என் மலர்
இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மோரியா மக்பூல் மற்றும் அப்ரார் (எ)ஜாலீம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டக்கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் அப்ரார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் ஆவான்.
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக இருந்த சஞ்சய் சர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய அப்ராரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று அவன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.






