என் மலர்tooltip icon

    இந்தியா

    உலக கோப்பையை வென்ற மகளிர் அணி.. பிரதமர் மோடி புகழாரம்
    X

    உலக கோப்பையை வென்ற மகளிர் அணி.. பிரதமர் மோடி புகழாரம்

    • தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார்.
    • இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு அபார திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் அமைந்தது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு அபார திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் அமைந்தது.

    இந்தப் போட்டித் தொடர் முழுவதும் அணி சிறப்பான குழு செயல்பாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியது.

    நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி, வருங்கால சந்ததியினர் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுத்து சாம்பியன்களாக ஊக்கமளிக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், "உலக சாம்பியன் ஆன இந்திய அணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ நமது அணி வென்றுள்ள இந்தத் தருணம், தேசத்திற்கே ஒரு மணிமகுடம் சூட்டியது போல, இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியுள்ளது.

    உங்களின் அசாத்தியமான திறமைகள், கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×