என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தொழிலின் வெற்றிக்கு உதவும் கிரகங்கள்- 7
ஒரு மனிதனுக்கு சமுதாய அங்கீகாரத்தை தரக் கூடியது தொழில். ஒருவருக்கு பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் ஆகியவற்றை கொடுப்பதில் வேலையை விட தொழிலே முன்னிலை வகிக்கிறது.
கோடிக்கணக்கானவர்கள் சொந்த தொழில் நடத்தினாலும் வெகு சிலரே சொந்தத் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள். சுய தொழிலில் சாதனை படைத்து வெற்றிவாகை சூடுபவர்கள் யார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தர்மகர்மாதிபதி யோகம்
ஒரு மனிதனுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரக்கூடிய முதல்தரமான யோகம் தர்ம கர்மாதிபதி யோகமாகும்.
தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில் மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.
காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். கால புருஷ ஒன்பதாம் அதிபதி, தர்ம அதிபதியான குருவிற்கும் கர்மா அதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு+சனி சம்பந்தம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள்
கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்.
இதில் குரு ,சனி சேர்க்கை மற்றும் சம சப்தம பார்வை 100 சதவீதம் நற்பலன் தரும். சனி மட்டும் குருவைப் பார்ப்பதும் குரு மட்டும் சனியை பார்ப்பதும 50 சதவீதம் பலன் தரும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் சுபத் தன்மையோடு செயல்பட்டால் சுய தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
புதன்
புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரக கிரகம் என்பதால் புதன் வலிமை பெற்றவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டுபிடிக்க போகும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தகாரர் இவரே.புதன் வலுப்பெற்றால் எந்த சூழ்நிலையிலும் தன் அறிவின் மூலம் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். காலத்தின் வேகத்திற்கு தக்கவாறு சமயோசித சிந்தனையையும் செயல்பாடுகளையும் அறிந்து எடுத்து சொல்லும் பக்குவம் உள்ளவர்கள். உலகியல் நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றி கொள்ளும் போக்கும் உண்டு. வித்தியாசமான பேச்சு மற்றும் புத்தி சாதுர்யத்தால் எதிராளியை தன்வசப்படுத்தும் வல்லமை புதனுக்கு உண்டு.
மற்றவர்களின் மனநிலையை அறிந்து அதற்குத் தக்கவாறு தன் முடிவை மாற்றிக் கொள்வார்கள், முடிவு எடுப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அனைவரையும் பிரியாமல் தன்னுடன் வைத்துக் கொண்டு அவர்களின் மூலம் எல்லா நன்மைகளையும் அடைவார்கள். நிபுணத்துவம் நிறைந்திருக்கும். சாதிக்கும் குணம் கொண்டவர்கள். எழுத்திலும் பேச்சிலும் வல்லவர்கள் மிக கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பவர்கள். மற்றவர்கள் செய்யும் தவறை உடனே தெரிந்து கொள்வதால் அதை சுட்டிக்காட்டி அந்த தவறை சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். உடல் உழைப்பு அதிகமின்றி புத்தியை உபயோகபடுத்தும் தொழில் செய்பவர்கள், இனிமையாக பேசி மற்றவர்களை வசியபடுத்தும் ராஜதந்திரியாக இருப்பார்கள்.
அடிக்கடி மாறும் குணம் கொண்டவர்கள். எதிரிகளை நேரடியாக எதிர்க்காமல் உறவாடியே அழிப்பவர். சிரித்துப் பேசும் திறமையால் எவரையும் வெல்லும் சூட்சுமம் தெரிந்தவர்கள். ஒருவரை பார்த்த மாத்திரத்தில் எடைபோடும் ஆற்றல் உண்டு. எதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர். கல்வித் திறமை காரணமாக எங்கு சென்றாலும் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். சுய உழைப்பினால் உயர்ந்து நிற்பவர்கள். அழுத்தமான மனதால் பிறரிடம் ரகசியம் வெளியிட விரும்பமாட்டீர்கள்.
வியாபார தந்திரம் நிறைந்தவர்கள். கல்லைக் கூட காசாக்குவார்கள்.
