என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் வீடு கட்ட ரூ.5 லட்சம் அரசு நிதி உதவி: 22,500 பேர் பயனடைகிறார்கள்
- வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு 2003-ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வந்தது.
மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, செயல்படுத்தியது. தொடர்ந்து மத்திய அரசு, பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்-2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய திட்டத்தையும் புதுச்சேரி அரசு காமராஜர் வீடு கட்டும் திட்டத்துடன் ஒன்றிணைத்தது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியை உயர்த்தி அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 மூலம் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.2.25 லட்சத்துடன், புதுச்சேரி மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2.75 லட்சமும் சேர்த்து பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள வீடற்ற பயனாளிகள், தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை இணையதளமான www.tcpd.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய அரசின் இணையதளமான https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/Auth/Login.aspx மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்த்தப்பட்ட வீடு கட்டும் நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்.






