என் மலர்
இந்தியா

திருப்பதி கோவில் வாசலில் பிரதான உண்டியல் கீழே சாய்ந்தது- காணிக்கைகள் சிதறியதால் பரபரப்பு
- திருப்பதி கோவில் வாசலில் திடீரென டிராலியுடன் உண்டியல் அண்டா கீழே சாய்ந்தது.
- கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காகச் சென்ற பக்தர்கள் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரதான உண்டியலில் நேற்று காலை காணிக்கைகள் நிரம்பியதும், புதிய பரகாமணி மண்டபத்துக்கு கொண்டு சென்று எண்ணுவதற்காக உண்டியலை சீல் வைத்து தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் உண்டியல் அண்டாவை டிராலியில் வைத்து கோவிலுக்கு வெளியே கொண்டு வந்தனர். கோவில் வாசலில் திடீரென டிராலியுடன் உண்டியல் அண்டா கீழே சாய்ந்தது. அதில் இருந்த நகை, பணம், சில்லறை நாணயங்கள் சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த ஒப்பந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காகச் சென்ற பக்தர்கள் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்.
அங்கிருந்த தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து காணிக்களை சேகரித்து, உண்டியல் அண்டாவில் போட்டு மீண்டும் சீல் வைத்து, பத்திரமாக லாரியில் ஏற்றி புதிய பரகாமணி மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர்.
டிராலியில் ஏற்றி வந்த உண்டியல் அண்டா கோவில் வாசலில் கீழே விழுந்ததற்கு ஒப்பந்த ஊழியர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே காரணம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.






