என் மலர்
இந்தியா

ஒடிசாவில் மற்றொரு சம்பவம்: எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. கோச்சில் திடீரென கசிந்த புகை.. பயணிகள் பீதி
- பிரம்மபூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
- ஒடிசா ரெயில் விபத்து மனித தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது.
இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒடிசாவில் சென்றுகொண்டிருந்த செகந்திராபாத்- அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். புகை வந்தது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரம்மபூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறிய அளவில் மின்னணு சாதன பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதையடுத்து புகை வெளியேறுவது நின்றது. எனினும், தொடர்ந்து அந்த பெட்டியில் பயணிக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






