search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தில் இருந்து நவீன எந்திரம் வாங்க முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தில் இருந்து நவீன எந்திரம் வாங்க முடிவு

    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார இறுதி விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது.50 ரூபாய் விலையில் எத்தனை லட்டுக்கள் வேண்டும் என்றாலும் பக்தர்கள் பெற்று செல்லலாம். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்லும்போது தனது உறவினர்கள் நண்பர்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்குவதற்காக கூடுதலாக லட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 4 லட்சம் லட்டுக்களும், பெரிய அளவிலான கல்யாண உற்சவ லட்டுக்கள் 2 ஆயிரமும், 15 ஆயிரம் வடைகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்காக 80 தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் 616 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்தாலும் 4 லட்சம் லட்டுகள் மட்டுமே தயார் செய்யப்படுகிறது.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    லட்டு தட்டுப்பாட்டை போக்க ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தில் இருந்து பூந்தி தயாரிக்கும் எந்திரங்களை வாங்க தேவஸ்தானம் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எந்திரங்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் தயாரிக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்களில் முந்திரி, பச்சை கற்பூரம், ஏலக்காய், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

    லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ஆர்ஜித சேவை மற்றும் அறை வாடகை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரம் கோடி வருவாயாக கிடைக்கிறது. கூடுதல் லட்டு விற்பனை மூலம் மேலும் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரசாத லட்டுக்களை தேவஸ்தான ஊழியர்களை கொண்டு மட்டுமே தயார் செய்ய வேண்டும். எந்திரங்களை கொண்டு தயார் செய்யக்கூடாது என ஜீயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×