என் மலர்tooltip icon

    இந்தியா

    மந்திரியின் முன்னிலையில் கணவரின் கன்னத்தில் அறைந்த பெண்
    X

    மந்திரியின் முன்னிலையில் கணவரின் கன்னத்தில் அறைந்த பெண்

    • அங்கிருந்தவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
    • போலீசார் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா மதினஹள்ளி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த கூட்டுறவு வங்கிக்கான தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் பி.கே.பி.எஸ்.(முதன்மை வேளாண் கடன் சங்கம்) ஒருவர் போட்டியிட்டார். இதற்காக அந்த சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டமும் நடத்தி இருந்தனர்.

    இந்த சங்கத்தைச் சேர்ந்த மாருதி என்பவர், கடந்த ஒரு வாரமாக மாயமாகி இருந்தார். இந்த நிலையில் திடீரென ஆலோசனை கூட்டத்துக்கு வந்து அவர் கலந்து கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியும் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் மாயமாகி இருந்த மாருதி என்பவரின் மனைவி அங்கு வந்தார். கணவரை காணாததால் ஒரு வாரமாக அவரை தேடி அலைந்த நிலையில், திடீரென கூட்டத்திற்கு வந்து அவர் பங்கேற்றதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த பெண், தனது கணவரின் சட்டையைப்பிடித்து இழுத்தார்.

    மேலும் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் முன்பு வைத்தே தனது கணவர் மாருதியின் கன்னத்தில் அவர் சரமாரியாக அறைந்தார். அதைப்பார்த்து மந்திரி சதீஸ் ஜார்கிகோளி திக்குமுக்காடி போனார். மேலும் செய்வதறியாது திகைத்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தி, மந்திரி சதீஸ் ஜார்கிகோளியிடம் சவால் விட்டார். தனது அரசியல் வாழ்க்கை மீண்டும் எந்த நொடியில் இருந்தும் தொடங்கும் என்றும், அதற்கு இந்த சம்பவமே சாட்சி என்றும் கூறினார். மேலும் அவர் அங்கிருந்த போலீசார் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து மந்திரி சதீஸ் ஜார்கிகோளி தனது ஆதரவாளர்களுடன் கூட்டுறவு வங்கிக்குள் சென்றார்.

    இதற்கு முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது போலீசார் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அவர்களை கலைத்தனர்.

    இந்த நிலையில் மாருதியை சிலர் கடத்திச் சென்று இருந்ததாகவும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெலகாவியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×