என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் இன்று முதல் மாற்றம்
- கூட்ட நெரிசலை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை தற்போது செயல்படுத்தியுள்ளது.
- பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தரிசன நடைமுறையில் இன்று முதல் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வி.ஐ.பி. தரிசனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்கள் 2½ மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் மாற்றம் செய்து பரீட்சார்ந்த முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
நீதிபதிகள், மந்திரிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் வி.ஐ.பி.களுக்கு அதிகாலை 5.45 மணியும், எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு காலை 6.30 மணியும், ஜெனரல் பிரேக் தரிசனத்துக்கு 6.45 மணியும், ஸ்ரீவாணி தரிசனத்திற்கு (ரூ.10 ஆயிரம் கட்டணம்) 10.15 மணியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல நன்கொடையாளர்கள் காலை 10.30 மணியும், திருமலை திருப்பதி தேவஸ்தான ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு காலை 11 மணியும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.பி. சிறப்பு தரிசனத்திற்காக பெறப்படும் பரிந்துரை கடிதங்கள் இன்று முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை தற்போது செயல்படுத்தியுள்ளது.