search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் பி.டி.உஷா பேச்சு
    X

    ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் பி.டி.உஷா பேச்சு

    • விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம் என்றார் பி.டி.உஷா
    • அனைத்து போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட தடகள நட்சத்திரம் பி.டி.உஷா, இன்று முதல் முறையாக மாநிலங்களவையில் உரையாற்றினார். தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது. மாவட்டங்கள் தோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி பெறும் மையங்கள் கிடைக்கப்பெறுகின்றன. விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம்.

    ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்களது எதிர்காலத்தை பாழாக்குவது மட்டுமின்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழாக்குகின்றனர்.

    அனைத்து விளையாட்டு போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும். மேலும் காயங்களிலிருந்து வீரர்கள் மீண்டு வர விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெராய்டுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எதிராக தகுந்த தடை விதிக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (NADA)செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும். தடையின்றி செயல்பட சுதந்திரம் அளிக்க வேண்டும். இவ்வாறு பி.டி.உஷா பேசினார்.

    Next Story
    ×