்ச்சியை துரிதப்படுத்த வளர்ச்சி ஹார்மோன், அட்ரீனல் ஹார்மோன்கள், தைராய்டு ஹார்மோன், புரோலாக்டின் போன்ற அனைத்து சுரப்பிகளின் பங்கும் இன்றியமையாததாக உள்ளது. ஆக, மார்பக வளர்ச்சி ஒட்டுமொத்த ஹார்மோன் சுரப்புகளின் கூட்டு செயலாக உள்ளதை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.

    இத்தகைய பல்வேறு ஹார்மோன்களை சார்ந்து இருக்க கூடிய மார்பகம் நவீன வாழ்வியலில் உண்டாகும் ஹார்மோன் சமநிலையின்மையால் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகின்றது. அந்த வகையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். இது 'சைக்ளிக் மாஸ்டால்ஜியா' என்று அழைக்கப்படும். இது மட்டுமில்லாது முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது.

    இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    பெண்கள் முதலில் மார்பக வலிக்கு காரணம் வேறு ஏதேனும் நோய்நிலை உள்ளதா? என்று கணித்துக்கொள்வது நல்லது. அவ்வாறு ஏதேனும் நோய்நிலை இருப்பின் அதற்கு தகுந்தாற்போல் மருத்துவம் மேற்கொள்வது அவசியம். மார்பக வலிக்கு வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சலித்துப்போன பெண்கள் சித்த மருத்துவத்தை நாடுவது நல்லது. இயற்கையாக வலிநிவாரணிகளாக பல மூலிகை கடைசரக்குகள் பெண்களுக்கு உதவ சித்த மருத்துவத்தில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி பயடையலாம்.

    மார்பக வலியின் போது சித்த மருத்துவ கடைசரக்குகள் பயனுள்ளதாக உள்ளதை ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. கருஞ்சீரகம், சோம்பு, இஞ்சி, மஞ்சள், ஆளி விதை ஆகியன அதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கருஞ்சீரகத் தைலத்தை கொண்டு மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் சைக்ளிக் மார்புவலிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலிக்கு சோம்பு கசாயம் (பெருஞ்சீரகம்) கைகண்ட மருந்து. அதைப்போல் மார்பக வலிக்கும் பயன் தருவதாக உள்ளது. ஒமேகா-3 எனும் மருத்துவ குணமிக்க கொழுப்பு அமிலத்தை இயற்கையில் கொண்டுள்ள சித்த மருத்துவ மூலிகை ஆளி விதை. பெண்களின் மார்பக வலியை குறைப்பதில் இதுவும் பயனளிக்கும்.

    மருத்துவ குணமிக்க பாரம்பரிய தன்மையுடைய மஞ்சளின் நற்குணங்கள் ஏராளம். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' எனும் அல்கலாய்டு மிகப்பெரிய ஆராய்ச்சிப்பொருள். இது அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுடைய வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-க்கு நிகர் உள்ளதாக அறிவியல் கூறுகின்றது. சிறப்பு என்னவெனில், மஞ்சள் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் மார்பக வலிக்கும் சிறந்த பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. காரணம் இதில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் உடலில் வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிலாண்டின் என்ற வேதிப்பொருளின் செயலை தடுப்பதாக உள்ளது.

    அதே போல் இஞ்சி எனும் மற்றுமொரு கடைசரக்கு மூலிகை நம் அனைவருக்கும் பரீட்சயமானது. காலம் காலமாக பயன்படுத்தி வரும் மூலிகையான இஞ்சியின் மருத்துவ குணங்கள் அளப்பரியது. இஞ்சியில் உள்ள 'ஜின்ஜிபேரின்' எனும் அல்கலாய்டு வேதிப்பொருள் உடலில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாகிலாண்டின் மற்றும் லியூகோட்ரின் ஆகியவற்றின் செயலை தடுத்து வலியை குறைக்கும் தன்மையுடையது. ஆக பெண்கள் ஒரு கோப்பை இஞ்சி டீ எடுத்துக்கொள்வது பெண்களின் மார்பக வலியை குறைக்கும் இயற்கை அலுப்பு மருந்தாக உள்ளது. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமைக்கு உதாரணம்.

    மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். இதனை 'வாதமாலாது மேனி கெடாது' என்ற தேரையரின் தொடர் உறுதி செய்கிறது. எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

    சித்த மருத்துவம் உணவே மருந்து என்று கூறுவதை அறியாதவர் இல்லை. ஆக, சைக்ளிக் மாஸ்டால்ஜியா உள்ள பெண்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம்.

    மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள். இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

    'பைப்ரோஅடினோமா' எனப்படும் தசைக்கட்டிகள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிறது. முக்கியமாக 20 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் அளவு கூடுகிறது. ஆனால் இந்த வகை கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். இருப்பினும் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு இது புற்றுக்கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது. ஆகவே அவ்வப்போது இதனை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

    சித்த மருத்துவ தத்துவத்தின் படி, வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபமும் வாதமும் சீர் கேடடைந்து கபவாதம் என்ற நிலை உருவாகி இத்தகைய கட்டிகளை மார்பகத்தில் உண்டாக்குவதாக கூறுகின்றது. ஆக கபவாதத்தை சீர் செய்யும் மருந்துகளையும், கட்டிகளை கரைக்கும் மூலிகைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள நோய் நிலையில் முன்னேற்றம் வரும். இவை சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம். ஆக, பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    கட்டிகளை கரைக்கும் சித்த மருத்துவ மூலிகைகளாகிய அமுக்கராக் கிழங்கு, மஞ்சள், சேராங்கொட்டை, கொடிவேலி, கழற்சிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை நாடுவது நல்லது. இதில் அமுக்கராக் கிழங்கு கட்டிகளை கரைப்பதோடு மட்டுமின்றி, அது சார்பாக பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கி நன்மை பயக்கும்.

    சேராங்கொட்டை எனும் கொடிய நஞ்சுடைய பாலினை கொண்ட மூலிகையின் நஞ்சினை போக்கி மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. இது சேரும் மருந்துகள் தசைக்கட்டி மட்டுமல்லாது புற்றுக்கட்டிகளிலும் நல்ல பலன் தருவதாக உள்ளது. மஞ்சள் எனும் மாமருந்து தசைகட்டிக்கும் நல்ல பலன் தரும். தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும். இன்னும் பல தாது கலப்பு மருந்துகள் மார்பக தசைக்கட்டிகளில் உதவக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவ மூலிகை கடைசரக்கான வெந்தயம் பால் சுரப்பிகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மார்பக அழற்சி எனும் வீக்கநிலையில் வெந்தயத்தை பயன்படுத்த பித்தம் குறைந்து வீக்கம் தணியும். அதற்கு வெந்தயத்தை அரைத்து பற்றாக்கி மார்பகத்தின் மீது போடலாம்.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மார்பகம் சார்ந்த குறிகுணங்களான, சுற்றி நெறிக்கட்டிகள் காணுதல், மார்பகத்தின் வடிவம் மற்றும் பருமன் மாறுபட்டு காணுதல், வழக்கத்திற்கு மாறான கசிவு, மார்பகத்தின் மேல் ரத்த நாளங்கள் விரிந்து காணுதல், மார்பகம் கடினமாக தோன்றுதல் ஆகிய குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து தோன்றினால் பெண்கள் எந்த வித தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான பரிசோதனை முறைகள் மூலம் மார்பகம் சார்ந்த நோய்களை முன்னதாகவே கணிக்க முடியும். சித்த மருத்துவம் மூலம் தீர்வு தந்து நலமான வாழ்வை நோக்கி நகர முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×