என் மலர்
புதுச்சேரி

வருகிற 3-ந் தேதி முதல் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
- காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.
அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.






