என் மலர்
இந்தியா

பா.ஜ.க. புதிய தலைவர் யார்?- பீகார் தேர்தலுக்கு முன்பு அறிவிக்க தீவிரம்
- பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரது பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது.
இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனவே அவருக்கு பதில் புதிய பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வருகிறது.
புதிய பா.ஜ.க. தலைவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும் என்று அந்த இயக்கம் விரும்புகிறது. அதன் மூலம் நாடு முழுவதும் பா.ஜ.க.வை மேலும் பலப்படுத்த முடியும் என்று அந்த இயக்கம் வலியுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஆனால் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை புதிய தேசிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதை பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித் ஷாவும் ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவர்கள் இருவரும் முன்னாள் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தர்மேந்திர பிரதான் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் வல்லவராக உள்ளார். முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு அவர் வகுத்து கொடுத்த வியூகங்கள்தான் உறுதுணையாக இருந்தன.
எனவே அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக இருந்தால் நாடு முழுவதும் பா.ஜ.க. வெற்றிக்கு கை கொடுப்பவராக இருப்பார் என்று பிரதமர் மோடி கருதுகிறார். ஆனால் இதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்த நிலையில் பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கவர்னர் பதவிகள் காலியாக உள்ளன. அந்த பதவிகளுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பலர் போட்டியில் இறங்கி உள்ளனர்.
எனவே அதிருப்தியில் இருப்பவர்களை கவர்னர்களாக மாற்றி விட்டு பா.ஜ.க. புதிய தேசிய தலைவர் தேர்தலில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக பா.ஜ.க. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித் ஷாவும் தீவிர மாக உள்ளனர். எனவே விரைவில் பா.ஜ.க. புதிய தலைவர் யார்? என்பது தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