ஒரு கல் எறிந்தால் இரண்டு மாங்காய் விழ வேண்டும் என்பது இவர்களது கொள்கை.
இளமையுணர்வு, காதல், சாதிக்கும் வெறி, சுயநலம், இரட்டை வேடம், நடிப்பு, பிறரை புகழ்ந்து வேலை வாங்கும் திறன், மகா புத்திசாலித்தனம், ஆழ்ந்த அறிவு நிரம்பியவர்கள். அறிவால் தைரியசாலித் தனத்தால் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவதில் வல்லவர்கள். பின் வரக்கூடிய விஷயங்களை முன்பே கண்டுபிடித்து அதற்கான தீர்வை நோக்கி திட்டமிடுவார்கள். பார்த்தீர்களா வாசகர்களே, புதனின் சேட்டைகளை.
அரசியல்வாதிகளுக்கு ராஜ தந்திரத்தை போதிக்கும் கிருஷ்ண பரமாத்மாவே புதன்பகவான் தான்.
பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.
அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு தகுந்தாற்போல் தன் தன்மையை மாற்றி அசுப பலனும் தருவார். கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு என்பது பழமொழி. தன் புத்தி சாதுர்யத்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகத்தை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எளிமையாக, திறமையாக சொந்த தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள், சம்பாதிப்பவர்கள் புதன் வலிமை பெற்றவர்கள்.
சனி
கால புருஷர் 10ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்வார். அதனால் சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு.
தொழில் காரகன் சனி என்பதால் சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவ தொழிலே ஜாதகனுக்கு அமையும்.
சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் வலுவான கிரகத்தின் காரகத்துவ தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவ தொழில் உப தொழிலாக அமையலாம்.
அதாவது 10 ம் இடம் , 10ம்அதிபதி 10ம் அதிபதி நின்ற சாரநாதன், 10ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10 க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10 ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கும்.
ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில் அனுகூலம் உண்டு. சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே தொழில் மூலம் உயர்ந்த நிலையை அடைய இயலும். சனி பலம் பெற்றவர்கள் அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் இணைந்து பயன்படுத்துபவர்கள். முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வருமானமும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் கிடைக்கும். சனி பலம் குறைந்தால் நீசத் தொழில் அல்லது தொழில் வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மையும், நோய் நொடியும் கஷ்ட ஜீவனமும் நிரம்பி இருக்கும்.
சனி கெடுப்பின் யார் கொடுப்பார், சனி கொடுப்பின் யார் கெடுப்பார்”
சனியை போன்று கொடுப்பவரும் இல்லை. சனியை போன்று கெடுப்பவரும் இல்லை என்பது நன்றாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
சந்திரன்
ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.
லக்னம்
ஜாதகரை குறிக்கும் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு யோகமும் லக்னம், லக்ன அதிபதியோடு சம்பந்தப்படும் போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தை தரும். லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகனது உயர்வு இருக்கும். அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நபராக இருப்பார் .
உளவியல் ரீதியாக எந்த முயற்சியுமின்றி, கடினமாக உழைக்காமல் எளிய உழைப்பில் அதிக பணம் பெறுவதையே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் புதனின் மதி நுட்பமும் சனியின் கடின உழைப்பும் இருக்கும் நபர்களே தொழிலில் நிலைத்து நின்று வெற்றி வாகை சூடுவார்கள், தடைபடாத நிரந்தர மற்றும் நிறைந்த வருமானம் இருக்கும் என்பதே மற்றும் உலகியல் உண்மை. பொதுவாக புதன் மற்றும் சனி பலம் குறைந்தால் புத்தி சாதுர்யமின்றி சம்பாதிக்க தெரியாமல் இருப்பார்கள். கோழையாய் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பார்கள் குடும்பத்தில் தரித்திரியம் பிடிக்கும். தொழிலில் நிரந்தரமற்ற தன்மைகளை நீக்க புதன் மற்றும் சனி பகவானை வழிபட வேண்டும்.
எனவே புதனை வலிமைப்படுத்த விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்.
வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அவல், பொறி, பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
சனி பலம் குறைந்தவர்கள் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்ய வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தால்ஹோமம் செய்து வழிபடலாம்.






