search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்
    X

    பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய "எலி வளை" தொழிலாளர்கள்

    • டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ அழைத்துவரப்பட்டனர்.
    • ‘எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன’.

    உத்தர்காசி:

    நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம்.

    சில அடிகள் முதல் பல அடிகள் வரை நீளும் இந்த குறுகிய, ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் 'எலி வளை சுரங்கங்கள்' என்றும், அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் 'எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    இது சட்டத்தை மீறிய செயல் என்பதால், பிடிபட்டால் சிறை நிச்சயம். அத்துடன் சமயங்களில் இந்த எலி வளை சுரங்கங்களில் திடீரென தண்ணீர் புகுவது, இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும்.

    ஆனால் இந்த 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதிக்கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

    இந்தப் பணியை மேற்கொள்ள இவர்கள்தான் சரியானவர்கள் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுகா என்ஜினீயரிங் நிறுவனம் முடிவு செய்தது.

    அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' அழைத்துவரப்பட்டனர். அவர்கள் குழாய்களுக்கு சென்று, 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்திவிட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததையும் விடவும் மிகவும் குறைவான நேரம் ஆகும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி, சிறிய கருவிகள் போன்ற எளிய சாதனங்கள்தான்.

    'எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன' என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்னைன் பாராட்டு தெரிவித்தார்.

    ஆக, சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் 'ஹீரோக்கள்' ஆகிவிட்டனர்.

    Next Story
    ×